×

மாஞ்சோலை தேயிலை தோட்ட வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை ஐகோர்ட்

சென்னை: மாஞ்சோலை தேயிலைத் தோட்டங்களை, அரசு ஏற்று நடத்தக்கோரிய வழக்குகளை தள்ளுபடி செய்து உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அனைத்து தொழிலாளர்களுக்கும் பணப் பலன்களை வழங்க தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு அளித்துள்ளது. மாஞ்சோலை தேயிலை தோட்டத்தை அரசின் டான்டீ நிர்வாகம் ஏற்று நடத்த உத்தரவிடக் கோரி வழக்கு தொடரப்பட்டது.

தமிழக அரசிடமிருந்து 99 ஆண்டுகள் குத்தகைக்கு மாஞ்சோலை எஸ்டேட் பகுதியை வாங்கி, பி.பி.டி.சி., எனும் பாம்பே பர்மா டிரேடிங் கார்ப்பரேஷன் நிறுவனம் நிர்வகித்து வந்தது. கடந்த 2018ல், 8 ஆயிரத்து 374 ஏக்கர் எஸ்டேட் நிலத்தை களக்காடு முண்டந்துறை புலிகள் சரணாலயத்தின் கீழ் பாதுகாக்கப்பட்ட வனப் பகுதியாக அரசு அறிவித்தது.இதனையடுத்து தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு விருப்ப ஓய்வு திட்டத்தை, பி.பி.டி.சி. நிறுவனம் அறிவித்தது

இதை எதிர்த்து தொழிலாளர்கள் தரப்பில், மறுவாழ்விற்காக உதவிகள் வழங்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் எனவும், மாஞ்சோலை தேயிலை தோட்டத்தை, தமிழக அரசின் ‘டான்டீ’ தேயிலை தோட்டக் கழகம் நிர்வாகம் ஏற்று நடத்த உத்தரவிட வேண்டும் என்றும் தொழிலாளர்களுக்கு நிலம் உள்ளிட்ட பணப் பலன்களை வழங்க உத்தரவிட வேண்டும் எனவும், தோட்டத்தை வணிக நோக்கில் பொது அல்லது தனியார் துறையிடம் ஒப்படைக்க தடை விதிக்க வேண்டும் என, புதிய தமிழக கட்சி தலைவர் கிருஷ்ணசாமி உள்ளிட்டோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தனர்.

மதுரை உயர் நீதிமன்ற கிளையில் விசாரணையில் இருந்த வழக்குகள், சென்னை உயர் நீதிமன்றத்தில் வன பாதுகாப்பு தொடர்பான வழக்குகளை விசாரிக்கும் நீதிபதிகள் என்.சதீஷ்குமார், டி.பரத சக்ரவர்த்தி அடங்கிய சிறப்பு அமர்வு விசாரித்தது. விசாரணையின் போது, அரசு தரப்பில், மாஞ்சோலை தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள், ‘பாரம்பரிய வனவாசி’ என்ற வரையறையின் கீழ் இடம் பெறமாட்டார்கள் என்றும் புலம்பெயர்ந்த தோட்ட தொழிவாளர்கள், தொடர்ந்து வனப்பகுதியில் வசிக்க முடியாது என்றும் தெரிவித்தார்

இந்நிலையில் இன்று அனைத்து தரப்பு வாதங்கள் முடிந்த நிலையில் உயர்நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. அந்த தீர்ப்பில் அனைத்து தொழிலாளர்களுக்கும் பணப் பலன்களை வழங்க தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு அளித்துள்ளது. புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி உள்ளிட்டோர் தொடர்ந்த வழக்கை ஐகோர்ட் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

 

The post மாஞ்சோலை தேயிலை தோட்ட வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை ஐகோர்ட் appeared first on Dinakaran.

Tags : Madras High Court ,Mancholai Tea Estate ,CHENNAI ,High Court ,Mancholai ,Tamil Nadu government ,Chennai High Court ,Dinakaran ,
× RELATED அரசு ஊழியரின் சொத்துக்கள் மற்றும்...