×

ஒகேனக்கல் உபரிநீர் திட்டத்தை நிறைவேற்ற நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கை எதிர்கொள்ள வேண்டும்

* குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தல்

தர்மபுரி : ஒகேனக்கல் உபரிநீர் திட்டத்தை நிறைவேற்ற, நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கை மாவட்ட நிர்வாகம் எதிர்கொள்ள வேண்டும் என குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினர்.தர்மபுரி மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், கலெக்டர் சாந்தி தலைமையில் நேற்று நடந்தது.

இதில் விவசாய சங்க நிர்வாகிகள், விவசாயிகள், அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் தமிழ்நாடு விவசாய சங்க செயலாளர் சின்னசாமி பேசுகையில், ‘ஒகேனக்கல் காவிரி உபரிநீர் திட்டம் நிறைவேற்றப்பட வேண்டிய நேரத்தில், தஞ்சாவூர் பகுதியில் ஒருவர் வழக்கு தொடர்ந்துள்ளார்.

தர்மபுரி மாவட்ட விவசாயிகளின் நலன் கருதி, மாவட்ட நிர்வாகம் அதை எதிர்த்து வழக்கு தொடர்ந்து, ஒகேனக்கல் உபரிநீர் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும். தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஏரிகளில் கருவேலமரங்கள் வளர்ந்து காடுபோல் உள்ளன. இதனால் நீர் தேங்காத நிலை ஏற்படுகிறது. எனவே, மாவட்டத்தில் உள்ள ஏரிகளில் கருவேல மரங்களை அகற்றி, தூர்வார வேண்டும். பால்விலையை உயர்த்தி வழங்க வேண்டும்,’ என்றார்.

விவசாயி முரளி பேசுகையில், ‘தர்மபுரி மாவட்டத்தில் வனவிலங்குகளால் விளை பயிர்கள் பாதிக்கப்படுவதை தடுக்க, விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்க வேண்டும். வனவிலங்குகளால் பயிர்கள் சேதமாவதை தடுக்க, அதிகாரிகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும். மயில்களின் இனப்பெருக்கத்தை தடுக்க, குள்ளநரிகளை வேறு மாவட்டங்களிலிருந்து வாங்கி வந்து, தர்மபுரி மாவட்ட வனப்பகுதிகளில் விட வேண்டும். நெல்லில் நோய் தாக்குதல் உள்ளது. மரவள்ளி விலை நிர்ணயம் செய்ய முத்தரப்பு கூட்டத்தை கலெக்டர் கூட்ட வேண்டும்,’ என்றார்.

விவசாயி சக்திவேல் கூறுகையில், ‘வாணியாறு அணை நிரம்பி உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. தற்போது ஆலாபுரம் ஏரி வரை நீர் உள்ளது. ஆலாபுரம் ஏரி நிரம்பியவுடன் இந்த உபரிநீர் தென்கரைக்கோட்டை ஏரி வரை கொண்டு செல்ல வேண்டும். இதற்கு பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆலாபுரத்தின் ஏரி மதகுகள் அடைத்தால் தென்கரைக்கோட்டை வரை உபரிநீர் வரும்.

கடந்த ஆண்டு வாணியாறு அணையில் இருந்து திறந்துவிடப்பட்ட நீர் தென்கரைக்கோட்டை ஏரிக்கு வரவில்லை. தற்போது வரக்கூடிய நீராவது வரட்டும். நடப்பாண்டு போதிய மழை பெய்யவில்லை என்பதால், தர்மபுரி மாவட்டத்தில் வறட்சி நிலவுகிறது. நிலத்தடிநீர் மட்டம் கீழே சென்றுவிட்டது. இதை சீர் செய்ய உபரிநீர் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும்,’ என்றார்.விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு பதிலளித்து கலெக்டர் சாந்தி பேசியதாவது:

ஒகேனக்கல் உபரிநீர் திட்டம் அரசு பார்வையில் உள்ளது. வழக்கு போட்டது தொடர்பாக விவாதித்து, அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும். ஏரியில் உள்ள கருவேல மரங்கள், தன்னார்வ நிறுவனங்கள் உதவியுடன் அகற்றப்படும். மயில்களின் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்த இயற்கையான முறையில் கலந்தாய்வு நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும். வாணியாறு உபரிநீர் தென்கரைக்கோட்டை ஏரிக்கு செல்ல நடவடிக்கை எடுக்கப்படும்.

மரவள்ளி விலை நிர்ணயம் செய்வது குறித்து, விரைவில் முத்தரப்பு கூட்டம் நடத்தப்படும். தர்மபுரி மாவட்டத்தில் கடந்த ஜனவரி முதல் இதுவரை 649.46 மி.மீ மழை பெய்துள்ளது. மாவட்டத்தின் ஆண்டு சராசரி மழையளவு 942 மி.மீ ஆகும். வேளாண்மை உழவர் நலத்துறையில் 2024-25ம் ஆண்டிற்கு 1,72,280 ஹெக்டர் பரப்பளவில் நெல், சிறுதானியங்கள், பயிறுவகைகள் உள்ளிட்ட உணவு தானியபயிர்கள் மற்றும் எண்ணெய் வித்துக்கள், பருத்தி, கரும்பு சாகுபடி பரப்பாக இலக்கு நிர்ணயிக்கப்பட்டதில், தற்போது வரை 1,35,318 ஹெக்டர் பரப்பு சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.

இக்கூட்டத்தில், டிஆர்ஓ கவிதா, கோபாலபுரம் சுப்பரமணிய சிவா கூட்டுறவு சர்க்கரை ஆலை டிஆர்ஓ பிரியா, தர்மபுரி மாவட்ட கூட்டுறவு சர்க்கரை ஆலை (பாலக்கோடு) டிஆர்ஓ ரவி, வேளாண்மை இணை இயக்குநர் மரியரவி ஜெயக்குமார், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் சரவணன், வேளாண்மை பொறியியல் துறை செயற்பொறியாளர் அறிவழகன், கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குநர் (பொ) இளவரசன், தோட்டக்கலைத்துறை துணை இயக்குநர் பாத்திமா, அரசுத்துறை அலுவலர்கள், விவசாய சங்க பிரதிநிதிகள் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.

The post ஒகேனக்கல் உபரிநீர் திட்டத்தை நிறைவேற்ற நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கை எதிர்கொள்ள வேண்டும் appeared first on Dinakaran.

Tags : Okanagan ,Dharmapuri ,Okenakal ,Redressal Day ,Collector ,Shanti ,
× RELATED பொதுமக்கள் குறை தீர்க்கும் சிறப்பு முகாம்