தாம்பரம்: குரோம்பேட்டை, சந்திரன் நகரில் 30 வயதுடைய டாக்டர் ஒருவர் மனைவியுடன் வாடகை வீட்டில் வசித்து வருகிறார். இவர் கடந்த 2017ம் ஆண்டில் உக்ரைன் நாட்டில் மருத்துவ படிப்பு முடித்து விட்டு குரோம்பேட்டையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில், கிண்டர் செயலி மூலம், கடந்த 6ம் தேதி இவரிடம் சாட்டிங் செய்த ஒருவர், நேரில் சந்திக்க வேண்டும் என கூறி, 8ம் தேதி டாக்டரின் வீட்டிற்கு வந்துள்ளார். பின்னர், டாக்டரை பைக்கில் அழைத்துச் சென்று, ஒரு இடத்தில் அடைத்து வைத்து, அங்கு தனது நண்பரை வரவைத்து இருவரும் சேர்ந்து டாக்டரை மிரட்டியுள்ளனர்.
நாங்கள் இருவரும் போதை தடுப்பு சிறப்பு காவலர்கள், நீங்கள் போதைப்பொருள் பயன்படுத்துவதோடு, அதை விற்பனை செய்வதாக ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதனால், உங்களை கைது செய்யப்போகிறோம் என்று மிரட்டியுள்ளனர். மேலும் ரூ.1 லட்சம் கொடுத்தால் கைது செய்யமாட்டோம் என்றும் மிரட்டியுள்ளனர். பதறிப்போன டாக்டர் தன்னிடம் அவ்வளவு பணம் இல்லை என கூறியுள்ளார். இதையடுத்து மர்ம நபர்கள் ஜிபே மூலம் ரூ.30 ஆயிரத்தை பறித்துக்கொண்டு மீதி பணத்தை அடுத்த வாரம் தரவேண்டும் என்று மிரட்டிவிட்டு சென்றுள்ளனர். பயந்துபோன டாக்டர் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்துள்ளார். தொடர்ந்து குரோம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அப்புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
The post டாக்டரிடம் ரூ.30 ஆயிரம் பறிப்பு appeared first on Dinakaran.