சென்னை: மழை வெள்ள களப்பணிகளில் ஈடுபட 18,500 தன்னார்வலர்கள் பதிவு செய்துள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. இது குறித்து சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளதாவது: மழைநீரை வெளியேற்றும் வகையில் பல்வேறு திறன் கொண்ட 1,686 மோட்டார் பம்புகள் பயன்பாட்டில் உள்ளன. தற்போது 100பிஜீ மோட்டார் பம்புகள் 137 எண்ணிக்கையில் பயன்பாட்டில் உள்ளன. தற்போது தயார் நிலையில் டிராக்டர் மேல் 484 மோட்டார் பம்புகள் பொருத்தப்பட்டு பயன்பாட்டில் உள்ளன.
தற்போது பெய்த மழையின் காரணமாக 134 இடங்களில் நீர்த்தேக்கம் ஏற்பட்டு, 8 இடங்களில் மழைநீர் வெளியேற்றப்பட்டுள்ளது. மீதமுள்ள 126 இடங்களில் துரிதமாக மழை நீர் அகற்றும் பணி போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.சென்னை மாநகராட்சி பகுதிகளில் விழும் மரங்களை அகற்ற ஹைட்ராலிக் மர அறுவை இயந்திரங்கள் 9 , ஹைட்ராலிக் ஏணி 2 , மர அறுவை இயந்திரங்கள் 262 , டெலஸ்கோபிக் மர அறுவை இயந்திரங்கள் 216 என மொத்தம் 489 இயந்திரங்கள் பயன்பாட்டில் உள்ளன.
சென்னையில் உள்ள 22 சுரங்கப்பாதைகளில், கணேசபுரம் சுரங்கப்பாதையில் ரயில்வே மேம்பாலப் பணி காரணமாக தற்காலிகமாக போக்குவரத்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள சுரங்கப்பாதைகளில் போக்குவரத்து சீராக உள்ளது. சென்னை மாநகராட்சி சார்பில் 329 இடங்களில் நிவாரண மையங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. இந்த மையங்களில் உணவு, சுகாதார வசதி, குடிநீர் வசதி செய்யப்பட்டுள்ளன.
சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் நிவாரண மையங்களுக்கு உணவு வழங்க 120 மைய சமையல் கூடங்கள் தயார் நிலையில் உள்ளன. தாழ்வான பகுதிகளில் உள்ள பொதுமக்களை மீட்டு நிவாரண மையங்களில் தங்க வைப்பதற்காக 103 படகுகள் தயார்நிலையில் உள்ளது. இதில் 36 படகுகள் மாநகராட்சிக்கு சொந்தமாக வாங்கி தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. மழைக்காலத்தினை முன்னிட்டு, 15.10.2024 முதல் 29.11.2024 வரை சென்னையில் மட்டும் இதுவரை 2,615 மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டது. இதன் மூலம் 1,39,187 நபர்கள் பயனடைந்துள்ளனர்.
15.10.2024 முதல் 30.11.2024 வரை பொதுமக்களிடமிருந்து மழைத் தொடர்பாக 1913 என்ற உதவி எண்ணிற்கு 47,873 புகார்கள் பெறப்பட்டு, 39,619 புகார்களுக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 8,254 புகார்களுக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.வடகிழக்குப் பருவமழையினை முன்னிட்டு சென்னை மாநகராட்சியில் அலுவலர்கள், பொறியாளர்கள், பணியாளர்கள், தூய்மைப் பணியாளர்கள் உள்ளிட்ட 22 ஆயிரம் பேர் மழை வெள்ள மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். மழை வெள்ள களப்பணிகளில் ஈடுபட 18,500 தன்னார்வலர்கள் பதிவு செய்துள்ளனர்.
The post மழை வெள்ள களப்பணிகளில் ஈடுபட இதுவரை 18,500 தன்னார்வலர்கள் பதிவு: சென்னை மாநகராட்சி தகவல் appeared first on Dinakaran.