×

விளாத்திகுளம் அருகே கே.துரைசாமிபுரத்தில் காட்டுப்பன்றிகள் அட்டகாசத்தால் பயிர்கள் நாசம்

விளாத்திகுளம், டிச.2: விளாத்திகுளம் அருகே கே.துரைச்சாமிபுரம் கிராமத்தில் விளைநிலத்தில் புகுந்த காட்டுப்பன்றிகள் பயிர்களை நாசம் செய்து வருவதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். விளாத்திகுளம் தொகுதி விவசாயிகள் பருவமழையை நம்பியே ஆண்டு முழுவதும் விவசாயம் செய்து வருகின்றனர். கடந்த சில ஆண்டுகளாக வறட்சியாலும், கனமழை வெள்ளத்தாலும் பயிர்கள் நாசமாகின. இருப்பினும் வங்கிகள், தனி நபரிடமும் கடன் பெற்று வேளாண் பணியை தொடர்ந்து செய்து வருகின்றனர். இந்தாண்டும் மிளகாய், உள்ளி, பாசி உள்ளிட்ட பல்வேறு பயிர்களை நடவு செய்துள்ள விவசாயிகள் களை எடுக்கும் பணியில் தீவிரம் காட்டி வருகின்றனர்.

இதேபோல் புதூர் யூனியனுக்கு உட்பட்ட கே.துரைசாமிபுரத்தில் உளுந்து, பாசி, மிளகாய், உள்ளி, சோளம், மக்காச்சோளம், வெள்ளைச் சோளம், மல்லி, சூரியகாந்தி உள்ளிட்ட பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளன. ஆனால் போதிய மழையின்மை காரணமாக மிளகாய், பாசி பயிர்கள் விளைச்சல் திறன் இல்லாமல் பாதிக்கப்பட்டன. இதையடுத்து மீண்டும் நிலத்தை 2வது முறையாக உழுது பயிரிட்டு வந்த நிலையில் தற்போது காட்டுப்பன்றிகள் புகுந்து பயிர்களை நாசம் செய்து வருவதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

இதுகுறித்து கே.துரைச்சாமிபுரம் விவசாயி சரவணகுமார் கூறுகையில் ‘‘காடல்குடி பிர்காவிற்கு உட்பட்ட கே.துரைசாமிபுரத்தில் மிளகாய், உள்ளி, பாசிப்பயறு, சூரியகாந்தி உள்ளிட்ட பயிர்கள் பயிரிடப்பட்டுள்ளது. சரியான நேரத்தில் போதிய மழை பெய்யாததால் மிளகாய், உள்ளி உள்ளிட்ட பயிர்கள் வளர்ச்சித் திறனின்றி காய்ந்து விட்டன. இதனால் விளைநிலத்தை மீண்டும் உழுது விதைகள் விதைத்து பராமரித்து வருகிறோம். தற்போது அவ்வப்போது பெய்து வரும் மழை காரணமாக செடிகள் மிதமான அளவு வளரத்தொடங்கியுள்ளது. அதேசமயம் விட்டில் பூச்சியும் செடிகளை கடித்து சேதப்படுத்தியும் வருகிறது. போதிய விளைச்சல் இல்லாததால் என்ன செய்வது என்று தெரியாமல் தவித்து வரும் நிலையில் இரவு நேரங்களில் காட்டுப்பன்றிகள் விளை நிலத்தில் புகுந்து செடிகளை நாசம் செய்து வருகிறது. விவசாயிகள் காட்டு பன்றியை தடுக்கச் சென்றால் கடித்து காயப்படுத்தி விடுகிறது. எனவே மாவட்ட நிர்வாகம் துரிதமாக செயல்பட்டு காட்டு பன்றிகளிடமிருந்து விவசாயிகளையும் விவசாய நிலங்களையும் காப்பாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றாா்.

காப்பீடு தொகையை முழுமையாக வழங்க கோரிக்கை
கடந்தாண்டு டிசம்பரில் தொடர்ந்து பெய்த கனமழையால் விளாத்திகுளம் தொகுதி முழுவதும் உள்ள விவசாய நிலங்களில் வெள்ள நீர் புகுந்து முழுமையாக விவசாயம் பாதிக்கப்பட்டது. அதே சமயம் விளாத்திகுளம் தொகுதி ஏழை விவசாயிகள் வழக்கம் போல் கடைசி நேரத்தில்தான் பயிர் காப்பீடு செய்யலாம் என்று இருந்தனர். ஆனால் திடீரென ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக விவசாயம் முற்றிலும் பாதிக்கப்பட்டது. மழை பாதிப்புக்கு பின்பு மிளகாய், உள்ளி போன்ற பயிர்களுக்கு காப்பீடு செய்ய தேதி இருந்ததால் வெள்ளத்திற்கு பின்பு ஏராளமான விவசாயிகள் பயிர் காப்பீடு செய்தனர். அவ்வாறு மழை வெள்ளத்திற்கு பின்பு பயிர் காப்பீடு செய்த விவசாயிகளுக்கு இதுவரையில் இன்சூரன்ஸ் தொகை வழங்கப்படாமல் உள்ளது. அவர்களுக்கு இன்சூரன்ஸ் தொகை கிடைக்குமா? கிடைக்காதா? என்ற அச்சம் உள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் மழை வெள்ளத்துக்கு பின்பு காப்பீடு செய்ய அரசு வழங்கிய தேதிக்குள் பயிர் காப்பீடு செய்த விவசாயிகளுக்கு முழுமையான இன்சூரன்ஸ் தொகை வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post விளாத்திகுளம் அருகே கே.துரைசாமிபுரத்தில் காட்டுப்பன்றிகள் அட்டகாசத்தால் பயிர்கள் நாசம் appeared first on Dinakaran.

Tags : K. Duraisamipuram ,Vlathikulam ,K. Thuraichamipuram ,Dinakaran ,
× RELATED விளாத்திகுளம் அருகே மந்திக்குளம்...