×

பல்லாவரத்தில் கழிவுநீர் கலந்த குடிநீரை குடித்த 23 பேருக்கு வாந்தி மயக்கம்: 2 பேர் பலி; 11 பேருக்கு தீவிர சிகிச்சை

பல்லாவரம்: தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட 13வது வார்டு பகுதியான பல்லாவரம் மலைமேடு, மாரியம்மன் கோவில் தெரு, பிள்ளையார் கோவில் தெரு, முத்தாலம்மன் கோவில் தெரு பகுதிகளில் தெருக்குழாய்கள் மூலம் இன்று காலை வழக்கம் போல் குடிநீர் வந்துள்ளது. அவற்றை அப்பகுதி மக்கள் குடங்களில் எடுத்து சென்று குடிப்பதற்கும் சமைப்பதற்கும் பயன்படுத்தினர். இதில், இன்று காலை குழாய் மூலம் வழங்கப்பட்ட குடிநீரில் கழிவுநீரும் கலந்திருந்ததாக கூறப்படுகிறது. இந்த கழிவுநீருடன் கூடிய குடிநீரை குடித்த 23 பேருக்கு திடீரென வாந்தி, மயக்கத்துடன் வயிற்றுப்போக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

மேலும், கழிவுநீர் கலந்த குடிநீரை குடித்து வாந்தி எடுத்து மயங்கிய 23 பேரையும் அக்கம்பக்கத்தினர் மீட்டு, அங்குள்ள தனியார் மருத்துவமனை மற்றும் குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு அனைவருக்கும் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் 11 பேர் உள்நோயாளியாக தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். மீதமுள்ள 10பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினர். இதற்கிடையே மருத்துவமனையில் உள்நோயாளியாக சிகிச்சை பெற்ற பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த திரிவேதி கிருஷ்ணன் (54) மற்றும் மோகனரங்கன் (43) ஆகிய 2 பேர் சிகிச்சை பலனின்றி பலியானதாக மக்களிடையே தகவல் பரவியதால் பரபரப்பு நிலவியது.

இதையடுத்து, குடிநீரை குடித்த பலருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட காரணம் குறித்து அப்பகுதி மக்கள் விசாரித்தனர். இதில், இன்று காலை குழாய் மூலம் வழங்கப்பட்ட குடிநீரில் கழிவுநீர் கலந்து வந்திருப்பதை மக்கள் கண்டறிந்தனர். மேலும், மருத்துவமனையில் டாக்டர்களின் சோதனையில், உயிரிழந்த திரிவேதி கிருஷ்ணன் கடந்த 2 நாட்களாக ஏற்பட்ட வயிற்றுப்போக்கு காரணமாக உயிரிழந்ததாகவும், கழிவு நீர் கலந்த குடிநீரை அருந்தியதால் அவர் உயிரிழக்கவில்லை என்றும் தெரிவித்தனர்.

இதுகுறித்து தகவலறிந்ததும் அமைச்சர் தா.மோ.அன்பரசன், பல்லாவரம் எம்எல்ஏ இ.கருணாநிதி, தாம்பரம் மாநகராட்சி ஆணையர் பாலசந்தர் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அங்கு பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் கூறினர். பின்னர் அங்கேயே முகாமிட்டு, பாதிக்கப்பட்ட மக்களிடம் நடந்தவற்றை கேட்டறிந்து, அவர்களுக்கு உரிய உதவியை செய்வதாக உறுதியளித்தனர். இதைத் தொடர்ந்து நிருபர்களிடம் அமைச்சர் தா.மோ.அன்பரசன் கூறுகையில், பாதிக்கப்பட்ட மக்களை பார்க்கும்போது, இது தண்ணீர் பிரச்சனையால் வந்தது போன்று தெரியவில்லை. ஏரி மீன்களை சமைத்து உண்டதால் ஏற்பட்ட ஒவ்வாமை காரணமாக உடல் பாதிப்பு ஏற்பட்டது போல் தெரிகிறது.

இருந்தபோதிலும், பாதிக்கப்பட்ட பகுதிகளை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளின் குழு முழுமையாக ஆய்வு செய்ய உத்தரவிடப்பட்டு உள்ளது. முதல் கட்டமாக, குடிநீர் குழாயில் வந்த தண்ணீர் ஆய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஆய்வறிக்கை வந்த பிறகே பாதிப்புக்கான உண்மையான காரணங்கள் தெரியவரும் என்று அமைச்சர் தா.மோ.அன்பரசன் தெரிவித்தார். குடிநீருடன் கழிவுநீர் கலந்து வந்தததை குடித்த 23 பேருக்கு வாந்தி, மயக்கம், வயிற்றுப்போக்கு ஏற்பட்டதால் அப்பகுதி மக்களிடையே பரபரப்பு நிலவியது.

The post பல்லாவரத்தில் கழிவுநீர் கலந்த குடிநீரை குடித்த 23 பேருக்கு வாந்தி மயக்கம்: 2 பேர் பலி; 11 பேருக்கு தீவிர சிகிச்சை appeared first on Dinakaran.

Tags : Pallavaram ,13th Ward ,Tambaram Corporation ,Pallavaram hill ,Mariyamman Kovil Street ,Pilliyar Kovil Street ,Muthalamman Kovil Street ,Dinakaran ,
× RELATED அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற 44 பேர் வீடு திரும்பினர்