×

சாலையில் தனியாக நடந்து சென்ற சிறுவனை துரத்திய தெருநாய் கூட்டம்

*நகராட்சி நடவடிக்கையால் நிம்மதி

கூடலூர் : கூடலூரை அடுத்த முதல் மைல் பகுதியில் காலை நேரத்தில் சிறுவனை துரத்திய தெரு நாய்களால் பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில் 15 தெருநாய்கள் உடனடியாக பிடிக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டதால் அப்பகுதி மக்கள் நிம்மதி அடைந்தனர். கூடலூர் நகரம் மற்றும் சுற்றுவட்ட பகுதிகளில் ஆங்காங்கே தெருநாய்கள் கூட்டம் கூட்டமாக சுற்றித் திரிகின்றன.

காலை மாலை, மற்றும் இரவு நேரங்களில் தனியாக வருபவர்களை துரத்தும் இந்த நாய்களால் பொதுமக்கள் அச்சமடைந்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று காலை நேரத்தில் முதல் மைல் பகுதியில் தனியாக நடந்த சென்ற சிறுவனை சாலை ஓரத்தில் படுத்திருந்த தெருநாய் கூட்டம் திடீரென துரத்த துவங்கியது.

அந்த சாலையில் வாகன போக்குவரத்து இருந்த நிலையில் அப்பகுதியில் நின்றிருந்த சிலர் திடீரென சாலைக்கு வந்து நாய்களை விரட்டியதால் நாய்கள் திரும்பிச்சென்றன. இதனால் சிறுவன் ஆபத்து ஏதுமின்றி தப்பினான்.

இந்த காட்சிகள் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகி வைரலானது. இதுபோன்ற சம்பவங்களால் தனியாக நடந்து செல்பவர்கள் தெருநாய்கள் இருக்கும் பகுதிகளில் மிகவும் கவனத்துடன் செல்ல வேண்டியதாக உள்ளது. சாலைகளில் கூட்டமாக தெரியும் தெரு நாய்களால் எப்போது வேண்டுமானாலும் யாருக்கும் ஆபத்து ஏற்படலாம்.

நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கூட்டம் கூட்டமாக திரியும் தெரு நாய்களை கட்டுப்படுத்த நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் தரப்பில் தொடர்ந்து கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில் நேற்று முன்தினம் தெரு நாய்கள் சிறுவனை துரத்திய சம்பவத்தை தொடர்ந்து நேற்று காலையில் கூடலூர் நகராட்சி நிர்வாகம் ஏற்பாட்டில் மசினகுடியை அடுத்த மாவநல்லா பகுதியில் இயங்கி வரும் ஜப்பான் தொண்டு அமைப்பை சேர்ந்த ஊழியர்கள் முதல் மைல் பகுதியில் சுற்றித்திரிந்த 15 தெரு நாய்களை பிடித்து சென்றனர். இதைத்தொடர்ந்து, கூடலூர் நகர சுற்றுவட்டார பகுதிகளில் சுற்றி தெரியும் தெரு நாய்களை பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக நகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

The post சாலையில் தனியாக நடந்து சென்ற சிறுவனை துரத்திய தெருநாய் கூட்டம் appeared first on Dinakaran.

Tags : Kudalur ,Dinakaran ,
× RELATED சென்னை முழுவதும் சீரான குடிநீர்...