×

திருவண்ணாமலையில் மண் சரிவில் சிக்கி பலியான 7 பேர் உடலுக்கு அமைச்சர் எ.வ.வேலு அஞ்சலி


திருவண்ணாமலை: திருவண்ணாமலை தீபமலைப்பகுதியில் மண் சரிவில் சிக்கி பலியான 7 பேரின் உடலுக்கு அமைச்சர் எ.வ.வேலு அஞ்சலி செலுத்தினார். அப்போது அவர் கண்ணீர் விட்டு அழுதார். திருவண்ணாமலையில் பெஞ்சல் புயல் காரணமாக பெய்த கனமழையால், வஉசி நகர் பகுதியில் தீபம் ஏற்றும் மலையில், கடந்த 1ம் தேதி மண்சரிவு ஏற்பட்டது. மேலும், பாறைகளும் உருண்டன. அதனால், மண் சரிவில் சிக்கி வீட்டுக்குள் இருந்த கூலித்தொழிலாளி ராஜ்குமார்(32), அவரது மனைவி மீனா(26), அவர்களது குழந்தைகள் கவுதம்(9), மகள் இனியா(7) மற்றும் உறவினர்களின் குழந்தைகளான மகா(12), ரம்யா(12), வினோதினி(14) ஆகியோர் பரிதாபமாக பலியானார்கள். 36 மணி நேரம் போராடி அவர்களின் உடல்கள் மீட்கப்பட்டன. பிரேத பரிசோதனைக்கு பிறகு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

இதையடுத்து வஉசி நகர் பகுதியில் பொதுமக்களின் அஞ்சலிக்காக 7 பேரின் உடலும் வைக்கப்பட்டது. நேற்று பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு நேரில் சென்று 7 பேரின் உடலுக்கும் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். அப்போது, உறவினர்கள் கதறி அழுததை பார்த்து, அமைச்சரும் கண்ணீர் விட்டு அழுதார். துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி, கலெக்டர் பாஸ்கர பாண்டியன், மாநில மருத்துவர் அணி துணைத் தலைவர் எ.வ.வே.கம்பன், எம்எல்ஏ மு.பெ.கிரி உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர். பின்னர் 7 பேரின் உடல்களும் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு, நேற்று மாலை கிரிவலப் பாதையில் எமலிங்கம் அருகே உள்ள மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டது.

கிருஷ்ணகிரியில் ராட்சத பாறை விழுந்து வீட்டு சுற்றுச்சுவர் சேதம்
கிருஷ்ணகிரியில் இருந்து குப்பம் செல்லும் சாலையில் உள்ள கிருஷ்ணகிரி மலையடிவாரத்தின் கீழ், வெங்கடாபுரம் ஊராட்சிக்குட்பட்ட பழையபேட்டை தம்புசாமி நகரில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. கடந்த சில நாட்களாக பெய்த கனமழை காரணமாக நேற்று அதிகாலை 4.45 மணியளவில், மலை அடிவாரத்தில் இருந்த ராட்சத பாறை பக்கவாட்டில் சரிந்து விழுந்தது. இதில், நகர்மன்ற முன்னாள் துணை தலைவர் வெங்கடாசலத்தின் வீட்டின் பின்பக்க சுற்றுச்சுவர் இடிந்தது. பாறை சரிந்த சத்தம் கேட்டு, அங்கு வசித்த 20க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் அலறியடித்து வெளியேறினர். நல்லவேளையாக உயிர்சேதம் இல்லை. அப்பகுதியிலுள்ள குடியிருப்புகளில் வசிப்பவர்கள் மாற்று இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

The post திருவண்ணாமலையில் மண் சரிவில் சிக்கி பலியான 7 பேர் உடலுக்கு அமைச்சர் எ.வ.வேலு அஞ்சலி appeared first on Dinakaran.

Tags : Minister AV Velu ,Tiruvannamalai ,Thiruvannamalai ,Minister ,AV Velu ,Deepamalai ,Benjal storm ,Vausi Nagar ,
× RELATED காதல் மனைவியை தாக்கி சுவற்றில் மோதி...