களக்காடு, டிச.2: களக்காடு அருகே விளைநிலங்களுக்குள் புகுந்து காட்டு பன்றிகள் அட்டகாசம் செய்ததில் 300 வாழைகள் சேதமடைந்தது. இதனால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். களக்காடு மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் காட்டு பன்றிகள் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வனப்பகுதியில் இருந்து வெளியே வந்த காட்டு பன்றிகள் ஊர் பகுதிகளில் உள்ள கால்வாய் மற்றும் புதர்களில் தஞ்சமடைந்துள்ளதாகவும், அவைகள் உணவுக்காக விவசாய பயிர்களை துவம்சம் செய்து வருவதாகவும் விவசாயிகள் புகார் கூறுகின்றனர்.
இந்நிலையில் களக்காடு அருகேயுள்ள சிதம்பரபுரம் காட்டுபத்து விளைநிலங்களுக்குள் காட்டு பன்றிகள் கூட்டம் புகுந்தது. இதைப்பார்த்த விவசாயிகள் அவைகளை விரட்ட முயற்சி செய்தனர். ஆனால் காட்டு பன்றிகள் நாலாபுறங்களில் இருந்தும் வேலிகளை சாய்த்து விட்டு, விளைநிலங்களுக்குள் புகுந்ததால் விவசாயிகள் செய்வதறியாது தவித்தனர். இருப்பினும் சத்தங்களை எழுப்பி விரட்டினர். எனினும் காட்டு பன்றிகள் அங்கு பயிர் செய்யப்பட்டிருந்த 300க்கும் மேற்பட்ட வாழைகளை பிடுங்கி எறிந்து சேதப்படுத்தின. நாசமான வாழைகள் பயிரிடப்பட்டு 4 மாதமான ஏத்தன், ரசகதலி ரக வாழைகள் ஆகும். இவைகள் சிதம்பரபுரத்தை சேர்ந்த விவசாயி சுந்தரராஜ் (42) என்பவருக்கு சொந்தமானது ஆகும். காட்டு பன்றிகள் அட்டகாசத்தால் விவசாயிகளுக்கு பெருமளவில் இழப்பு ஏற்பட்டு வருகிறது.
வாழைகளுக்கு இழப்பீடு குறைவு
இதுபற்றி விவசாயிகள் கூறுகையில், ‘காட்டு பன்றிகள் அட்டகாசத்தால் விவசாயிகளின் உயிருக்கும், பயிர்களுக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. காட்டுப்பன்றிகள் தினமும் ஊருக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருவதால் விவசாயிகளுக்கு பெரும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. எனவே காட்டு பன்றிகளை வனவிலங்குகள் பட்டியலில் இருந்து நீக்கி அரசாணை வெளியிட வேண்டும். ஒரு வாழைக்கு ரூ.200 வரை செலவு செய்ய வேண்டியதுள்ளது. ஆனால் காட்டு பன்றிகளால் சேதமடையும் வாழைகளுக்கு வனத்துறையினர் மிக குறைந்தளவில் இழப்பீடு வழங்குகின்றனர்’ என்றனர்.
The post களக்காடு அருகே விளைநிலங்களுக்குள் புகுந்து காட்டு பன்றிகள் அட்டகாசம் appeared first on Dinakaran.