×

சென்னை விமான நிலையம் தற்காலிக மூடல் மதுரை, திருச்சி, தூத்துக்குடி, கோவை விமானங்கள் ரத்து: பயணிகள் அவதி

சென்னை: புயல் காரணமாக பெய்து வரும் கனமழையால் சென்னை விமான ஓடுதளத்தில் மழைநீர் தேங்கி உள்ளது. இதனால் சென்னை விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டதால் மதுரை, திருச்சி, தூத்துக்குடி, கோவையில் இருந்து சென்னை வர வேண்டிய விமானங்கள் ரத்து செய்யப்பட்டது. வங்கக்கடலில் தோன்றியுள்ள பெஞ்சல் புயலால் சென்னையில் நேற்று முன்தினம் இரவு முதல் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால், சென்னை விமான நிலைய ரன்வேயில் தண்ணீர் தேங்கி, விமானங்களை தரையிறக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

நேற்று காலை 6.45 மணியளவில் சென்னையில் இருந்து மதுரைக்கு தனியார் விமானம் ஒன்று வந்தது. பின்னர் இங்கிருந்து 66 பயணிகளுடன் காலை 8.15 மணிக்கு மீண்டும் சென்னைக்கு புறப்பட்டு சென்றது. ஆனால், செல்லும் வழியில் சென்னையில் விமானங்களை தரையிறக்க முடியாது என பைலட்டுக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து அந்த விமானம் மீண்டும் மதுரைக்கு திருப்பி விடப்பட்டு, மதுரை விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது. ஏறிய இடத்திற்கே மீண்டும் இறக்கி விடப்பட்டதால் பயணிகள் அவதியடைந்தனர்.

தொடர் மழையால் ஓடுதளத்தில் மழைநீர் தேங்கி நிற்கிறது. இதனால் சென்னை விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டதால் சென்னை – மதுரை, மதுரை- சென்னை விமானங்கள் அனைத்தும் ரத்தானது. நேற்று காலை 10.05 மணி, காலை 11.20 மணி, பகல் 12.30 மணி, மதியம் 1.40 மணி, மாலை 3 மணி, மாலை 5 மணி, மாலை 6.25 மணி என இரவு வரையிலும் மதுரை வந்து, திரும்பும் விமானங்கள் அனைத்தும் ரத்தானது. இதனால் பயணிகள் விமானநிலையத்தில் பல மணி நேரம் காத்திருந்து பெரும் அவதிக்கு ஆளாகினர்.

இதேபோல், கோவை விமான நிலையத்தில் இருந்து நேற்று காலை 10 மணி, காலை 11.35 மணி, மதியம் 2.10 மணி, மாலை 4.05 மணிக்கு சென்னைக்கு புறப்பட வேண்டிய விமானங்கள் ரத்து செய்யப்பட்டது. இதனால் கோவையிலிருந்து சென்னைக்கு செல்ல விமான டிக்கெட் புக்கிங் செய்த பயணிகள் ஏமாற்றமடைந்தனர். இன்றும் கோவையிலிருந்து சென்னைக்கான விமான சேவை இருக்குமா என்ற சந்தேகம் நிலவுகிறது. திருச்சியில் இருந்து சென்னை செல்லவிருந்த 4 இண்டிகோ விமானங்கள் நேற்று ரத்து செய்யப்பட்டது.

இதே வானிலை நீடித்தால் இன்றும் (1ம் தேதி) சென்னை செல்லும் விமானங்கள் ரத்தாக வாய்ப்புள்ளது என திருச்சி ஏர்போர்ட் அதிகாரிகள் தெரிவித்தனர். தூத்துக்குடியில் இருந்து நேற்று சென்னை செல்ல வேண்டிய 5 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. சென்னையில் இருந்து நேற்று காலை ஒரே ஒரு விமானம் மட்டும் தூத்துக்குடி சென்றது. மற்ற விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.

இன்று (1ம் தேதி) காலை 6 மணிக்கு சென்னையில் இருந்து புறப்பட்டு தூத்துக்குடிக்கு காலை 7.15 மணிக்கு வந்தடையும் விமானமும், இங்கிருந்து 7.45 மணிக்கு சென்னை செல்லும் விமானமும் ரத்து செய்யப்பட்டுள்ளது. காலை 9 மணிக்கு சென்னையில் இருந்து புறப்படும் விமானம் வழக்கம்போல தூத்துக்குடி வந்தடையும் என அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். இதேபோல், சேலத்தில் இருந்து சென்னை செல்ல வேண்டிய ஒரு விமானமும் நேற்று ரத்து செய்யப்பட்டது.

* தூத்துக்குடி விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டலால் பரபரப்பு சென்னையில் இருந்து நேற்று காலை  7.15 மணிக்கு தூத்துக்குடி ஒரு விமானம் சென்றது. இதில் சட்டீஸ்கர் மாநில முன்னாள் அமைச்சர் மகேஷ் ககாடா வந்துள்ளார். இவர், அங்கிருந்து காரில் திருச்செந்தூர் புறப்பட்டு சென்றுள்ளார். முன்னாள் அமைச்ர் மகேஷ் ககாடாவுக்கு ஏற்கனவே நக்சல்கள் அச்சுறுத்தல் உள்ளதால் ஒன்றிய அரசு அவருக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்கி உள்ளது. இந்நிலையில் நேற்று மதியம் தூத்துக்குடி விமான நிலையத்திற்கு இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்தது.

இதையடுத்து வெடிகுண்டு நிபுணர்கள், மெட்டல் டிடெக்டர்கள், மோப்பநாய்கள் உதவியுடன் தூத்துக்குடி விமான நிலையத்தில் அங்குலம் அங்குலமாக சோதனை நடத்தினர். இதில் எந்த வெடி பொருட்களும் சிக்கவில்லை. சோதனை காரணமாக நேற்று மதியம் 2.15 மணிக்கு பெங்களூருவில் இருந்து தூத்துக்குடி வந்த விமானம் 2.45 மணிக்கு பதிலாக மாலை 3.30 மணிக்கு புறப்பட்டு சென்றது.

தொடர்ந்து விமான நிலையத்தில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. இன்றும் தீவிர சோதனைக்கு பிறகே பயணிகள் பயணம் செய்ய அனுமதிக்கப்படுவர் என அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். இதனிடையே திருச்செந்தூர் கோயிலுக்கு சென்று திரும்பிய முன்னாள் அமைச்சர் மகேஷ் ககாடா, நேற்றிரவு தூத்துக்குடியில் இருந்து ரயில் மூலம் சென்னைக்கு புறப்பட்டு சென்றார்.

The post சென்னை விமான நிலையம் தற்காலிக மூடல் மதுரை, திருச்சி, தூத்துக்குடி, கோவை விமானங்கள் ரத்து: பயணிகள் அவதி appeared first on Dinakaran.

Tags : Chennai airport ,Madurai ,Trichy ,Tuticorin ,Coimbatore ,CHENNAI ,Thoothukudi ,Bay of Bengal ,Dinakaran ,
× RELATED விமான தாமதம், ரத்து ஆவதற்கு...