×

வருசநாடு அருகே வாலிப்பாறை பகுதியில் மூல வைகையில் அணை கட்ட வேண்டும்

வருசநாடு: வருசநாடு அருகே வாலிப்பாறை பகுதியில், மூல வைகையில் விரைவில் அணை கட்ட வேண்டும் என விவசாயிகளும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர். தேனி மாவட்டம், வருசநாடு அருகே, வாலிப்பாறை பகுதியில் 200க்கும் மேற்பட்ட மலைக்கிராமங்கள் உள்ளன. இப்பகுதியில் உள்ள பொதுமக்களின் குடிநீருக்கும், பாசனத்துக்கும் முக்கிய ஆதாரமாக மூல வைகை ஆறு திகழ்கிறது. இந்நிலையில், வாலிப்பாறை மலைக்கிராம பகுதியில் செல்லும் மூல வைகை ஆற்றில் அணை கட்டி, நிலத்தடி நீரை உயர்த்தினால் விவசாயத்துக்கும், பாசனத்துக்கும் பயன்படும். எனவே, இப்பகுதியில் அணை கட்ட வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இது தொடர்பாக கடந்த 1984ல் மூல வைகை அணை திட்டத்தை ஆய்வு செய்து, வாலிப்பாறை மலைப்பகுதிக்கு இடையே மலைக்கிராம பகுதிகளில் அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. அதன்பின் அந்த திட்டம் கிடப்பில் போடப்பட்டது. இதனால், மழை காலங்களில் ஆற்று நீர் வீணாவதாக கவலை தெரிவிக்கின்றனர். மேலும், கிணறு, ஆழ்துளை கிணறுகளில் நிலத்தடி நீர் உயர்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. சில ஆண்டுகளுக்கு முன், டெல்லி மற்றும் சென்னையில் இருந்து வந்த சிறப்புக் குழு, மூல வைகை ஆறு பகுதியில் ஆய்வு மேற்கொண்டது. விரைவில் மூல வைகை ஆற்றில் அணை கட்டப்படும் என தெரிவித்தனர். எனவே, வாலிப்பாறை பகுதியில் மூல வைகை ஆற்றில் புதிய அணை கட்ட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது குறித்து வருசநாடு பகுதி பொதுமக்கள் கூறுகையில், ‘கடமலை-மயிலை ஊராட்சி ஒன்றியத்தில் 18 ஊராட்சிகள் உள்ளன. இப்பகுதியில் கண்மாய்கள் அதிகளவில் உள்ளன. வாலிப்பாறை பகுதியில் மூல வைகை அணை கட்டி, தண்ணீரை தேக்கி, கண்மாய்களில் நிரப்பினால் குடிநீருக்கும், பாசனத்துக்கும் பயன்படும். இது குறித்து தேனி மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.

தும்மக்குண்டு கிராம பொதுமக்கள் கூறுகையில், ‘கடமலை-மயிலை ஒன்றியத்தில் மழை காலங்களில் மூல வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படுகிறது. மூல வைகை ஆற்றில் வாலிப்பாறை பகுதியில் அணை கட்டினால், கிராமப்பகுதியில் நிலத்தடி நீர் உயர்ந்து குடிநீருக்கும், பாசனத்துக்கும் பயன்படும். இது குறித்து மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர். இது குறித்து ஆண்டிபட்டி திமுக எம்எல்ஏ மகாராஜன் கேட்டபோது, ‘இது தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் பேசி, முறையாக பணிகள் நடக்கும். இந்த திட்டத்திற்கு திமுக அரசு துணை நிற்கும்’ என்றார்.

The post வருசநாடு அருகே வாலிப்பாறை பகுதியில் மூல வைகையில் அணை கட்ட வேண்டும் appeared first on Dinakaran.

Tags : Valipalara ,Varasanadu ,Valiparara ,Varasanadu, Theni district ,Waliparara ,Varasanad ,Dinakaran ,
× RELATED வருசநாடு அருகே காந்திகிராமத்தில்...