×

பெண் தொழில்முனைவோரை உருவாக்குவதில் தமிழ்நாடு 2வது இடம்: கடந்த 3 ஆண்டுகளில் 6,22,373 நிறுவனங்கள் பதிவு, அமைச்சர் கயல்விழி செல்வராஜ் தகவல்

சென்னை: மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் வெளியிட்ட அறிக்கை: சிறு குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களைப் பதிவு செய்வதற்கான ‘உத்யம்’ தளத்தில் பதிவு செய்தவர்களின் எண்ணிக்கையைப் பொறுத்தவரை, 2021-22ம் ஆண்டில் 1,27,316 பேரும் 2022-23ம் ஆண்டில் 2,01,715 பேரும் 2023-24ம் ஆண்டில் 2,93,342 பேரும் பதிவு செய்துள்ளனர். இதன் மூலம் மொத்தமாக கடந்த 3 ஆண்டுகளில் 6,22,373 பெண் தொழில் முனைவோர்களின் நிறுவனங்களைப் பதிவுசெய்து இந்தியாவிலேயே 2வது இடத்தைப் பெற்று தமிழ்நாடு சாதனை படைத்துள்ளது.

‘மகளிர் விடியல் பயணம்’ ‘கலைஞர் மகளிர் உரிமைத் தொகை’, ‘புதுமைப் பெண்’ போன்ற மகளிருக்கான திட்டங்களின் வழியில் பெண் தொழில் முனைவோருக்கான சிறப்பு நடவடிக்கைகளையும் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் அரசு தொடர்ந்து எடுத்து வருகிறது. ‘வாழ்ந்து காட்டுவோம்’ திட்டத்தின் கீழ் மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களுக்குத் தொடர்ந்து தொழில்முனைவோர் மேம்பாட்டுப் பயிற்சிகள்;

புத்தொழிலை ஊக்குவிப்பதற்கான மானியத்துடன் கூடிய டான்சீடு (TANSEED) திட்டத்தின்கீழ் பெண் தொழில் முனைவோருக்குச் சிறப்புத் தொகுப்புகள் போன்ற பெண் தொழில்முனைவோரை ஊக்குவிப்பதற்கான அரசின் தொலைநோக்கு நடவடிக்கைகளால் இச்சாதனை சாத்தியப்பட்டிருக்கிறது.

மகளிர் முன்னேற்றமே சமுதாயத்தை முன்னேற்ற அடிப்படை என்பதை உணர்ந்த முதல்வர் மு.க.ஸ்டாலின், பெண்களின் வாழ்க்கை நிலையை உயர்த்தி, சுதந்திரமானவர்களாகவும், பொருளாதார தற்சார்புடையவர்களாகவும் மாற்றி பாலினச் சமத்துவத்தை உறுதிப்படுத்தி, மகளிரின் வெற்றிப்பயணத்தை திராவிட மாடல் அரசின் வழியாக தொடர்ந்து கொண்டிருக்கிறார்கள். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

The post பெண் தொழில்முனைவோரை உருவாக்குவதில் தமிழ்நாடு 2வது இடம்: கடந்த 3 ஆண்டுகளில் 6,22,373 நிறுவனங்கள் பதிவு, அமைச்சர் கயல்விழி செல்வராஜ் தகவல் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Minister ,Kayalvizhi Selvaraj ,Chennai ,Human Resource Management Minister ,Udyam ,Minister Kayalvizhi Selvaraj ,Dinakaran ,
× RELATED போதையில்லா தமிழ்நாடு” என்ற தலைப்பில்...