×

இராஜாஜியின் 146-வது பிறந்த நாளன்று அமைச்சர்கள் அவரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை

சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் திராவிட மாடல் அரசின் சார்பில் மூதறிஞர் இராஜாஜியின் 146-வது பிறந்த நாளை முன்னிட்டு, அமைச்சர்கள், 10.12.2024 அன்று காலை 9.00 மணியளவில் சென்னை, பாரிமுனை, உயர்நீதிமன்ற வளாகத்தில் அமைந்துள்ள அவர் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தவுள்ளனர்.

மூதறிஞர் இராஜாஜி கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூருக்கு அருகிலுள்ள தொரப்பள்ளி கிராமத்தில் 10.12.1878 அன்று பிறந்தார். சட்டப் படிப்பை முடித்து வழக்கறிஞர் தொழில் புரிந்தார். பின் சேலம் நகராட்சித் தலைவராக விளங்கினார். அப்பொழுது ஊதியமே வாங்காமல், தம் மக்கள் பணியைத் தொடங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. அண்ணல் காந்தியடிகளின் ஒத்துழையாமை இயக்கத்தால் பெரிதும் ஈர்க்கப்பட்டு, தமிழ்நாட்டில் நடந்த உப்பு சத்தியாக்கிரகம் போராட்டத்தினை முன்னின்று நடத்தினார். இதனைத் தொடர்ந்து. 1937ஆம் ஆண்டு காங்கிரஸ் இயக்கத்தின் சார்பில் வெற்றிபெற்று அன்றைய மதராஸ் மாகாணத்தின் முதலமைச்சரானார். தம் வாழ்நாளின் இறுதிவரையில் மதச்சார்பின்மையைக் கடைப்பிடித்தார். தமிழ்நாடு முதலமைச்சர், இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரல், மேற்கு வங்க ஆளுநர், ஒன்றிய உள்துறை அமைச்சர் என நாட்டின் மிக உயர்ந்தபதவிகளை வகித்தார்.

மூதறிஞர் இராஜாஜி அவர்கள் தாம் முதலமைச்சராக விளங்கியபோது பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தினார். மதுவிலக்குத் திட்டத்தினைச் செயல்படுத்தி, அதனால், அரசுக்கு ஏற்படும் வருவாய் இழப்பினை ஈடு செய்கின்ற வகையில், இந்தியாவிலேயே முதன்முறையாக விற்பனை வரி வசூலிக்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தினார். ஒடுக்கப்பட்ட மக்களின் ஆலய நுழைவுக்கு உதவினார். விவசாயிகளின் கடன் சுமையைக் குறைத்திடும் சட்டம் கொண்டு வந்தார். தீண்டாமை ஒழிப்பில் தீவிர கவனம் செலுத்தினார். கலப்புத் திருமணத்தினைத் தம் இல்லத்திலேயே நடைமுறைப்படுத்தினார்.

முதிர்ந்த அரசியல் ஞானமும், ஆழ்ந்த அனுபவமும் கொண்டிருந்த மூதறிஞர் இராஜாஜி அவர்களின் நேர்மையும் எளிமையும் மக்களிடம் சிறப்பான வரவேற்பைப் பெற்றது. நாட்டின் மிக உயரிய பதவிகளை வகித்த போதிலும், மிகவும் எளிமையாக வாடகை வீட்டிலேயே அவரது இறுதி நாள்வரை வாழ்ந்தவர் அவர். இந்தியாவின் கவர்னர் ஜெனரலாகப் பொறுப்பேற்று, அரசு மாளிகையை விட்டு வெளியேறிய பொழுது, தமக்கு அளிக்கப்பட்ட பரிசுப் பொருள்கள் அனைத்தையும் முறையாக அரசிடம் ஒப்படைத்துவிட்டுத் தமது கைத்தடியுடன் வெளியேறினார்.

விடுதலைப் போராட்டத்திலும், அரசு நிர்வாகத்திலும் தமது அளப்பரிய பணிகளை ஆற்றிய போதிலும், இலக்கியத்தில் அவர் கொண்டிருந்த ஆர்வத்தின் காரணமாக அரிய பல நூல்களை ஆங்கிலத்திலும் தமிழிலும் எழுதியுள்ளார். மிகப்பெரிய காவியங்களான இராமாயணம் மற்றும் மகாபாரதத்தினைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் மொழி பெயர்த்துள்ளார். அவர் எழுதிய பல நூல்களில் ‘சக்கரவர்த்தித் திருமகன்’, ‘வியாசர் விருது’ ஆகிய நூல்கள் மிகவும் குறிப்பிடத்தக்கவை. ‘சக்கரவர்த்தித் திருமகன்’ என்ற நூலுக்காக அவர் 1958ஆம் ஆண்டு சாகித்ய அகாடமி விருது பெற்றார்.

மூதறிஞர் இராஜாஜி அவர்கள் 1954ஆம் ஆண்டு இந்தியத் திருநாட்டின் மிக உயரிய விருதான பாரத ரத்னா விருது வழங்கிச் சிறப்பிக்கப்பட்டார். கிருஷ்ணகிரி மாவட்டம் தொரப்பள்ளியில் அவர் வாழ்ந்த வீடு அரசின் சார்பில் நினைவில்லம் ஆக்கப்பட்டது. மூதறிஞர் இராஜாஜி அவர்கள் உப்புசத்தியாக் கிரகம் முதலான சுதந்திரப் போராட்டத்தில் பங்குபெற்று, பலமுறை சிறை சென்ற மகத்தான தியாகி என்பதால் அவருக்குச் சுதந்திரப் போராட்ட வெள்ளிவிழாவின்போது ஒன்றிய அரசு வழங்கிய தாமிரப் பட்டய விருதினை. முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் தாமே 3.10.1972 அன்று இராஜாஜி அவர்களின் இல்லம் சென்று அவருக்கு மலர்மாலை அணிவித்து வழங்கினார்.

மூதறிஞர் இராஜாஜி அவர்கள் 25.12.1972 அன்று மறைந்தார். அவருடைய நினைவாக 1973, டிசம்பர் 25 அன்று சிறப்பு அஞ்சல்தலை வெளியிடப்பட்டது. முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள் கிண்டி காந்திமண்டப வளாகத்தில், மூதறிஞர் இராஜாஜி அவர்களைப் போற்றும் வகையில் அவர் விரும்பும் அனுமன் கிரிடம் போலவே அவருடைய சிலையுடன் கூடிய நினைவாலயத்தை வடிவமைத்துக் கட்டி, விடுதலைப் போராட்ட தியாகி ஜெயபிரகாஷ் நாராயண் அவர்களைக் கொண்டு 5.5.1975 அன்று திறந்து வைத்தார்கள்.

மூதறிஞர் இராஜாஜி நூற்றாண்டு விழாவின்போது, சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் 24.12.1978 அன்று அவருக்குச் சிலை நிறுவித் திறந்து வைக்கப்பட்டது. அவரது நினைவைப் போற்றுகின்ற வகையில், தமிழ்நாடு அரசின் சார்பில் ஆண்டுதோறும் அவருடைய பிறந்த நாளான டிசம்பர் 10 ஆம் நாள் அரசு விழாவாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு டிசம்பர் 10ஆம் நாளன்று அமைச்சர் பெருமக்கள். சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் அமைந்துள்ள மூதறிஞர் இராஜாஜி திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்துகின்றனர். இந்நிகழ்ச்சியில் சென்னை மாநகர மேயர், நாடாளுமன்ற உறுப்பினர்கள், துணை மேயர், உள்ளாட்சிப் பிரநிதிகள், அரசு உயர் அலுவலர்கள் உள்ளிட்டோர் கலந்துகொள்கின்றனர்.

The post இராஜாஜியின் 146-வது பிறந்த நாளன்று அமைச்சர்கள் அவரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை appeared first on Dinakaran.

Tags : Rajaji ,Chennai ,Tamil Nadu ,Chief Minister ,M.K.Stalin ,Dravidian Model Government ,Mahatma Rajaji ,High Court Complex, Barimuna, Chennai ,
× RELATED நீதிபதிகள் குடியிருப்பில் மின்கட்டண...