×

சென்னையில் மழைநீர் தேங்கி உள்ளதால் சில இடங்களில் வாகனங்கள் மெதுவாக செல்லும் நிலை உள்ளது: போக்குவரத்து காவல்துறை தகவல்

சென்னை: சென்னையில் இன்று காலை நிலவரப்படி, அழகப்பா சாலை, லூப் சாலை ஆகியவை மூடப்பட்டுள்ளன. மழைநீர் தேங்கி உள்ளதால் சில இடங்களில் வாகனங்கள் மெதுவாக செல்லும் நிலை உள்ளதாக சென்னை போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது. வங்கக் கடலில் உருவான ஃபெஞ்சல் புயல் புதுச்சேரி அருகே சூறைக்காற்றுடன் நேற்று இரவு 11.30 மணியளவில் முழுமையாக கரையை கடந்தது. புயலாக வலுப்பெறாது, பெரிய அளவில் மழை இருக்காது, தற்காலிக புயலாக மாறும் என, மாறி மாறி வானிலை எச்சரிக்கைகள் வெளியாகின. ஆனால், இறுதியாக வலுவான சூறாவளிக்காற்று நிறைந்த புயலாக சென்னைக்கு அருகில் ஃபெஞ்சல் புயல் கரையை கடந்துள்ளது. ஃபெஞ்சல் புயல் காரணமாக சென்னையில் நேற்று முன்தினம் தொடங்கி நேற்று முழுவதும் பெய்த கனமழை காரணமாக ஆங்காங்கே தண்ணீர் தேங்கி சென்னை பல தீவுகள் போல காட்சியளித்தது.

முக்கியமாக மக்கள் போக்குவரத்துக்குப் பயன்படுத்தும் சுரங்கப் பாதைகள் தண்ணீரால் நிரம்பி காணப்பட்டன. சென்னையில் விமானப் போக்குவரத்து சேவையும் முடங்கியது. விமானங்கள் ஓடும் தளத்தில் மழைநீர் வெள்ளக் காடாக காட்சியளித்ததால் விமான சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இதனால் ஆயிரக்கணக்கான மக்கள் விமான நிலையத்திலேயே காத்திருக்க நேரிட்டது. இந்நிலையில் புயல் நேற்று இரவு 11.30 மணியளவில் கரையைக் கடந்த நிலையில் சென்னை விமான நிலையத்தில் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டிருந்த விமான சேவைகள் மீண்டும் தொடங்கியுள்ளன. நள்ளிரவு ஒரு மணி முதல் விமான சேவைகள் திரும்பத் தொடங்கப்பட்டுள்ளன. இதேபோல, சென்னையில் சாலைகள் மழைநீரில் மூழ்கியதோடு, பிரதான சாலைகள் வெள்ளக்காடாய் காட்சி அளித்தன.

சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியதால், அத்தியாவசிய பொருட்களை வாங்க சென்றவர்களின் வாகனங்கள் கூட நடுவழியில் பாதியில் பழுதாகி நின்றன. சூறைக்காற்று வீசியதால் சாலைகளின் குறுக்கே போடப்பட்டு இருந்த தடுப்புகள் ஆங்காங்கே சிதறிக் கிடந்தன. பல இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்ததை அடுத்து, மாநகராட்சி ஊழியர்கள் அவற்றை அப்புறப்படுத்தினர். சாலைகள், சுரங்கப்பாதைகளில் மழைநீர் தேங்கியதால் பல பகுதிகளில் பொதுபோக்குவரத்து முடங்கியது. இந்நிலையில், மழைநீர் வடிந்து பெரும்பாலான பகுதிகளில் போக்குவரத்து சீரடைந்துள்ளது. அதேசமயம், சில இடங்களில் மழைநீர் இன்னும் தேங்கி நிற்பதால் அப்பகுதிகளில் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. அழகப்பா சாலை, லூப் சாலை ஆகியவை மூடப்பட்டுள்ளன. புயல் காற்றின் காரணமாக பட்டினப்பாக்கம் லூப் சாலையில் அதிக மணல் நிரம்பியுள்ளதால், வாகன ஓட்டிகள் கவனமாக செல்ல அறிவுறுத்தப்பட்டது. பர்னாபி சாலை, நாகேஸ்வரா பூங்கா, அண்ணா மேம்பாலம் சர்வீஸ் சாலை, ஸ்ரீமான் ஸ்ரீநிவாசா சாலை ஆகிய பகுதிகளில் மழைநீர் தேங்கி உள்ளதால் போக்குவரத்து மெதுவாக செல்லும் நிலை உள்ளது.

போக்குவரத்து மாற்றம்:

1. அழகப்பா சாலை மூடப்பட்டுள்ளது. அவ்வழியாக வரும் வாகனங்கள் புரசைவாக்கம் நெடுஞ்சாலை வழியாக திரும்பி டாக்டர்.நாயர் பாயிண்ட் சென்று ஈவிஆர் சாலையை அடையலாம்.

2. லூப் சாலை (மூடப்பட்டது)- அவ்வழியாக வரும் வாகனங்கள் சாந்தோம் ஹை ரோடு வழியாக சென்று தங்கள் இலக்கை அடையாளம்.

சாலைகளில் விழுந்த மரம்: திருமலைபிள்ளை சாலை கேமரா மற்றும் சிக்னல் கம்பம் கீழே விழுந்தது

i. திருமலைப் பிள்ளை சிக்னல் (R4 பாண்டி பஜார்)

ii. காந்தி இர்வின் பிரிட்ஜ் டாப் சிக்னல் போஸ்ட் (F-2 எழும்பூர்)

The post சென்னையில் மழைநீர் தேங்கி உள்ளதால் சில இடங்களில் வாகனங்கள் மெதுவாக செல்லும் நிலை உள்ளது: போக்குவரத்து காவல்துறை தகவல் appeared first on Dinakaran.

Tags : Chennai ,Ahagappa Road ,Loop Road ,Chennai Traffic Police ,Storm Fengel ,Bank Sea ,Traffic Police ,
× RELATED லூப் சாலையை மறு சீரமைப்பு செய்ய சென்னை மாநகராட்சி முடிவு