×

கூகுள் எர்த் மென்பொருளுடன் இணைக்கப்பட்ட துல்லிய நில அளவை கருவி 2 இடங்களில் பொருத்தம்: இனிமேல் டேப், சங்கிலியுடன் நேரில் சென்று அளவிட அவசியம் இல்லை

சென்னை: நாட்டில் உள்ள அரசு மற்றும் தனியார் நிலங்களின் புல எண்கள், அளவீடுகள் போன்றவை அந்தந்த மாநில அரசின் வருவாய் துறை கட்டுப்பாட்டில் உள்ளன. ஒரு நிலத்திற்கான புல எண், அதற்கான பரப்பளவு, 4 பக்க சுற்றளவுகள் போன்றவற்றை வருவாய்த்துறை பராமரித்து வருகிறது. தனி நபர்கள் தங்களின் நிலங்களை விற்கும்போது புதியதாக வாங்கியவர் அதனை அளவீடு செய்ய வருவாய்த்துறையின் நில அளவீட்டுப் பிரிவையே நாடுகின்றனர். நில அளவீட்டுப் பிரிவினர் சம்பந்தப்பட்ட நிலங்களுக்கு சென்று ஆவணத்தில் உள்ள அளவீட்டின்படி இடம் உள்ளதா என அளவிட்டு சான்று செய்து வழங்குவர்.

இந்நிலையில், தமிழ்நாட்டில் வருவாய்த் துறை முழுமையான இணையதள வசதியுடன் மாற்றப்பட்டுள்ளது. பட்டா பெயர் மாற்றம், நில வகைப்பாடு மாற்றம் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் இணையத்திலேயே கிடைக்கிறது. இந்நிலையில், நில அளவீட்டுப்பணிக்கு அடுத்தகட்ட வளர்ச்சியாக டி.ஜி.பி.எஸ். எனப்படும் நவீன முறை அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. இதன்மூலம் இனி சங்கிலி, டேப் போன்றவற்றை கையில் எடுத்துக் கொண்டு ஆட்களை அழைத்துக் கொண்டு நிலங்களை அளக்க செல்ல தேவை இல்லை. இந்த முறையில் கூகுள் எர்த் மென்பொருள் மற்றும் தமிழ் நிலம் மென்பொருளுடன் இணைக்கப்படுவதால் ஆட்கள் இல்லாமலே கணிணி மூலம் அலுவலகத்தில் இருந்துக் கொண்டே நிலங்களை அளவீடு செய்து உட்பிரிவு செய்து பட்டா வழங்க பரிந்துரை செய்ய முடியும்.

இனி வருங் காலங்களில் நிலங்களை சர்வே செய்து சான்று செய்யும்போது க்யூ.ஆர்.கோவு, அட்சரேகை, தீர்க்கரேகை, நாள், நேரம், இடம் போன்ற அனைத்து குறிப்புகளும் இடம் பெறும். அதேபோன்று ஆறுகளின் அகலம், ஏரி மற்றும் குளங்களின் சுற்றளவு, ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள பகுதிகள் என அனைத்தையும் உட்கார்ந்த இடத்தில் இருந்தே செய்ய முடியும். இதற்காக கோர்ஸ் எனப்படும் புதிய கருவி தமிழ்நாட்டில் 75 இடங்களில் நிறுவப்பட்டு வருகிறது.  செங்கல்பட்டு மாவட்டத்தில் திருப்போரூர் மற்றும் செய்யூர் ஆகிய 2 இடங்களில் நிறுவப்பட்டுள்ளது. விரைவில் ஒவ்வொரு 30 கி.மீ. தூரத்திற்கு இந்த கருவியை நிறுவ தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது.

இந்த கருவி பொருத்தப்பட்டுள்ளதை நில அளவை மற்றும் நிலவரித் திட்ட இயக்குனர் மதுசூதன் ரெட்டி கடந்த வாரம் பார்வையிட்டு உறுதி செய்தார். தமிழ்நாட்டில் அனைத்து இடங்களிலும் இந்த கருவிகள் பொருத்தப்பட்டதும் இந்த செயல்பாடு நடைமுறைக்கு வரும். இந்த கருவிகளுக்கான மெயின் சர்வர் சென்னையில் வைக்கப்பட்டு பராமரிக்கப்பட உள்ளது.

The post கூகுள் எர்த் மென்பொருளுடன் இணைக்கப்பட்ட துல்லிய நில அளவை கருவி 2 இடங்களில் பொருத்தம்: இனிமேல் டேப், சங்கிலியுடன் நேரில் சென்று அளவிட அவசியம் இல்லை appeared first on Dinakaran.

Tags : CHENNAI ,Dinakaran ,
× RELATED காதலனை அடித்து விரட்டிவிட்டு மாணவியை...