×

ஒன்றிய அரசின் நிதி தொகுப்பில் கிடைத்தது 4.07% தான் ஒட்டுமொத்த நிதி நிர்வாகத்தில் தமிழக வரி வருவாய் உயர்கிறது: அமைச்சர் தங்கம் தென்னரசு பதில்

சென்னை: ஒன்றிய அரசின் நிதி தொகுப்பில் தமிழகத்துக்கு கிடைத்தது 4.07 சதவீதம் தான். ஆனாலும் ஒட்டுமொத்த நிதி நிர்வாகத்தில் தமிழகத்தின் வரி வருவாய் உயர்ந்து கொண்டிருக்கிறது என்று அமைச்சர் தங்கம் தென்னரசு கூறினார். தமிழக சட்டசபையில் நேற்று 2024-25ம் ஆண்டுக்கான துணை பட்ஜெட் மீதான விவாதத்தில் பங்கேற்று 6 உறுப்பினர்கள் பேசினார்கள். நிறைவாக, நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு பதில் அளித்து பேசியதாவது:

இங்கே பேசிய அதிமுக உறுப்பினர் தங்கமணி, நம்முடைய வரி பங்கீடு, முறையை குறிப்பிட்டு, ஒன்றிய நிதியமைச்சர் தெரிவித்ததை கூறினார். ஜி.எஸ்.டி. வரி விதிப்பு முறையை பொறுத்தமட்டில் மாநில ஜி.எஸ்.டி.யில் நமக்கு 50 %, மத்திய ஜி.எஸ்.டி.யில் 50 %, ஒருங்கிணைந்த ஜி.எஸ்.டி.யில் அதைபோல 2 மாநில அரசுக்கும், ஒன்றிய அரசுக்கும் 50 சதவீதமாக இருக்கக்கூடிய ஒன்று.

மாநில ஜி.எஸ்.டி.யை பொறுத்தமட்டில் மொத்தமாக அந்த நிதி மாநில அரசிற்கு அவ்வப்போது விடுவிக்கப்படுகிறது. ஒன்றிய ஜி.எஸ்.டி.யை பொறுத்தமட்டில் ஒன்றிய அரசுக்கு சேரக்கூடிய நிதி பகிர்ந்து அளிக்கப்படக்கூடிய நிதியில் இருந்து பகிர்வு 41% அனைத்து மாநிலங்களுக்குமே அது வழங்கப்படக்கூடியதாக இருக்கிறது. குறிப்பாக 15வது நிதிக்குழு ஒன்றிய அரசினுடைய தொகுப்பில் இருந்து 41 சதவீதம் மாநில அரசுகளுக்கு வழங்கவேண்டும் என்று பரிந்துரைத்து இருக்கிறது. இருப்பினும் 41 சதவீதம் நமக்கு கிடைத்து இருக்கிறதா, என்றால் அது இல்லை. அது 33% என்ற அளவிலே இருந்து இருக்கிறது. அந்த 33 சதவீதத்தில் தமிழ்நாட்டிற்கு கிடைத்திருப்பது வெறும் 4.07% தான்.

அதேநேரத்தில் உத்தரபிரதேசத்திற்கு 17.9 சதவீதமும், பீகாருக்கு 10 சதவீதமும் அது கிடைத்து இருக்கிறது. அதேபோல, ஒன்றிய அரசின் மொத்த வரி வருவாயில் 16.83 சதவீதம் என்ற அளவில் வசூலிக்கக்கூடிய மேல் வரி மற்றும் கூடுதல் கட்டணம் மாநில அரசுகளுக்கு பகிர்ந்து அளிக்கப்படாத ஒரு நிலை இருக்கிறது. எனவேதான் முதல்வர் அண்மையிலே வந்த 16வது நிதிக்குழுவிடம் அழுத்தம் திருத்தமாக எடுத்து வைத்திருக்கிறார்.

ஒன்றிய அரசில் இருந்து பகிர்ந்து அளிக்கக்கூடிய அந்த நிதியில் இருந்து குறைந்தபட்சமாக 50% மாநிலங்களுக்கு வழங்கவேண்டும் என்று எடுத்து வைத்து இருக்கிறார். அதேபோல, மேல்வரி மற்றும் கூடுதல் கட்டணங்களுக்கு ஒரு உச்சவரம்பு வரவேண்டும். 10 சதவீதத்திற்கு மட்டும் அவர்கள் வசூலிக்கக்கூடிய ஒரு செயல்முறையை கொண்டு வரவேண்டும். அதற்கு மேலாக அவர்கள் வசூலித்தால் நிச்சயமாக அந்த கூடுதல் தொகை பகிர்ந்தளிக்கக்கூடிய தொகுப்பில் நிதி பகிர்வில் கொண்டு வரவேண்டும் என்றும் தெரிவித்து இருக்கிறார்.

எனவே, இதுதான் அதில் இருக்கக்கூடிய ஒரு முக்கியமாக ஒன்று. அதேபோல அவர் பேசுகின்றபோது, அந்த கடன் அமைப்பைப்பற்றி குறிப்பிட்டு சொன்னார். நமக்கு 9வது நிதிக்குழுவில் இருந்து நீங்கள் பார்ப்பீர்கள் என்று சொன்னால் தொடர்ந்து, தமிழ்நாட்டிற்கு அநீதி இழைக்கப்படுகிறது. குறிப்பாக 14வது நிதிக் குழு காலத்தில், கடந்த காலங்களில் சுமார் 19 சதவீதம் நமக்கு நிதி குறைப்பு நடந்திருக்கிறது. இது சுமார் ரூ.2 லட்சத்து 63 ஆயிரம் கோடி இழப்பாக இருக்கிறது. நம்முடைய கடன் அளவில் 32 சதவீதம் இருக்கக்கூடியது. கடந்த கால நிதிக் குழுவினுடைய பரிந்துரைகள் தான் தமிழ்நாட்டிற்கு பெரிய பாதகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அந்த பாதகம் இல்லாவிட்டால் அது நிச்சயமாக வந்திருக்கும்.

ஒட்டுமொத்தமான நிதி நிர்வாகத்திலே நம்முடைய வரி வருவாய் உயர்ந்து கொண்டிருக்கிறது. நம்முடைய நிதி மேலாண்மையின் காரணமாக கடன் சுமைகளை நாம் குறைக்கக்கூடிய முயற்சிகளை எடுத்திருக்கிறோம். நிச்சயமாக முதல்வரின் வழிகாட்டுதலோடு வரக்கூடிய காலங்களில் நம்முடைய நிதி மேலாண்மை எல்லா வகையிலும் சிறப்பாக இருக்கும். இவ்வாறு அவர் பேசினார். தொடர்ந்து, கூடுதல் செலவினங்களுக்கான துணை பட்ஜெட் குரல் வாக்கெடுப்பின் மூலம் நிறைவேற்றப்பட்டது.

The post ஒன்றிய அரசின் நிதி தொகுப்பில் கிடைத்தது 4.07% தான் ஒட்டுமொத்த நிதி நிர்வாகத்தில் தமிழக வரி வருவாய் உயர்கிறது: அமைச்சர் தங்கம் தென்னரசு பதில் appeared first on Dinakaran.

Tags : union government ,Tamil Nadu ,Minister Thangam ,Southern State ,Chennai ,Minister ,Thangam Tennarasu ,Tamil Nadu Assembly ,Southern Government ,Dinakaran ,
× RELATED ஒன்றிய அரசை கண்டித்து தமிழகம்...