×

தீபமலையில் இன்று வல்லுநர் குழு ஆய்வு கலெக்டரிடம் ஆலோசனை நடத்தினர் தொடர்ந்து மண்சரிவு ஏற்படுவதால் அச்சம்

திருவண்ணாமலை, டிச.8: திருவண்ணாமலையில் தீபமாலையில் ஏற்பட்டுள்ள மண்சரிவு குறித்து புவியியல் வல்லுநர்கள் இன்று நேரடி ஆய்வு நடத்த உள்ளனர். திருவண்ணாமலையில் பெய்த வரலாறு காணாத கனமழையின் காரணமாக தீபம் ஏற்றும் மலையில் பல்வேறு இடங்களில் மண் சரிவுகள் ஏற்பட்டுள்ளன. மேலும், அடுத்தடுத்து பல இடங்களில் மண் சரிவுகள் ஏற்பட்டு வருகின்றன. எனவே, வரும் 13ம் தேதி நடைபெறும் கார்த்திகை தீபத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான மகா தீபத்தன்று மலையேற பக்தர்களுக்கு அனுமதி அளிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. எனவே, மலை மீது பக்தர்களை அனுமதிப்பது தொடர்பாக வல்லுனர் குழு நேரடி ஆய்வு நடத்தி அளிக்கும் அறிக்கையின் அடிப்படையில் முடிவு எடுக்கப்படும் என அமைச்சர்கள் எ.வ.வேலு, பி.கே.சேகர்பாபு ஆகியோர் அறிவித்தனர்.

அதன்படி, சென்னை அண்ணா பல்கலைக்கழக புவியியல் துறை பேராசிரியர்கள் 8 பேர் கொண்ட வல்லுநர் குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவினர் நேற்று திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து கலெக்டர் பாஸ்கர பாண்டியன் சந்தித்து ஆலோசனை நடத்தினர். கூட்டத்தில் எஸ்பி சுதாகர், டிஆர்ஓ ராமபிரதீபன் உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். அப்போது, திருவண்ணாமலை தீபமலையில் ஏற்பட்டுள்ள மண் சரிவு தொடர்பாக இன்று காலை 7 மணி அளவில் வல்லுநர்குழு கள ஆய்வு நடத்தும் என கலெக்டர் தெரிவித்தார். இக்குழுவுடன் காவல்துறை சார்பாக பாதுகாப்பு பணிக்காக காவலர்கள் குழு மற்றும் பாம்புக்கடி மற்றும் விஷப்பூச்சி எதிர் மருந்து, ரத்த அழுத்தம் மற்றும் ஆக்ஸிஜன் கருவிகள், தூக்குப் படுக்கை உள்ளிட்டவை அடங்கிய மருத்துவர் தலைமையிலான மருத்துவக்குழுவும் உடன் அனுப்பி வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேலும், வனத்துறை குழு, தீயணைப்புத்துறை சார்பாக தேவையான பாதுகாப்பு உபகரணங்களுடன் 20 நபர்கள் கொண்ட மீட்புக்குழுவும் உடன் செல்கின்றனர். மலை அடிவாரத்தில் பாதுகாப்பு கருதி அவசரகால ஊர்தியுடன் கூடிய மருத்துவக்குழு பணியில் இருக்க கலெக்டர் அறிவுறுத்தினர். இந்த வல்லுநர் குழு இன்று மலைப்பகுதியில் ஆய்வு நடத்தி அங்குள்ள மண்ணின் தன்மை மற்றும் பாறைகளின் தன்மை குறித்து ஆய்வு நடத்த உள்ளனர். அதோடு, பக்தர்கள் மலையேறினால் மண்சரிவு மீண்டும் ஏற்பட்டு ஆபத்து ஏற்படுமா என்பது குறித்தும் தமது அறிக்கையில் தெரிவிக்க உள்ளனர். அதன் அடிப்படையில், பழைய பக்தர்களை அனுமதிப்பது தொடர்பான முக்கிய அறிவிப்பை இரண்டு நாட்களில் அரசு அறிவிப்பு வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

The post தீபமலையில் இன்று வல்லுநர் குழு ஆய்வு கலெக்டரிடம் ஆலோசனை நடத்தினர் தொடர்ந்து மண்சரிவு ஏற்படுவதால் அச்சம் appeared first on Dinakaran.

Tags : Deepamalai ,Thiruvannamalai ,Deepamala ,Tiruvannamalai ,Deepam Pantum Hill ,Dinakaran ,
× RELATED தீபமலை: புவியியல் ஆய்வாளர்கள் குழு நாளை ஆய்வு