×

குடியிருப்புகளுக்கு அருகில் கழிவுநீர் விசிகவினர் சாலை மறியல்

திருத்தணி: திருத்தணி அருகே காசிநாதபுரம் காலனியில் 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். கிராமத்தில் 3 தெருக்கள் உள்ள நிலையில் ஒரு தெருவில் மட்டுமே கழிவுநீர் கால்வாய் உள்ளது. இதனால் கழிவுநீர் வெளியேற வசதியின்றி குடியிருப்புகளுக்கு அருகில் தேங்கி நிற்கிறது. மேலும் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழையால் மழைநீருடன் கழிவுநீரும் தெருக்களில் குடியிருப்புகளுக்கு அருகில் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது. இந்தநிலையில் கழிவுநீர் கால்வாய் அமைக்கவும், கழிவுநீர் வெளியேற வசதி ஏற்ப்படுத்தி தர வலியுறுத்தியும் விசிக மாவட்ட நிர்வாகி ஆறுமுகம் தலைமையில் நேற்று மாநில நெடுஞ்சாலையில் 50க்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதனால், திருத்தணி நாகலாபுரம் மாநில நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்து வந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் மதியரசன் மற்றும் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். பொதுமக்கள் கோரிக்கை தொடர்பாக வட்டார வளர்ச்சி அலுவலருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து உடனடியாக பொக்லைன் இயந்திரம் மூலம் தெருக்களில் தேங்கிய கழிவுநீர் அகற்றப்பட்டது. மேலும் கழிவுநீர் கால்வாய்கள் அமைத்து நிரந்தர தீர்வு காணப்படும் என்று வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உறுதி ஏற்றதையடுத்து சுமார் ஒரு மணி நேரம் நடைபெற்ற போராட்டம் கைவிடப்பட்டது.

The post குடியிருப்புகளுக்கு அருகில் கழிவுநீர் விசிகவினர் சாலை மறியல் appeared first on Dinakaran.

Tags : Thiruthani ,Kasinathapuram Colony ,Dinakaran ,
× RELATED மாவட்டத்தில் ஆள் பற்றாக்குறை காரணமாக...