×

பயணிகளின் வசதிக்காக பல்வேறு வசதிகளுடன் மாநகர பேருந்துகளுக்கு புதிய செயலி அறிமுகம்: விரைவில் பயன்பாட்டிற்கு வருகிறது

சென்னை: சென்னையில் இயக்கப்பட்டு வரும் மாநகர போக்குவரத்து கழக பேருந்துகளில் தினசரி பல லட்சம் பேர் பயணம் செய்து வருகின்றனர். போக்குவரத்து நெரிசல் காரணமாக நேர அட்டவணைப்படி பேருந்துகள் இயக்கப்படுவதில் சிரமங்கள் ஏற்படுகின்றன. இதனால் கால தாமதம் உண்டாகிறது. எனவே பேருந்துகள் வருகையை உடனுக்குடன் தெரிந்து கொள்ளும் வகையில் ”சென்னை பஸ்” என்ற மொபைல் செயலி அறிமுகம் செய்யப்பட்டது.
இதில் சென்னை மாநகர போக்குவரத்து கழக பேருந்துகளின் இயக்கத்தை லைவ் லொகேஷனுடன் காணலாம். மேலும் விரைவு பேருந்துகளின் இயக்கத்தையும் காண முடியும்.

இந்நிலையில் கூடுதல் வசதிகளுடன், பயணிகள் மிகவும் எளிதாக பயன்படுத்தும் வகையில் புதிய மொபைல் செயலி ஒன்றை அறிமுகம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. இது அடுத்த ஆண்டு தொடக்கத்தில் பயன்பாட்டிற்கு வரவுள்ளது.
இதுதொடர்பாக சென்னை மாநகர போக்குவரத்து கழக மேலாண் இயக்குநர் அல்பின் ஜான் வர்கீஸ் கூறுகையில், ‘‘புதிய செயலி, பேருந்துகளின் லைவ் லொகேஷனை மிகவும் துல்லியமாக கணிக்கும். பயணத் திட்டமிடல் தொடர்பான அம்சங்கள் தொடர்ந்து நீடிக்கும். இதனுடன் டிக்கெட் எடுக்கும் வசதியும் அறிமுகம் செய்யப்படவுள்ளது. புதிய செயலியில் ஏதேனும் குறைகள் இருந்தால் அவற்றை உரிய முறையில் தெரிவிக்கவும் பயணிகளுக்கு வசதிகள் செய்து தரப்படும்.

இந்த செயலி மூலம் எடுக்கப்படும் டிக்கெட்டை பேருந்தில் ஏறியதும் நடத்துநர் பரிசோதிப்பர். அதன்பிறகு பயணம் தொடர அனுமதிக்கப்படும். அதுமட்டுமின்றி சென்னை மாநகரில் உள்ள 500 பேருந்து நிறுத்தங்கள், 71 பேருந்து நிலையங்களில் எல்.இ.டி டிஸ்பிளேக்கள் பொருத்தப்படும். இதில் மாநகர பேருந்துகள் வரும் நேரம், வழித்தடம், ரூட் நம்பர் உள்ளிட்டவை குறித்து தெளிவான தகவல்கள் தெரிவிக்கப்படும். இதுதொடர்பான சோதனை ஒட்டம் ஏற்கனவே வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டது கவனிக்கத்தக்கது. மேலும் டிரைவர் கன்சோல் என்ற சிறப்பு வசதி பேருந்துகளில் பொருத்தப்படவுள்ளது. இதன்மூலம் பேருந்து ஓட்டுநரும், கட்டுப்பாட்டு அறையில் இருந்து போக்குவரத்து ஊழியரும் தகவல் பரிமாற்றம் செய்ய முடியும். இதன்மூலம் பேருந்துகளில் கூட்ட நெரிசல், இயக்கத்தில் கோளாறு உள்ளிட்டவை குறித்து உடனுக்குடன் தெரிவித்து மாற்று ஏற்பாடுகளை மேற்கொள்ள முடியும்,’’ என்றார்.

The post பயணிகளின் வசதிக்காக பல்வேறு வசதிகளுடன் மாநகர பேருந்துகளுக்கு புதிய செயலி அறிமுகம்: விரைவில் பயன்பாட்டிற்கு வருகிறது appeared first on Dinakaran.

Tags : Chennai ,Municipal Transport Corporation ,
× RELATED வரும் 21ம் தேதி முதல் மூத்த...