×

பிஎஸ்என்எல் நிறுவன இடங்களை ஒன்றிய அரசு விற்பனை: ஏல அறிவிப்பை வெளியிட்டது: போராட்டம் நடத்த ஊழியர்கள் முடிவு

கோவை: நாட்டில் உள்ள பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்க ஒன்றிய அரசு முயற்சித்து வருகிறது. இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இதையடுத்து நிலைமையை சரி செய்யும் வகையில் பொதுத்துறை நிறுவனங்களுக்கு சொந்தமான அசையா சொத்துக்களை விற்று நஷ்டத்தை ஈடுகட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக பொதுத்துறை தொலைத் தொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல் நிறுவனத்துக்கு சொந்தமான பயன்படுத்தப்படாமல் உள்ள காலி நிலங்களை விற்க கடந்த ஆண்டு தீர்மானிக்கப்பட்டது.

இதற்கான ஒப்புதலை ஒன்றிய அரசு வழங்கியது. இதையடுத்து, எந்தெந்த நிலங்களை விற்கலாம் என தேர்வு செய்து, சம்மந்தப்பட்ட தொலைத் தொடர்பு வட்டங்களுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டது. இந்நிலையில், நாடு முழுவதும் பிஎஸ்என்எல் நிறுவனத்துக்கு சொந்தமாக உள்ள நிலங்கள் மற்றும் கட்டிடங்களை மதிப்பீடு செய்ய 67 மதிப்பீட்டாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்பட்டது. இக்குழுவில் தமிழகத்தை சேர்ந்த 17 பேர் இடம் பெற்றுள்ளனர். இந்த மதிப்பீட்டுக்குழு அந்தந்த பகுதிகளில் உள்ள நிலங்களை விற்பனை செய்வதற்கான மதிப்பீடுகளை தயார் செய்து அறிக்கை வழங்கியது.

இந்நிலையில், தமிழ்நாட்டில் 4 மண்டலங்களில் பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு சொந்தமான நிலங்கள் விற்பதற்கான ஏல அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி கோவை மண்டலத்திற்குட்பட்ட மேட்டுப்பாளையம், உடுமலைப்பேட்டை, சூலூர் மற்றும் கடலூர், புதுச்சேரி ஆகிய பகுதிகளில் உள்ள நிலங்கள் விற்பனை செய்வதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் உள்ள பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு சொந்தமான மைக்ரோவே வளாகத்தில் 2,929 சதுர மீட்டர் நிலம், சூலூரில் திருச்சி சாலையில் உள்ள பிஎஸ்என்எல் நிறுவனத்திறகு சொந்தமான தொலைபேசி நிலையம் மற்றும் பணியாளர் குடியிருப்பு என 1,990 சதுர மீட்டர் நிலம் மற்றும் திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை பழனிசாலையில் உள்ள பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு சொந்தமான தொலைபேசி நிலைய நிலம் மற்றும் பணியாளர் குடியிருப்பிற்கு இடையில் உள்ள 4,267 சதுர மீட்டர் நிலம் ஆகியவை விற்பனை செய்யப்பட உள்ளது. இதற்கான ஏலம் மின்னணு முறையில் நடைபெற உள்ளதாக பிஎஸ்என்எல் நிர்வாகம் அறிவித்துள்ளது.

இதற்கான ஆன்லைன் ஏலம் நடைமுறைகள் எம்எஸ்டிசி நிறுவனத்தின் இணையதளம் வாயிலாக இம்மாதம் 17ம்தேதி மாலை 3 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். ஏலத்தில் பங்கேற்க விருப்பமுள்ளவர்கள் நிலங்களின் தகுதி மற்றும் இதர விவரங்களுக்கு https://www.mstcecommerce.com/auctionhome/propertysale/index.jsp இணைய தளங்களில் பார்வையிடலாம். மேலும் நிர்ணயிக்கப்பட்டுள்ள ஆதார விலை மற்றும் ஏல ஆவணங்களை பிஎஸ்என்எல் நிறுவனத்தின் https://assetmonetization.bsnl.co.in/auction_property.php என்ற இணைய தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. இது பிஎஸ்என்எல் ஊழியர்களை மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒன்றிய அரசின் இந்த நடவடிக்கையை கண்டித்து போராட்டம் நடத்தப் போவதாக பிஎஸ்என்எல் ஊழியர்கள் சங்க நிர்வாகிகள் அறிவித்துள்ளனர்.

The post பிஎஸ்என்எல் நிறுவன இடங்களை ஒன்றிய அரசு விற்பனை: ஏல அறிவிப்பை வெளியிட்டது: போராட்டம் நடத்த ஊழியர்கள் முடிவு appeared first on Dinakaran.

Tags : Union Govt ,BSNL ,Coimbatore ,Union government ,
× RELATED பிஎஸ்என்எல் சங்க மாநாட்டிற்கு திருப்பூரில் இருந்து தேசியக்கொடி