×

அசைவ உணவு சாப்பிட வேண்டாம் என்று கூறியதால் வீடியோ காலில் பேசிக் கொண்டே பெண் விமானி தூக்கிட்டு தற்கொலை: மகாராஷ்டிராவில் காதலன் கைது


அந்தேரி: அசைவ உணவு சாப்பிட வேண்டாம் என்று காதலன் கூறியதால் வீடியோ காலில் பேசிக் கொண்டே மகாராஷ்டிரா பெண் விமானி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். மகாராஷ்டிரா மாநிலம் அந்தேரியில் (கிழக்கு) இருக்கும் வாடகை வீட்டில் ஏர் இந்தியா பெண் விமானி சிருஷ்டி துலி (25) வசித்து வந்தார். இவர் ஆதித்யா ராகேஷ் பண்டிட் (27) என்பவரை காதலித்து வந்தார். இருவரும் ஜாலியாக இருந்தனர். இந்நிலையில் அவர்களுக்குள் சண்டை ஏற்பட்டது. திடீரென காதலன் ஆதித்யா ராகேஷ் பண்டிட் டெல்லி செல்வதாக கூறிவிட்டு புறப்பட்டார். ஆனால் டெல்லி செல்வதை சிருஷ்டி துலி தடுத்தார். அதனால் இருவருக்கும் மேலும் சண்டை வந்தது. அங்கிருந்து காரில் கிளம்பிய ஆதித்யாவை தொடர்பு கொண்ட சிருஷ்டி, தான் தற்கொலை செய்து கொள்வதாக வீடியோ காலில் பேசியுள்ளார். ஆனால் காதலியின் மிரட்டலை ஆதித்யா தீவிரமாக எடுத்துக் கொள்ளவில்லை.

இருந்தாலும் வீடியோ காலில் பேசிக் கொண்டே, சிருஷ்டி துலி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அதிர்ச்சியடைந்த ஆதித்யா, மீண்டும் அந்தேரிக்கு வந்தார். வீட்டின் கதவை திறக்க முயன்ற போது உள்தாழிட்டு இருந்தது. போலீசாருக்கு தகவல் கொடுத்தார். அவர்கள் வீட்டின் கதவை உடைத்து, தூக்கில் தொங்கிய நிலையில் இருந்த சிருஷ்டி துலியின் சடலத்தை கைப்பற்றி விசாரணை நடத்தினர். வீடியோ கால் மூலம் பேசிக் கொண்டே சிருஷ்டி துலி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. அதையடுத்து காதலன் ஆதித்யாவை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், ‘சிருஷ்டி துலியும் ஆதித்யாவும் காதலித்து வந்துள்ளனர். அசைவ உணவு சாப்பிடுவதை நிறுத்துமாறு சிருஷ்டியை ஆதித்யா கேட்டுக் கொண்டார். மேலும் தனது உணவு பழக்கத்திற்கு மாறும்படி சிருஷ்டியை ஆதித்யா கட்டாயப்படுத்தி உள்ளார். ஆனால் சிருஷ்டி அதற்கு ஒப்புக் கொள்ளவில்லை. அதனால் இருவருக்கும் அடிக்கடி சண்டை வந்துள்ளது. அதன்பின் ஆதித்யா டெல்லி செல்வதாக கிளம்பினார். தொடர்ந்து வீடியோ காலில் பேசிக் கொண்டே சிருஷ்டி துலி தற்கொலை செய்து கொண்டார். சம்பவம் நடந்த வீட்டில் தற்கொலைக் குறிப்பு கடிதம் எதுவும் கிடைக்கவில்லை. தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம்’ என்றனர்.

The post அசைவ உணவு சாப்பிட வேண்டாம் என்று கூறியதால் வீடியோ காலில் பேசிக் கொண்டே பெண் விமானி தூக்கிட்டு தற்கொலை: மகாராஷ்டிராவில் காதலன் கைது appeared first on Dinakaran.

Tags : Maharashtra ,Andheri ,Air India ,East ,
× RELATED மகாராஷ்டிரா தேர்தலில் பதிவான...