×

மகாராஷ்டிரா துணை முதல்வராக பதவியேற்ற மறுநாளே ரூ.1000 கோடி சொத்துக்குவிப்பு வழக்கில் அஜித்பவார் விடுவிப்பு: மேல்முறையீட்டு தீர்ப்பாயம் உத்தரவு

புதுடெல்லி: ரூ.1,000 கோடி பினாமி சொத்து குவிப்பு வழக்கில் மகாராஷ்டிரா துணை முதல்வராக பதவியேற்ற மறுநாளே அஜித் பவார் விடுவிக்கப்பட்டு இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவரும், மகாராஷ்டிரா துணை முதல்வருமான அஜித் பவார், அவரது உறவினர்கள், சகோதரிகள் மற்றும் நெருங்கிய உதவியாளர்கள் உள்ளிட்டவர்களின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் கடந்த 2021ம் ஆண்டு அக்டோபரில் வருமான வரித்துறை சோதனை நடந்தது. டெல்லியில் ஒரு பிளாட், கோவாவில் ஒரு ரிசார்ட் மற்றும் மகாராஷ்டிராவில் 27 வெவ்வேறு இடங்களில் சோதனைகள் நடந்தன.

பினாமி சொத்து தடுப்புச் சட்டத்தின் (பிபிபிஏ) கீழ் 1,000 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை வருமான வரித்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அதே ஆண்டில், மும்பையில் உள்ள இரண்டு ரியல் எஸ்டேட் வணிக நிறுவனங்கள் மற்றும் அஜித் பவாரின் உறவினர்களுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் சில நிறுவனங்களிலும் சோதனை நடத்தப்பட்டது. அப்போது 184 கோடி ரூபாய் கணக்கில் வராத பணத்தை வருமான வரித்துறை கைப்பற்றியது. அடையாளம் காணப்பட்ட சொத்துகள் அஜித் பவாருடன் தொடர்புடையதாக இருப்பினும், இந்த சொத்துக்கள் எதுவும் அவரது பெயரில் நேரடியாக பதிவு செய்யப்படவில்லை என்று வருமான வரித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்த வழக்கை டெல்லியில் உள்ள பினாமி சொத்து பரிவர்த்தனைகள் மேல்முறையீட்டு தீர்ப்பாயம் விசாரித்து வந்தது. அஜித் பவார், அவரது மனைவி சுனேத்ரா மற்றும் மகன் பார்த் அஜித் பவார் ஆகியோர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் பிரசாந்த் பாட்டீல், பினாமி பரிவர்த்தனை தடைச் சட்டத்தின் திட்டத்தை மேற்கோள் காட்டி, அஜித் பவாரின் குடும்பத்தினர் நிரபராதிகள் என்றும், அவர்களுக்கு எதிராக எவ்வித ஆதாரமும் இல்லாமல் நடவடிக்கைகளை எடுக்க முடியாது என்று வாதிட்டார்.

வருமான வரித்துறை தரப்பில் பல்ேவறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டாலும் கூட, அஜித் பவார் மற்றும் அவரது குடும்பத்தினருடன் ெதாடர்புடைய குற்றச்சாட்டுகளை நிரூபிக்க போதுமான ஆதாரங்களை வருமான வரித்துறை நிரூபிக்கவில்லை என்று தீர்ப்பாயம் கூறியது. அதையடுத்து வருமான வரித்துறை தாக்கல் செய்த மேல்முறையீடு மனுவை தீர்ப்பாயம் தள்ளுபடி செய்தது. ஏற்கனவே இதே குற்றச்சாட்டின் கீழ் பிறப்பித்த உத்தரவில், அஜித் பவாரின் குடும்பத்தினர் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படவில்லை என்று தீர்ப்பாயம் கூறியது.

தற்போது மேல்முறையீட்டு தீர்ப்பாயமும் அஜித் பவார் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு எதிரான குற்றச்சாட்டை நிராகரித்துள்ளது. இதன் மூலம் அதன் முந்தைய தீர்ப்பை மேல்முறையீட்டு தீர்ப்பாயம் உறுதிசெய்தது. அஜித் பவார் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு எதிரான பினாமி சொத்து உரிமை குற்றச்சாட்டுகளை தீர்ப்பாயம் தள்ளுபடி செய்தது. தீர்ப்பாய உத்தரவுகளின் மூலம் வருமான வரி அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்ட சொத்துக்கள் விடுவிக்கப்பட்டுள்ளன.

மகாராஷ்டிரா அரசியலில் சரத்பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சியை உடைத்து, கட்சியை கைப்பற்றிய அஜித் பவார் துணை முதல்வரானார். தற்போது நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலிலும் வெற்றி பெற்று மீண்டும் துணை முதல்வராக டிச.5ல் பதவி ஏற்றுள்ளார். அதற்கு அடுத்த நாளே அவருக்கு எதிராக வருமான வரித்துறை தொடுத்த வழக்குகள் யாவும் மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தால் தள்ளுபடி செய்யப்பட்டதால் அரசியல் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

The post மகாராஷ்டிரா துணை முதல்வராக பதவியேற்ற மறுநாளே ரூ.1000 கோடி சொத்துக்குவிப்பு வழக்கில் அஜித்பவார் விடுவிப்பு: மேல்முறையீட்டு தீர்ப்பாயம் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Ajit Pawar ,Maharashtra ,Deputy Chief Minister ,Appellate Tribunal ,New Delhi ,Nationalist Congress Party ,Deputy ,Chief Minister ,Dinakaran ,
× RELATED மகாராஷ்டிராவில் 3வது முறையாக...