×

2வது ஒரு நாள் மகளிர் போட்டி ஆஸி. அணி இமாலய சாதனை

பிரிஸ்பேன்: ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் சென்றுள்ள இந்திய மகளிர் கிரிக்கெட் அணி, 2வது ஒரு நாள் போட்டியில் 122 ரன் வித்தியாசத்தில் மோசமான தோல்வியை சந்தித்துள்ளது. இந்திய மகளிர் கிரிக்கெட் அணி ஹர்மன்பிரீத் கவுர் தலைமையில் ஆஸி சுற்றுப்பயணம் சென்றுள்ளது. அங்கு 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய மகளிர் அணி ஆடி வருகிறது. ஏற்கனவே முடிந்த முதல் போட்டியில் தோல்வியை தழுவிய இந்திய அணி, பிரிஸ்பேன் நகரில் நேற்று நடந்த 2வது ஒரு நாள் போட்டியில் ஆஸி அணியை எதிர்கொண்டது.

டாஸ் வென்ற ஆஸி அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. போட்டியின் துவக்கம் முதலே இந்திய பவுலர்களின் பந்துகளை ஆஸி வீராங்கனைகள் தெறிக்க விட்டனர். துவக்க வீராங்கனை போப் லிட்ச்பீல்ட் 63 பந்தில் 60 எடுத்து அவுட்டானார். மற்றொரு துவக்க வீராங்கனை ஜார்ஜியா வால் 87 பந்துகளில் 101, எலிஸ் பெர்ரி 75 பந்துகளில் 105 ரன் குவித்து தம் அணியை நிமிரச் செய்தனர். பெத் மூனி 44 பந்துகளில் 56 ரன் எடுத்தார். 50 ஓவர் முடிவில் அந்த அணி 8 விக்கெட் இழப்புக்கு 371 ரன் குவித்தது.

பின், 372 எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய வீராங்கனைகள் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். 44.5 ஓவரில் 249 ரன் மட்டுமே எடுத்த இந்திய அணி தோல்வியை தழுவியது. ஆஸி அணி 122 ரன் வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெற்றது. இந்திய அணியின் ரிச்சா கோஷ் 54 ரன் எடுத்தார். ஆட்ட நாயகியாக எல்லிஸ் பெர்ரி அறிவிக்கப்பட்டார். இந்த வெற்றியை அடுத்து 2-0 என்ற கணக்கில் ஆஸி அணி தொடரை கைப்பற்றி உள்ளது. கடைசி போட்டி 11ம் தேதி பெர்த் நகரில் நடக்கிறது.

The post 2வது ஒரு நாள் மகளிர் போட்டி ஆஸி. அணி இமாலய சாதனை appeared first on Dinakaran.

Tags : 2nd ,Women's Auss ,Brisbane ,women's cricket team ,Australia ,Harmanpreet Kaur ,Aussie ,Women's ODI ,Dinakaran ,
× RELATED இந்திய அணிக்கு 275 ரன்கள் இலக்கு