×

கொரட்டூர் ஏரியை ஆக்கிரமித்து கட்டப்பட்ட 5 வீடுகள் அகற்றம்: நீர்வளத்துறை நடவடிக்கை

அம்பத்தூர், நவ.30: அம்பத்தூர் அடுத்துள்ள கொரட்டூர் ஏரி, 590 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. சுற்றுப் பகுதிகளில் உள்ள 7 கிராம மக்களுக்கு நிலத்தடி நீர் ஆதாரமாக ஏரி அமைந்துள்ளது. கடந்த 35 ஆண்டுகளுக்கு முன்பு வரை, இந்த ஏரியை சுற்றியுள்ள விளை நிலங்கள் விவசாயம் செய்வதற்கு இந்த ஏரி நீர் பயன்பட்டு வந்தது. நாளுக்கு நாள் ஆக்கிரமிப்புகள் அதிகரித்ததுடன், ஆக்கிரமிப்பு வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் ஏரியில் விடப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக, வருவாய் துறை மற்றும் நீர்வள துறைக்கு புகார்கள் சென்றன. இதனையடுத்து, ஏரியை ஆக்கிரமித்து கட்டப்பட்ட 55க்கும் மேற்பட்ட வீடுகள் அகற்றப்பட்டன.

இதனிடையே, ஆர்.கே.தட்சன் நகரில் உள்ள 5 ஆக்கிரமிப்பு வீடுகளை, கடந்த 2 மாதங்களுக்கு முன் அதிகாரிகள் இடிக்க முயன்றபோது, அதன் உரிமையாளர்கள், 2 மாதம் அவகாசம் கேட்டு, நீதிமன்றத்தில் தடை ஆணை பெற்றனர். இந்த அவகாசம் முடிந்ததால் நீர்வளத்துறை, வருவாய்த்துறை அதிகாரிகள் ஓரிரு தினங்களில் மேற்கண்ட ஆக்கிரமிப்பு வீடுகள் இடிக்கப்படும் என கடந்த 25ம் தேதி அறிவித்தனர். அதன்படி, ஆர்.கே.தட்சன் நகருக்கு, நேற்று காலை வட்டாட்சியர் மணவாளன் மற்றும் நீர்வளத்துறை உதவி செயற் பொறியாளர் கவுரி சங்கர், வருவாய்த்துறை அதிகாரிகள் வந்து, 3,000 சதுர அடிக்கும் மேல் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த 5 வீடுகளை பொக்லைன் இயந்திரங்கள் மூலம் இடித்து அகற்றினர். முன்னதாக, அந்த வீடுகளில் இருந்தவர்கள் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர். அசம்பாவிதங்களை தவிர்க்க போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

The post கொரட்டூர் ஏரியை ஆக்கிரமித்து கட்டப்பட்ட 5 வீடுகள் அகற்றம்: நீர்வளத்துறை நடவடிக்கை appeared first on Dinakaran.

Tags : Koratur Lake ,Water Resources Department ,Ampathur ,Korattur lake ,
× RELATED தமிழ்நாடு நீர்வளத்துறையில் மின்னணு...