×

சொந்த மண்ணில் நொந்த நியூசிலாந்து 8 விக். வித்தியாசத்தில் இங்கி. சாதனை வெற்றி

கிறிஸ்ட்சர்ச்: இங்கிலாந்துடனான முதல் டெஸ்டின் 2வது இன்னிங்சிலும் சொதப்பலாக ஆடிய நியூசிலாந்து கிரிக்கெட் அணி 254 ரன்னுக்கு ஆட்டமிழந்தது. இதையடுத்து எளிய இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணி 12.4 ஓவர்களில் 104 ரன் குவித்து 8 விக்கெட் வித்தியாசத்தில் மகத்தான வெற்றி பெற்றுள்ளது. நியூசிலாந்து நாட்டுக்கு பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து கிரிக்கெட் அணி சுற்றுப்பயணம் சென்றுள்ளது. அங்கு, நியூசி அணியுடன் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து பங்கேற்கிறது.

கடந்த நவ. 28ம் தேதி துவங்கிய முதல் டெஸ்டில் முதலில் ஆடிய நியூசி. அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 348 ரன் எடுத்தது. பின் முதல் இன்னிங்சை ஆடிய இங்கிலாந்து அணி சிறப்பாக ஆடி, 499 ரன் குவித்தது. அந்த அணியின் ஹேரி புரூக் 171, ஓல்லி போப் 77, கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 80 ரன் குவித்தனர். நேற்று முன்தினம் 3ம் நாள் ஆட்ட நேர முடிவில் நியூசிலாந்து அணி 2வது இன்னிங்சில், 6 விக்கெட் இழப்புக்கு 155 ரன் எடுத்திருந்தது. டேரில் மிட்செல் 31 ரன், நாதன் ஸ்மித் 1 ரன்னுடன் களத்தில் இருந்தனர்.

நேற்று 4ம் நாள் ஆட்டத்தை துவக்கிய நியூசிலாந்து வீரர்கள் பொறுப்பின்றி ஆடி விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். அடுத்த 49 ரன் எடுப்பதற்குள் 4 விக்கெட்டுகளை இழந்த நியூசி. 254 ரன் மட்டுமே எடுத்திருந்தது. நாதன் ஸ்மித் 21, மேட் ஹென்றி 1, டிம் சவுத்தீ 12, கடைசி விக்கெட்டாக டேரில் மிட்செல் 84 ரன் எடுத்து ஆட்டமிழந்தனர். இங்கிலாந்து பந்து வீச்சாளர் பிரைடன் கார்ஸ், 42 ரன் கொடுத்து 6 விக்கெட் வீழ்த்தினார்.

இதையடுத்து, 104 ரன் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து துவக்க வீரர்கள் ஜாக் கிராவ்லி 1 ரன்னிலும், பென் டக்கட் 27ரன்னிலும் அவுட்டாகினர். இருப்பினும், பின் வந்த ஜேகப் பெத்தேல், ஜோ ரூட் டி20 போட்டியை போன்று கதகளி ஆடினர். ஜேகப், 37 பந்துகளை எதிர்கொண்டு 1 சிக்சர் 8 பவுண்டரிகளை விளாசி அவுட்டாகாமல் 50 ரன் குவித்தார்.

ஜோ ரூட், 15 பந்துகளை சந்தித்து 1 சிக்சர் 3 பவுண்டரிகளுடன் 23 ரன் விளாசினார். இதனால், 12.4 ஓவர்களிலேயே 104 ரன்களை எட்டிப்பிடித்து இங்கி. வெற்றி வாகை சூடியது. இதையடுத்து, 3 போட்டிகள் கொண்ட இத் தொடரில், 1-0 புள்ளிக் கணக்கில் இங்கிலாந்து முன்னிலை வகிக்கிறது. இரண்டு இன்னிங்சிலும் சேர்த்து 10 விக்கெட்டுகள், முதல் இன்னிங்சில் 33 ரன் குவித்த பிரைடன் கார்ஸ் ஆட்ட நாயகனாக அறிவிக்கப்பட்டார்.

* ரன் சேசிங் வரலாற்றில் இங்கி. புதிய சாதனை
நேற்றைய போட்டியில் 2வது இன்னிங்சில், 12.4 ஓவரில் 104 ரன் விளாசிய இங்கிலாந்து அணி, டெஸ்ட் போட்டி ரன் சேசிங் வரலாற்றில் அதிவேகமாக 100க்கு மேல் ரன் குவித்த அணியாக புதிய சாதனை படைத்துள்ளது. இது, ஓவருக்கு 8.21 ரன் ரேட். இதற்கு முன், 2017ல் கிறிஸ்ட்சர்ச்சில் பாகிஸ்தானுடன் நடந்த டெஸ்ட் போட்டியில் 18.4 ஓவரில் 109 ரன் குவித்து வெற்றி பெற்ற நியூசி அணி இந்த சாதனைக்குரிய அணியாக திகழ்ந்து வந்தது.

டெஸ்ட் போட்டி ரன் சேசிங்கில் ரன் ரேட் அடிப்படையில் பார்த்தாலும், இங்கிலாந்தின் நேற்றைய ரன் குவிப்பு புதிய சாதனையை படைத்துள்ளது. இதற்கு முன், 1983ல் கிங்ஸ்டன் நகரில் நடந்த ஒரு போட்டியில் இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் ரன் சேசிங்கில் வெஸ்ட் இண்டீஸ் அணி, 6.82 ரன் ரேட்டுடன் ரன்களை குவித்ததே முந்தைய சாதனையாக இருந்தது.

The post சொந்த மண்ணில் நொந்த நியூசிலாந்து 8 விக். வித்தியாசத்தில் இங்கி. சாதனை வெற்றி appeared first on Dinakaran.

Tags : New Zealand ,Christchurch ,New Zealand cricket ,England ,Dinakaran ,
× RELATED உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் நியூசிலாந்து கனவு நொறுங்கியது