×

திருக்கழுக்குன்றம் தாலுகாவில் தொடர் கனமழையால் 2 தடுப்பணைகள் நிரம்பின

திருக்கழுக்குன்றம்: திருக்கழுக்குன்றம் தாலுகாவில் தொடர் கனமழையால், அப்பகுதியில் உள்ள 2 தடுப்பணைகள் நிரம்பி வழிகின்றன. பெஞ்சல் புயல் காரணமாக கடந்த 3 நாட்களுக்கு மேலாக தொடர்ந்து கனமழை மற்றும் லேசான மழை பெய்து வந்தநிலையில், மழைநீரில் நெற்பயிர்கள் மூழ்கின. மேலும், திருக்கழுக்குன்றம் தாலுகாவில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள 97 ஏரிகளில் பெரிய ஏரியான பொன்விளைந்த களத்தூர் ஏரி மற்றும் அம்மணம்பாக்கம், சூராடிமங்கலம், வழுவதூர், திம்மூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள 34 ஏரிகள் நிரம்பியுள்ளன.

அதேபோல், தாலுகாவிற்கு உட்பட்ட பாலாற்றில் மழைநீர் அதிகரித்து ஓடுவதால், வல்லிபுரம் மற்றும் வாயலூர் ஆகிய பகுதிகளில் உள்ள 2 தடுப்பணைகளும் நிரம்பி வழிகின்றன. காற்றின் வேகத்தால் திருக்கழுக்குன்றம் அடுத்த சாலூர் கிராமத்தில் உள்ள மின் கம்பத்தின் மேல் பக்கம் முறிந்து தொங்கிக் கொண்டிருந்தை கண்டு, அப்பகுதி மக்கள் அச்சமடைந்தனர். திருக்கழுக்குன்றம் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள இருளர் குடும்பங்களின் வீடுகளை மழைநீர் சூழ்ந்ததால், அவர்களை பேரூராட்சி நிர்வாகம் சார்பில் திருக்கழுக்குன்றம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் தங்க வைக்கப்பட்டிருந்தனர்.

அவர்களுக்கு, பேரூராட்சி நிர்வாகம் மற்றும் வணிகர் சங்கம் சார்பில் பேரூராட்சி தலைவர் ஜி.டி.யுவராஜ் உணவு மற்றும் பாய், பெட்சீட் உள்ளிட்ட நிவாரண பொருட்களை வழங்கினார். மேலும், சாலூர் ஊராட்சிக்கு உட்பட்ட ராமாபுரம் பகுதியில் உள்ள 67 இருளர் குடும்பங்களின் வீடுகளை மழைநீர் சூழ்ந்ததால் அவர்களை அங்குள்ள தனியார் தொண்டு நிறுவன டியுசன் சென்டரில் தங்க வைத்து, ஊராட்சி மன்ற தலைவர் கற்பகம் ஜானகிராமன் ஏற்பாட்டில் உணவு மற்றும் பாய், கொசுவர்த்தி உள்ளிட்டவைகளை வழங்கினர்.

The post திருக்கழுக்குன்றம் தாலுகாவில் தொடர் கனமழையால் 2 தடுப்பணைகள் நிரம்பின appeared first on Dinakaran.

Tags : Thirukkalukkunram taluk ,Thirukkalukkunram ,Thirukkalukunram taluk ,Benjal ,Thirukkalukkunram… ,Dinakaran ,
× RELATED நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் 49வது...