×

செல்வதற்கு வழியின்றி ஹெலிகாப்டர் இறங்கு தளத்தை சூழ்ந்து நிற்கும் மழைநீர்

*நடைபயிற்சி, விளையாட முடியாமல் தவிப்பு

மண்டபம் : மண்டபம் பகுதியில் வசித்து வரும் பொதுமக்கள் நடைபயிற்சி மற்றும் உடற்பயிற்சி செய்ய பயன்படுத்தி வரும் மண்டபம் கேம்ப் அருகாமையில் மற்றும் ராமநாதபுரம் முதல் ராமேஸ்வரம் வரை செல்லும் தேசிய நெடுஞ்சாலையின் அருகாமையில் ஹெலிகாப்டர் இறங்கும் தளம் அமைந்துள்ளது.இந்த தளத்தில் மழை நீர் சூழ்ந்துள்ளதால் கடந்த 15 நாட்களாக பொதுமக்கள் பயன் படுத்த முடியாமல் தவித்து வருகின்றன. அதுபோல கிரிக்கெட் மைதானமாக பயன்படுத்தி வந்த இளைஞர்கள் கிரிக்கெட் விளையாட முடியாமலும் தவித்து வருகின்றனர்.

மண்டபம் பேரூராட்சி மற்றும் மரைக்காயர்பட்டிணம், வேதாளை ஆகிய ஊராட்சி பகுதிகளில் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இதில் வயதானவர்கள், பணி ஓய்வு பெற்றவர்கள் மற்றும் அரசு பணியில் உள்ளவர்கள் உள்பட பலரும் நடைபயிற்சி காலை, மாலையிலும் செல்வதை வழக்கமாக வைத்துள்ளனர். இவர்கள், பயிற்சிக்கு மண்டபம் கேம்ப் அருகேயுள்ள ஹெலிகாப்டர் இறங்கு தளத்தை பயன்படுத்தி வந்தனர்.

இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பும், நேற்று பெய்த மழையால் மைதானம் முழுவதும் மழைநீர் தேக்கமடைந்தது. ஏறத்தாழ 30 ஏக்கருக்கு மேற்பட்ட இந்த நிலப்பரப்பை கொண்ட ஹெலிகாப்டர் இறங்கும் தளம் முழுவதும் மழைநீர் தேங்கியது.

மேலும் இந்த மழைநீர் வழிந்து ஓடி வெளியேறி போவதற்கு எந்த வழிகளும் இல்லை. அதுபோல இந்த மணல் பரப்பு களிமண்ணால் அமைந்துள்ளது. இதனால் மழை காலங்கள் முடிந்து வெயில் காலங்கள் வரும்போது தானாகவே தண்ணீர் வற்றினால் மட்டுமே இந்த ஹெலிகாப்டர் இறங்கும் தளத்தில் தண்ணீர் வற்றும்.

இல்லையென்றால் மழை தண்ணீர் தேங்கியபடி இருக்கும். இந்நிலையில் கடந்த 15 நாட்களாக ஹெலிகாப்டர் விளையாட்டு இறங்கு தளத்தை பயன்படுத்தி வந்த பொதுமக்கள், தற்போது பயன்படுத்த முடியாமல் தவித்து வருகின்றனர். மேலும் மண்டபம் பகுதியில் வேறு எங்கும் நடைப்பயிற்சிக்கு இடமில்லாததால் மிகவும் பொதுமக்கள் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.

ராமேஸ்வரம் முதல் உச்சிப்புளி வரை 40 கிலோ மீட்டர் தூரம் 200க்கும் மேற்பட்ட கிராமத்தில் வசித்துவரும் இளைஞர்கள், கல்லூரி மாணவர்கள், பள்ளி மாணவர்கள் வாரத்தில் விடுமுறை நாட்களில் மற்றும் அரசு விடுமுறை நாட்கள், இறுதி ஆண்டு விடுமுறை நாட்களில் கிரிக்கெட் பயிற்சிக்காக இந்த ஹெலிகாப்பர் இறங்கு தளத்திற்கு வருவர்.

அதுபோல ஆண்டுதோறும் இரண்டு முறை மூன்று முறை இங்கு கிரிக்கெட் போட்டிகள் நடைபெறும். இந்த போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெறுவதை வழக்கமாக இந்த பகுதிகளை சேர்ந்த இளைஞர்கள் வைத்துள்ளனர். இந்நிலையில் இந்த கிரிக்கெட் விளையாடும் ஹெலிகாப்டர் இறங்கும் தளத்தில் மழை நீர் சூழ்ந்துள்ளதால் கடந்த 15 நாட்களாக கிரிக்கெட் விளையாடி பயிற்சி எடுக்க முடியாமல் இளைஞர்கள் கவலை அடைந்து உள்ளனர்.

ராமேஸ்வரத்தில் ராமநாதசாமி கோயிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய வெளி மாநிலங்களில் இருந்தும், உலக நாடுகளில் இருந்தும் முக்கியமாக கவர்னர் மற்றும் பிரதமர், இந்திய பாதுகாப்பு படை அதிகாரிகள் மற்றும் வெளிமாநிலத்தில் சேர்ந்த ஆளுநர்கள், முதல்வர்கள் ஹெலிகாப்டர் மூலம் மண்டபம் கேம்ப் அருகே அமைந்துள்ள ஹெலிகாப்டர் இறங்கும் தளத்தில் இறங்குவார்கள். இங்கிருந்து கார் மூலம் ராமேஸ்வரம் கோவிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்வார்கள்.

தற்போது ஹெலிகாப்டர் இறங்கு தளத்தில் மழைநீர் சூழ்ந்துள்ளதால், மூன்று மாதத்திற்கு ஹெலிகாப்டர் இறங்குவது மிகவும் சிரமமாகும்.மண்டபம் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் முக்கிய பகுதியாக விளங்கி வருவது மண்டபம் கேம்ப் அருகேயுள்ள ஹெலிகாப்டர் இறங்கும் தளமாகும். இந்த தளத்தில் வருங்காலங்களில் மழைநீர் தேங்காத அளவிற்கு நடவடிக்கை எடுத்து இளைஞர்கள் விளையாடுவதற்கும், பொதுமக்கள் உடற்பயிற்சி நடைபெறுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post செல்வதற்கு வழியின்றி ஹெலிகாப்டர் இறங்கு தளத்தை சூழ்ந்து நிற்கும் மழைநீர் appeared first on Dinakaran.

Tags : Daviness ,Mandapam ,Mandapam Camp ,National Highway ,Ramanathapuram ,Rameswaram ,
× RELATED மின்கசிவால் வீடு இழந்த குடும்பத்திற்கு எம்எல்ஏ நிதியுதவி