சென்னை: கத்தோலிக்க திருச்சபைக்கு வழங்கப்பட்ட 5000 கோடி ரூபாய் மதிப்பிலான நிலங்கள் விற்பனை செய்யப்பட்டது குறித்து விசாரணை நடத்தி, அவற்றை மீட்கக் கோரிய மனுவுக்கு பதிலளிக்குமாறு தமிழக அரசு உள்ளிட்டோருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை சூளைமேட்டைச் சேர்ந்த எல்சியூஸ் பெர்னாண்டோ என்பவர் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த பொதுநல மனுவில், சென்னை பரங்கிமலை புனித தோமையார் தேவாலயத்துக்கு 1915ம் ஆண்டு 75 ஏக்கர் நிலம் மத சேவை இனாமாக வழங்கப்பட்டது. இனாம் நிலம் என்பதால் இதனை விற்க முடியாது. இருப்பினும் அதனை விற்றுள்ளனர்.
அதேபோல, இரும்புலியூர் கிராமத்தில் உள்ள 53 ஏக்கர் மேய்க்கால் புறம்போக்கு நிலம், வீட்டுமனைகளாக்கப்பட்டு விற்கப்பட்டுள்ளதாகவும், ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள 1.55 ஏக்கர் அரசு புறம்போக்கு நிலத்தை தேவாலயம் ஆக்கிரமித்துள்ளது. மயிலாப்பூர் கத்தோலிக்க திருச்சபை நிர்வாகிகள் சட்டவிரோதமாக விற்ற நிலங்களின் தற்போதைய மதிப்பு 5 ஆயிரம் கோடியாகும். இந்த முறைகேட்டில் தொடர்புடையவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட வேண்டும். இந்த நிலங்கள் விற்பனை குறித்து விசாரணை நடத்தவும், நிலங்களை மீட்கவும் அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரப்பட்டிருந்தது. இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி கே.ஆர்.ராம் மற்றும் நீதிபதி செந்தில் குமார் ராமமூர்த்தி அமர்வு, தமிழக அரசு உள்ளிட்டோர் பதிலளிக்குமாறு உத்தரவிட்டு விசாரணையை தள்ளிவைத்தது.
The post கத்தோலிக்க திருச்சபைக்கு 1915ல் வழங்கப்பட்ட நிலம் விற்பனை குறித்து விசாரிக்க கோரி வழக்கு: அரசு பதில் தர ஐகோர்ட் உத்தரவு appeared first on Dinakaran.