×

தீவிரமாக கண்காணிக்கப்பட வேண்டும்; நாதக பிரிவினைவாதம் தூண்டும் இயக்கம்: ஐபிஎஸ் அதிகாரிகள் மாநாட்டில் திருச்சி எஸ்.பி. வருண்குமார் பேச்சு

திருச்சி: சண்டிகரில் 5வது தேசிய ஐபிஎஸ் அதிகாரிகள் மாநாட்டை பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் துவக்கி வைத்தனர். இந்த மாநாட்டில் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த ஐபிஎஸ் அதிகாரிகள் பங்கேற்றனர். தமிழ்நாட்டின் இளம் எஸ்.பியாக திருச்சி மாவட்டத்தில் பணியாற்றி வரும் வருண்குமாரை, இந்த மாநாட்டில் பங்கேற்கும் படியும், நாடு முழுவதும் உள்ள 22 ஐபிஎஸ் அதிகாரிகள் கொண்ட குழுவிற்கு தலைமையேற்று சைபர் கிரைம், இணையதள மிரட்டல் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்தும் அதனை தடுக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் பற்றியும் விளக்கும்படி மத்திய உள்துறை அறிவுறுத்தியிருந்தது.

இந்த மாநாட்டில் இணையதள குற்றங்களை கண்காணிப்பது, தடுப்பது குறித்து விரிவான விளக்கத்தை அனைத்து ஐபிஎஸ் அதிகாரிகள் மத்தியில் திருச்சி எஸ்.பி.வருண்குமார் ஆதாரங்களோடு பேசினார். அதில், சைபர் குற்றங்களால் ஒரு ஐபிஎஸ் அதிகாரியாக உள்ள தானும், தன்னுடைய குடும்பத்தினருமே தமிழ்நாட்டில் பாதிக்கப்பட்டதாகவும், அதற்கு காரணம், நாம் தமிழர் என்ற கட்சி. நாம் தமிழர் கட்சியை கண்காணிக்க வேண்டும், இந்த கட்சியை சேர்ந்தவர்கள் பிரிவினைவாதத்தை தூண்டுவதாகவும் உள்ளனர். தானும் தன்னுடைய குடும்பத்தினரும் இணைய தள குற்றத்தால் பாதிக்கப்பட்டு இருக்கிறோம்.

இணைய குற்றம் செய்யும் கூலிகளை கண்காணிக்க ‘14சி’ என்ற அமைப்பை உருவாக்க வேண்டும் என்று கூறினார். தேசிய அளவிலான மாநாட்டில் எஸ்பி வருண்குமார் இவ்வாறு பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி எஸ்.பி. வருண்குமார், அவரது மனைவியான புதுகை எஸ்.பி வந்திதா பாண்டே, மகன்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் குறித்து சமூக வலைதளமான எக்ஸ் தளத்தில் கொலை மிரட்டல், ஆபாச பதிவுகளை நாதகவினர் பதிவு செய்தனர். இது தொடர்பாக புகாரின்பேரில், தில்லை நகர் போலீசார் வழக்குப்பதிந்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

The post தீவிரமாக கண்காணிக்கப்பட வேண்டும்; நாதக பிரிவினைவாதம் தூண்டும் இயக்கம்: ஐபிஎஸ் அதிகாரிகள் மாநாட்டில் திருச்சி எஸ்.பி. வருண்குமார் பேச்சு appeared first on Dinakaran.

Tags : Trichy SB ,IPS Officers' Conference ,Varunkumar ,Trichy ,Modi ,Home Minister ,Amit Shah ,5th National IPS Officers Conference ,Chandigarh ,IPS ,Tamil Nadu ,Dinakaran ,
× RELATED என் கட்சியை குறை சொல்வதா? மோதி பார்ப்போம் வா… எஸ்.பிக்கு சீமான் மிரட்டல்