×

மகளின் பிரசவத்துக்காக உடனிருந்த நிலையில் அரசு மருத்துவமனை பிரசவ வார்டு கழிவறையில் தாய் தூக்கிட்டு தற்கொலை

கள்ளக்குறிச்சி, டிச. 8: கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் மகளின் பிரசவத்துக்காக உடனிருந்த தாயார் பிரசவ வார்டு கழிவறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகில் உள்ள கிளாப்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் கலியபெருமாள் மகள் ரோஜா (25). இவருக்கும், அதே கிராமத்தை சேர்ந்த செல்வமணி என்பவருக்கும் திருமணம் நடந்து, ரோஜா நிறைமாத கர்ப்பிணியாக உள்ளார். இந்நிலையில் கடந்த 5ம் தேதி ரோஜாவை அவரது தாய் கண்ணம்மாள் மற்றும் கணவர் செல்வமணி ஆகியோர் சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பிரசவத்துக்கு சேர்த்தனர்.

இந்நிலையில் அன்றைய தினமே ரோஜாவுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதையடுத்து ரோஜா மற்றும் அவரது குழந்தை ஆகிய 2 பேரும் பிரசவ வார்டு 3வது தளத்தில் தங்க வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அப்போது கண்ணம்மாள் அவர்களுடன் உதவிக்கு இருந்துள்ளார். இந்நிலையில் நேற்று இரவு தூங்கி கொண்டிருந்த ரோஜா திடீரென அதிகாலை சுமார் 4 மணியளவில் கண் விழித்து பார்த்தபோது தனது தாய் கண்ணம்மாளை காணவில்லை. இதையடுத்து அங்கிருந்த தனது கணவரிடம் இதுபற்றி தகவல் தெரிவித்துள்ளார். அதனை தொடர்ந்து செல்வமணி மருத்துவமனை வளாகம் முழுவதும் தேடியும் கிடைக்கவில்லை. பின்னர் அதே வார்டு பகுதியில் உள்ள கழிவறைக்கு சென்று தேடி பார்த்தபோது அங்கிருந்த கழிவறை வெகு நேரமாக திறக்கப்படாமல் இருந்தது தெரியவந்தது.

இதையடுத்து மருத்துவமனை ஊழியர்கள் உதவியுடன் ரோஜாவின் கணவர் கழிவறை கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது கண்ணம்மாள் தூக்குபோட்டு இறந்த நிலையில் கிடந்ததை கண்டதும் செல்மணி மற்றும் ஊழியர்கள் அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து தகவலறிந்ததும் கள்ளக்குறிச்சி உதவி ஆய்வாளர் விஜயராகவன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று முதல் கட்ட விசாரணை நடத்தினர். அதில் பிரசவ வார்டில் சிகிச்சை பெற்று வரும் ரோஜாவுடன் இருந்த அவரது தாய் கண்ணம்மாள் அதிகாலை கழிவறைக்கு சென்ற நிலையில் கதவை தாழ்ப்பாள் போட்டுவிட்டு அதே கதவில் உள்ள கைப்பிடியில் தனது தாலி கயிற்றை மாட்டி முட்டி போட்ட நிலையில் இறந்து கிடந்தது தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து கண்ணம்மாளின் கணவர் கலியபெருமாள் கள்ளக்குறிச்சி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிந்து கண்ணம்மாள் குடும்ப பிரச்னை காரணமாக தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர். கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனை பிரசவ வார்டில் சிகிச்சைக்கு வந்த பெண்ணின் தாய் கழிவறையில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

The post மகளின் பிரசவத்துக்காக உடனிருந்த நிலையில் அரசு மருத்துவமனை பிரசவ வார்டு கழிவறையில் தாய் தூக்கிட்டு தற்கொலை appeared first on Dinakaran.

Tags : government hospital ,Kallakurichi ,Kallakurichi Government Hospital ,Kalyaperumal ,Klappalayam village ,Ulundurpet ,Dinakaran ,
× RELATED பச்சிளம் குழந்தைகளுக்கு சிறப்பு...