- பெஞ்சல் புயல்
- முதல் அமைச்சர்
- மு.கே ஸ்டாலின்
- யூனியன் கமிட்டி
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- சென்னை
- பென்ஜால்
- பெஞ்சல் புயல்
- முதல்வர்
- எம். ஸ்டால்
- தின மலர்
சென்னை: பெஞ்சல் புயல் மழையால் ஏற்பட்டுள்ள பாதிப்பு சீரமைப்பு பணிகளுக்கு ரூ.6,675 கோடி ஒதுக்க வேண்டும் என்று, புயல் பாதிப்புகளை ஆய்வு செய்ய தமிழ்நாடு வந்துள்ள ஒன்றிய குழுவினரிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார். தமிழ்நாட்டில் பெஞ்சல் புயலின் காரணமாக வரலாறு காணாத அதிக கனமழை பொழிவு ஏற்பட்டு கடலூர், விழுப்புரம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, கள்ளக்குறிச்சி உள்ளிட்ட 14 மாவட்டங்களில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டதோடு பெரும் சேதத்தையும் உண்டாக்கியது. இதுதொடர்பாக, பிரதமர் மோடிக்கு முதல்வர் கடந்த 2ம் தேதி எழுதிய கடிதத்தில், பெஞ்சல் புயலினால் ஏற்பட்ட சேதங்களிலிருந்து தமிழ்நாட்டை மீட்க முதற்கட்ட ஆய்வின்படி தற்காலிக சீரமைப்பு பணிகளுக்கு ரூ.2,475 கோடி தேவைப்படுகிறது என குறிப்பிட்டதோடு, பாதிப்புகளின் அளவு மற்றும் மறுசீரமைப்பின் அவசர தேவையைக் கருத்தில் கொண்டு, இடைக்கால நிவாரணமாக ரூ.2000 கோடியை உடனடியாக விடுவிக்குமாறு வலியுறுத்தி கேட்டுக் கொண்டார்.
உடனடியாக ஒன்றிய பல்துறை குழுவை அனுப்பி சேத விவரங்களை கணக்கிடவும் கடிதம் மூலம் வலியுறுத்தி இருந்தார். இதை தொடர்ந்து கடந்த 3ம் தேதி பிரதமர், தமிழ்நாடு முதல்வரிடம் தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு, தமிழ்நாட்டில் பெஞ்சல் புயலால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் மற்றும் சேதங்கள் குறித்து கேட்டறிந்தார். அப்போது, முதல்வர் அரசால் எடுக்கப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும், புயல் சேத விவரங்கள் குறித்தும் விரிவாக எடுத்துரைத்தார். இந்த இயற்கை பேரிடரின் விளைவுகளை சமாளிக்க மாநிலத்திற்கு இடைக்கால நிவாரணமாக ரூ.2000 கோடியை உடனே விடுவித்திட வேண்டும் என்றும் ஒன்றிய குழுவை சேத மதிப்பீடுகள் மேற்கொள்ள விரைந்து அனுப்பி வைத்திடுமாறும் மீண்டும் வலியுறுத்தினார். தமிழ்நாடு அரசு போர்க்கால அடிப்படையில் மேற்கொண்ட பல்வேறு முன்னெச்சரிக்கை மற்றும் துரித மீட்பு நடவடிக்கைகளினால் பெஞ்சல் புயலினால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களின் இயல்பு வாழ்க்கை விரைந்து மீண்டு வருகிறது.
தொடர்ந்து, முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த 3ம் தேதி கடுமையான மழைப் பொழிவை சந்தித்த விழுப்புரம், கடலூர் மற்றும் கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் வெள்ளம் சூழ்ந்து, வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு குடும்ப அட்டை அடிப்படையில் நிவாரணமாக ரூ.2 ஆயிரம் வழங்கிடவும், பெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, கடலூர், தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் புயல், வெள்ளத்தினால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு இழப்பீட்டு தொகையாக ரூ.5 லட்சம் வழங்கவும், சேதமடைந்த குடிசைகளுக்கு இழப்பீட்டு தொகையாக ரூ.10 ஆயிரம் வழங்கவும், முழுமையாக சேதமடைந்த குடிசைகளுக்கு கலைஞர் கனவு இல்ல திட்டத்தில் வீடு கட்டுவதற்கு முன்னுரிமை அளித்திடவும்,
மழையினால் பாதிக்கப்பட்ட (33 விழுக்காடு மற்றும் அதற்கு மேலாக) நெற்பயிர் உள்ளிட்ட இறவை பாசனப் பயிர்களுக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு ரூ.17 ஆயிரம் வழங்கவும், பல்லாண்டு பயிர்கள் மற்றும் மரங்கள் சேதமுற்றிருப்பின் (33 விழுக்காடு மற்றும் அதற்கு மேலாக) இழப்பீடாக ஹெக்டேர் ஒன்றுக்கு ரூ.22,500 வழங்கவும், மழையினால் பாதிக்கப்பட்ட (33 விழுக்காடு மற்றும் அதற்கு மேலாக) மானாவாரி பயிர்களுக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு ரூ.8,500 வழங்கவும், கால்நடை இழப்பிற்கும் நிவாரணம் அறிவித்து உத்தரவிட்டார். அதன்படி, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோளுக்கு இணங்க, தமிழ்நாட்டில் பெஞ்சல் புயல் காரணமாக பெய்த கனமழையால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து கள ஆய்வு செய்ய பல்துறை ஒன்றிய குழுவினர் 8 பேர் நேற்று சென்னை வந்தனர்.
நேற்று மாலை ெசன்னை தலைமை செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினை ஒன்றிய உள்துறை அமைச்சகத்தின் பேரிடர் மேலாண்மை இணை செயலாளர் ராஜேஷ் குப்தா தலைமையில் ஒன்றிய விவசாய மற்றும் உழவர் நலத்துறை இயக்குநர் கே.பொன்னுசாமி, ஒன்றிய நிதித்துறை இயக்குநர் சோனாமணி அவுபம், ஒன்றிய ஜல்சக்திதுறை இயக்குநர் சரவணன், ஒன்றிய சாலை, போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை முன்னாள் பொறியாளர் தனபாலன் குமரன், ஒன்றிய எரிசக்தித் துறை உதவி இயக்குநர் ராகுல் பாட்ச்கேட்டி, ஒன்றிய ஊரக வளர்ச்சித் துறை கூடுதல் இயக்குநர் பாலாஜி சந்தித்து பேசினர். அப்போது, முதல்வர், ஒன்றிய குழுவிடம் பெஞ்சல் புயலின் தற்காலிக மற்றும் நிரந்தர மறு சீரமைப்புப் பணிகளுக்கு ₹6,675 கோடி வழங்க வேண்டிய முழு விவரங்கள் அடங்கிய கோரிக்கை மனுவை அளித்தார். மேலும், ஒன்றிய குழுவிடம் தமிழ்நாட்டிற்கு தேவையான நிவாரணப் பணிகள், நிரந்தர மற்றும் தற்காலிக மறு சீரமைப்பு பணிகளுக்காக நிதியை பெற்றுத்தர விரைந்து பரிந்துரைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
இதை தொடர்ந்து நடந்த ஆய்வுக்கூட்டத்தில் தலைமைச் செயலாளர் மற்றும் வருவாய் நிர்வாக ஆணையர் ஆகியோர் ஒன்றிய குழுவிடம் பெஞ்சல் புயல் சேத விவரங்கள் குறித்து விளக்கப் பட காட்சி மூலம் விளக்கினார்கள். முக்கிய அரசுத்துறை செயலாளர்களுடன் கலந்தாலோசித்து ஒன்றிய குழுவினர் மாவட்டங்களுக்கு கள ஆய்வு செல்வது பற்றி முடிவு எடுக்கப்பட்டது. அதன்படி ஒன்றிய குழுவினர் இன்று மற்றும் நாளை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் புயல் மற்றும் வெள்ள சேதத்தை பார்வையிட உள்ளனர். கள ஆய்வை ஒருங்கிணைக்க மூத்த இந்திய ஆட்சிப் பணி அதிகாரிகள் கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் ஏற்கனவே தங்கி முன்னேற்றப்பாட்டு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சந்திப்பின்போது, தலைமைச் செயலாளர் முருகானந்தம், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை செயலாளர் சுப்ரியா சாகு, கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்,
வருவாய் நிர்வாக ஆணையர் துறை செயலாளர் ராஜேஷ் லக்கானி, பொதுப்பணித் துறை செயலாளர் மங்கத் ராம் சர்மா, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை செயலாளர் ககன்தீப் சிங் பேடி, நீர்வளத்துறை செயலாளர் மணிவாசன், வேளாண்மை – உழவர் நலத்துறை செயலாளர் அபூர்வா, நிதித்துறை செயலாளர் உதயச்சந்திரன், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை செயலாளர் கார்த்திகேயன், கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை செயலாளர் சத்யபிரதா சாகு, எரிசக்தித் துறை செயலாளர் பீலா வெங்கடேசன், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் நந்தகுமார் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.
மாநில பேரிடர் நிவாரண நிதியில் இருந்து தமிழ்நாட்டிற்கு ரூ944 கோடி விடுவிப்பு: உள்துறை அமைச்சகம் அறிவிப்பு
ஒன்றிய உள்துறை அமைச்சகம் நேற்று ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில்,‘‘தமிழ்நாட்டில் பெஞ்சல் புயல் பாதிப்பை பார்வையிட்டு ஆய்வு செய்ய ஒன்றிய பேரிடர் குழு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. பெஞ்சல் புயல் நிவாரண பணிகளுக்காக மாநில பேரிடர் நிவாரண நிதியில் இருந்து ஒன்றிய அரசின் பங்கான ரூ944.80 கோடி தமிழ்நாடு அரசுக்கு விடுவிக்கப்படுகிறது. ஒன்றிய குழுவின் இறுதி அறிக்கை கிடைத்த பின்னர், தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்வது குறித்து பரிசீலித்து நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post பெஞ்சல் புயல் பாதிப்பை சீரமைக்க ரூ6,675 கோடி தேவை: தமிழகம் வந்துள்ள ஒன்றியக் குழுவிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல் appeared first on Dinakaran.