மேலூர், டிச. 4: மேலூர் அருகே பழுதடைந்த மடையின் ஷட்டரை சரி செய்ய வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலூர் அருகே இ.மலம்பட்டி ஊராட்சி எல்லைக்கு உட்பட்ட இலுப்பைகுடி கண்மாயில், மடையில் உள்ள ஷட்டரின் கதவு திறக்க முடியாமல் உள்ளது. இதனால் மடையை திறந்து தண்ணீர் பாய்ச்ச முடியாமல் அப் பகுதி விவசாயிகள் உள்ளனர். இதுகுறித்து பல முறை பொதுப்பணித்துறை அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளனர். எனவே விரைந்து நடவடிக்கை எடுத்து மடையின் ஷட்டரை சரி செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து அப்பகுதி விவசாயி அன்பழகன் கூறியதாவது, ‘‘இலுப்பக்குடி கண்மாய் நீரை கொண்டு 120 ஏக்கர் ஏக்கருக்கு மேல் விவசாயம் நடைபெற்று வருகிறது. இந்த கண்மாயில் உள்ள இரண்டு ஷட்டர்களில் ஒரு ஷட்டர் வேலை செய்யவில்லை. அதை திறக்கவும் முடியாது, மூடவும் முடியாது. அந்த ஷட்டரில் உள்ள சிறு துவாரம் வழியாக கசியும் நீரைக் கொண்டு, இந்த பகுதியில் உள்ள விவசாயிகள் விவசாயம் செய்யும் நிலை உள்ளது. கண்மாயின் அளவு ஷட்டரை விட கீழ்நோக்கி இருப்பதால் தண்ணீர் மேல் ஏறி வர இயலவில்லை. பொதுப்பணித்துறை அதிகாரிகள் விரைந்து இவற்றை சரி செய்து தர வேண்டும்’’என்றார்.
The post மேலூர் அருகே பழுதடைந்த ஷட்டரை சரி செய்ய வேண்டும்: விவசாயிகள் வேண்டுகோள் appeared first on Dinakaran.