×

முக்கூருத்தி தேசிய பூங்காவில் வரையாடுக்கு ரேடியோ காலர் பொருத்தும் பணி நிறுத்தம்

ஊட்டி : முக்கூருத்தி தேசிய பூங்காவில் புராஜெக்ட் நீலகிரி தார் திட்டத்தின் கீழ் கண்காணிப்பு பணிக்காக ரேடியோ காலர் பொருத்தும் பணியின் போது வரையாடு உயிரிழந்த நிலையில், ரேடியோ காலர் பொருத்தும் பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

முக்கூருத்தி தேசிய பூங்காவில் அழியும் பட்டியலில் தமிழ்நாட்டின் மாநில விலங்கான நீலகிரி வரையாடுகள் கணிசமான அளவு உள்ளது. இதேபோல் ஆனைமலை புலிகள் காப்பகத்திலும் உள்ளது. நீலகிரி வரையாடுகளை பாதுகாப்பதற்காக தமிழ்நாடு அரசு சார்பில் புராஜெக்ட் நீலகிரி தார் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. கடந்த 2022ம் ஆண்டு துவக்கப்பட்ட இத்திட்டம் 2027ம் ஆண்டு வரை செயல்படுத்தப்படுகிறது.

இத்திட்டத்தின் மூலம் ஆண்டுக்கு இரு முறை வரையாடுகள் கணக்கெடுப்பு, வரையாடுகளின் வாழ்விடங்களை மீட்டெடுத்தல், அவற்றின் பழைமையான வாழ்விடங்களில் வரையாடுகளை மீண்டும் குடியமர்வு செய்தல், நோய் பாதிப்புள்ள வரையாடுகளில் மாதிரிகள் சேகரித்து அவற்றின் உடல் பாதிப்பு உள்ளதா என்பது குறித்து ஆய்வு தகவல்கள் சேமித்து வைக்கப்பட உள்ளது.

இதுதவிர ரேடியோ காலர் பொருத்தப்பட்டு அவற்றின் செயல்பாடுகள் கண்காணிக்கப்படுகிறது. இதற்காக முக்கூருத்தி தேசிய பூங்கா மற்றும் ஆனைமலை புலிகள் காப்பகத்தில் 12 வரையாடுகளுக்கு ரேடியோ காலர் பொருத்தி கண்காணிக்க திட்டமிடப்பட்டது.

இதற்கென உருவாக்கப்பட்ட வழிகாட்டி நெறிமுறைகளை பின்பற்றி முக்கூருத்தி தேசிய பூங்காவில் 4 வரையாடுகள் மயக்க மருந்து செலுத்தி பிடிக்கப்பட்டு இதில் 3 வரையாடுகளுக்கு வெற்றிகரமாக ரேடியோ காலர் பொருத்தப்பட்டது. இதில் கடந்த ஜூலையில் ரேடியோ காலர் பொருத்தப்பட்ட ஆண் வரையாடு, புலி தாக்கி உயிரிழந்தது.

மற்ற இரு வரையாடுகள் கண்காணிக்கப்பட்டு வருகின்றன. 4-வதாக கடந்த 6ம் தேதி ஒரு வரையாட்டுக்கு மயக்க மருந்து செலுத்தி ரேடியோ காலர் கருவி பொருத்தும் போது எதிர்பாராத விதமாக உயிரிழந்தது. இதனால் வரையாடுகளுக்கு ரேடியோ காலர் பொருத்தும் பணிகளை வனத்துறை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து நீலகிரி வரையாடுகள் திட்ட இயக்குநர் கணேசன் கூறுகையில், ‘‘முக்கூருத்தியில் 3 வரையாடுகளுக்கு வெற்றிகரமாக மயக்க மருந்து செலுத்தப்பட்டு ரேடியோ காலர் பொருத்தப்பட்டது. நோய் பாதிப்பு கண்டறியப்பட்ட ஒரு வரையாட்டிற்கும் மயக்க மருந்து செலுத்தி சிகிச்சை அளிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டது. நோய் பாதிப்பு ஒரு நோய்க்கு சிகிச்சை அளிக்கப்பட்டு, 4-வது வரையாட்டிற்கு ரேடியோ காலர் பொருத்துவதற்காக மயக்க மருந்து செலுத்தி கருவி பொருத்தும் சமயத்தில் உயிரிழந்து விட்டது.

முந்தைய நான்கு செயல்பாடுகளுக்கு பயன்படுத்தப்பட்ட அதே நெறிமுறைகளை பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்டது. வரையாடு உயிரிழப்பு காரணமாக ரேடியோ காலரிங் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. வரையாடுகளை பிடிக்க புதிய நிலையான இயக்க நடைமுறைகளை (எஸ்ஓபி) உருவாக்கப்பட திட்டமிடப்பட்டுள்ளது’’ என்றார்.

The post முக்கூருத்தி தேசிய பூங்காவில் வரையாடுக்கு ரேடியோ காலர் பொருத்தும் பணி நிறுத்தம் appeared first on Dinakaran.

Tags : Trinity National Park ,NEILAGIRI THAR ,TRICURUTHI NATIONAL PARK ,Trimuruti National Park ,
× RELATED காற்றழுத்த தாழ்வு மண்டலம், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழந்தது