×

ஆன்லைனில் முன்பதிவு செய்த தினத்தில் மட்டுமே தரிசனம்: சபரிமலை பக்தர்களுக்கு தமிழ்நாடு காவல்துறை வேண்டுகோள்


சென்னை: சபரிமலைக்கு செல்பவர்கள் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்த தினத்தில் மட்டுமே தரிசனம் செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு காவல்துறை ஐயப்ப பக்தர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது. தமிழ்நாடு காவல்துறை நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: சபரிமலையில் பக்தர்கள் அதிக கூட்ட நெரிசலை தவிர்க்க தரிசன வரிசைக்கான டிஜிட்டல் முன்பதிவு செய்ய வேண்டும் என்றும், அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என்றும், இதனால் சபரிமலையில் அதிக நெரிசலை தவிர்க்கலாம் என்றும் கேரள காவல்துறை அறிவித்துள்ளது.

நாளுக்கு நாள் பக்தர்கள் வருகை அதிகரித்து வருவதால், ஐயப்பனை தரிசனம் செய்ய ஆன்லைன் வரிசையில் முன்பதிவு செய்தவர்கள் தரிசன தினத்தன்று சபரிமலைக்கு வந்தால், தேவையற்ற நெரிசலை தவிர்க்கவும், சிரமமின்றி சுமுகமாக தரிசனம் செய்யவும் உதவும் என்று கேரள மாநில காவல்துறை தெரிவித்துள்ளது. நிகழ்விட முன்பதிவானது 10 ஆயிரம் பக்தர்களாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சபரிமலை தரிசனத்திற்கு முன்கூட்டியே வரிசை பதிவு செய்ய விரும்புபவர்கள் ஆன்லைன் முன்பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. சபரிமலையில் கடந்த 30ம் ேததி இரவு 10 மணிக்கு தரிசனத்திற்காக கோயிலுக்கு சென்றவர்களின் எண்ணிக்கை 66,821 ஆகும்.

அதில் 13,516 பேர் முன்பதிவு செய்யப்பட்ட நாளில் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரத்திற்கு முன்னரோ அல்லது பின்னரோ வந்துள்ளனர். அந்த வகையில், நேற்று வரை மொத்தம் 11,12,447 பேர் தரிசனத்திற்கு வந்துள்ளனர். நவம்பர் 15ம் ேததி முதல் 1,95,327 பேர் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரத்திற்கு முன்னரோ அல்லது பின்னரோ வந்துள்ளனர். எனவே குறிப்பிட்ட நேரத்தில் பக்தர்கள் தரிசனம் செய்ய வந்தால், ஐயப்ப தரிசனம் சிரமம், நெரிசல் இன்றி சுமுகமாக நடைபெறும் என கேரள மாநில காவல்துறை வலியுறுத்தியுள்ளது. இதனால் கேரளா, பிற மாநிலங்களில் உள்ள பக்தர்கள் குறிப்பிட்ட அளவிற்கு முன்பதிவு நேரத்தை பின்பற்ற முடியும் என்று கேரள மாநில காவல்துறை தெரிவித்துள்ளது.
இவ்வாறு காவல்துறைஅறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

பக்தர்கள் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள்
* சபரிமலை ஏறும்போது 10 நிமிட நடைக்கு பிறகு 5 நிமிடம் ஓய்வெடுக்கலாம்.
* மரக்கூட்டம், சாரம்குத்தி, நடைபந்தல் – வழியாக சன்னிதானத்தை அடைய வழக்கமான நடைபாதையை பயன்படுத்தவும்.
* பதினெட்டாம் படியை அடைய வரிசை முறையை பின்பற்றவும்.
* தரிசனம் முடிந்து திரும்பும் போது நடப்பந்தல் மேம்பாலத்தை பயன்படுத்தவும்.

* சன்னிதானம் செல்லும் வழியில் வனத்துறைக்கு சொந்தமான நிலத்தில் கழிப்பறை வசதி செய்யப்பட்டுள்ளது.
* பம்பையிலிருந்து சன்னிதானத்திற்கு செல்லும் போது கூட்டத்தின் அளவை கண்டு அதற்கேற்ப செல்லலாம்.
* டோலியை பயன்படுத்துபவர்கள் தேவஸ்தான அலுவலகத்தில் மட்டும் பணம் செலுத்தி ரசீதை வைத்துக் கொள்ளவும்.
* பாதுகாப்பு சோதனை சாவடிகளில் பாதுகாப்பு சோதனைக்கு ஒத்துழைக்க வேண்டும்.
* இலவச உதவி எண் 14432ஐ பயன்படுத்தி எந்தவித உதவிக்கும் காவல்துறையை அணுகலாம்.

* சந்தேகத்திற்கிடமான நபர்கள் இருந்தால் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கவும்.
* உரிமம் பெற்ற விற்பனை நிலையங்களில் மட்டுமே உணவு பொருட்களை வாங்கவும்.
* பம்பை, சன்னிதானம் மற்றும் மலையேற்ற பாதைகளை சுத்தமாக வைத்திருக்க உதவுங்கள்.
* ஒதுக்கப்பட்ட வாகன நிறுத்தங்களில் மட்டுமே வாகனங்களை நிறுத்தவும்.

* குப்பை தொட்டிகளில் மட்டுமே குப்பையை போடவும்.
* பயண பாதையில் தேவைப்பட்டால், மருத்துவ மையங்கள் மற்றும் ஆக்சிஜன் பார்லர்களின் வசதிகளை பெற்றுக்கொள்ளலாம்.
* குழந்தைகள் மற்றும் வயது முதிர் பெண்கள் (பழைய மாளிகபுரம்) ஒவ்வொருவரும் முகவரி, ரிஸ்ட் பேண்ட், ஆர்ம் பேண்ட் கொண்ட அடையாள அட்டைகள் அணிந்திருக்க வேண்டும்.
* குழுக்கள், நண்பர்களிடமிருந்து தனிமைப்படுத்தப்பட்டால் பக்தர்கள் காவல் உதவி மையங்களில் உதவி பெறலாம்.

செய்ய கூடாதவை என்னென்ன?
* சொப்பணத்தை புகைப்படம் எடுக்க மொபைல் போன் பயன்படுத்த கூடாது.
* பம்பை, சன்னிதானம் மற்றும் வழியில் புகை பிடிக்க வேண்டாம்.
* மது அல்லது போதைப்பொருள் உட்கொள்ள வேண்டாம்.
* வரிசையில் முன்செல்ல தாவிக்குதிக்க வேண்டாம்.

* ஆயுதங்கள் அல்லது வெடி பொருட்களை எடுத்து செல்ல ேவண்டாம்.
* அங்கீகரிக்கப்படாத விற்பனையாளர்களை ஊக்கப்படுத்த ேவண்டாம்.
* எந்த சேவைக்கும் கூடுதல் கட்டணம் செலுத்த ேவண்டாம்.
* குப்பை தொட்டிகளை தவிர வேறு எங்கும் குப்பையை வீச வேண்டாம்.
* பதினெட்டாம் படியின் இருபுறமும் ஒதுக்கப்பட்ட இடங்களை தவிர வேறு எங்கும் தேங்காய் உடைக்க வேண்டாம்.

* பதினெட்டாம் படியில் ஏறும் போது படிகளில் மண்டியிட வேண்டாம்.
* தரிசனம் முடிந்து நடைபந்தல் மேம்பாலத்தை தவிர வேறு எந்த பாதையையும் பயன்படுத்த வேண்டாம்.
* மேல் திருமுட்டம் அல்லது தந்திரிநாடிற்கு அருகில் உள்ள இடங்களில் ஓய்வெடுக்க ேவண்டாம்.
* நடைபந்தல் மற்றும் கீழ் திருமுட்டம் ஆகியவற்றில் தரை விரிப்புகளுக்கு நடைபாதைகளை பயன்படுத்த ேவண்டாம்.
* மலை ஏறும் போது முகமூடி அணிவது பரிந்துரைக்கப்படவில்லை.

The post ஆன்லைனில் முன்பதிவு செய்த தினத்தில் மட்டுமே தரிசனம்: சபரிமலை பக்தர்களுக்கு தமிழ்நாடு காவல்துறை வேண்டுகோள் appeared first on Dinakaran.

Tags : Darshan ,Tamil Nadu Police ,Sabarimala ,CHENNAI ,Ayyappa ,
× RELATED தென்னகத்தின் சபரிமலை என...