×

70 இஸ்லாமிய தீவிரவாதிகள் உள்பட வங்கதேச கலவரத்தின்போது 700 கைதிகள் தப்பி ஓட்டம்: இடைக்கால அரசு அறிக்கை


டாக்கா: வங்கதேசத்தில் ஷேக் ஹசீனா தலைமைக்கு எதிராக நடந்த கலவரங்களின்போது 70 இஸ்லாமிய தீவிரவாதிகள் உள்பட 700 கைதிகள் தப்பி ஓடி விட்டதாக இடைக்கால அரசு தெரிவித்துள்ளது. வங்கதேசத்தில் சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு அரசு பணிகளில் இடஒதுக்கீடு வழங்கும் முடிவை எதிர்த்து மாணவர்கள் போராட்டங்களில் ஈடுபட்டனர். கடந்த ஜூலை மாதம் முதல் மாணவர்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டனர். ஜூலை 19ம் தேதி நடந்த போராட்டத்தின்போது மத்திய வங்கதேசம் நர்சிங்டி மாவட்டத்தில் உள்ள சிறைச்சாலைக்கு போராட்டக்காரர்கள் தீ வைத்து கொளுத்தினர். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி கொண்டு ஏராளமான கைதிகள் தப்பி ஓடி விட்டனர்.

இந்நிலையில் வங்கதேசத்தில் ஷேக் ஹசீனா தலைமைக்கு எதிராக நடந்த மாணவர் போராட்டங்களின்போது 70 இஸ்லாமிய தீவிரவாதிகள் உள்பட 700 கைதிகள் தப்பி ஓடி விட்டதாக இடைக்கால அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து வௌியிடப்பட்ட அறிக்கையில், “டாக்காவுக்கு அருகிலுள்ள நர்சிங்டி சிறைச்சாலையில் இருந்து ஆகஸ்ட் மாதம் மொத்தம் 826 கைதிகள் தப்பி ஓடினர். டாக்காவின் புறநகரான காசிப்பூரில் உள்ள காஷிம்பூர் சிறையில் இருந்து 209 கைதிகளும், அதேநாளில் மேற்கு குஷ்டியா மாவட்டத்தில் உள்ள சிறையில் இருந்து 94 கைதிகளும் தப்பி ஓடி விட்டனர். மற்றொரு சம்பவத்தின்போது தென்மேற்கு சத்கிரா சிறையில் இருந்து 596 கைதிகள் தப்பி ஓடினர். ஆனால் அவர்களில் 200க்கும் மேற்பட்ட கைதிகள் சிறிது நேரத்திலேயே வந்து சரணடைந்து விட்டனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post 70 இஸ்லாமிய தீவிரவாதிகள் உள்பட வங்கதேச கலவரத்தின்போது 700 கைதிகள் தப்பி ஓட்டம்: இடைக்கால அரசு அறிக்கை appeared first on Dinakaran.

Tags : Bangladesh riots ,Government ,Dhaka ,interim government ,extremists ,Sheikh Hasina ,Bangladesh ,Dinakaran ,
× RELATED முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவை...