×

பெருக்கரணை கிராமத்தில் இடிந்து விழும்நிலையில் அங்கன்வாடி மையம்: அகற்றிவிட்டு புதிதாக கட்டித்தர கோரிக்கை

 

செய்யூர்: பெருக்கரணை கிராமத்தில் பாழடைந்து இடிந்து விழும்நிலையில் காணப்படும் அங்கன்வாடி கட்டிடத்தை இடித்து அகற்றிவிட்டு புதிதாக கட்டிடம் கட்டித்தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். செங்கல்பட்டு மாவட்டம், சித்தாமூர் ஒன்றியத்தில் பெருக்கரணை ஊராட்சி உள்ளது. இங்கு, கடந்த 1990ல் கட்டப்பட்ட பழமையான அங்கன்வாடி மையம் இயங்கி வருகிறது. இந்த அங்கன்வாடி மையத்தில் தற்போது 20 குழந்தைகள் பயின்று வருகின்றனர்.

தற்போது, இந்த அங்கன்வாடி மையம் நாளடைவில் பழுதாகி சுவர்களில் ஆங்காங்கே விரிசல்கள் ஏற்பட்டுள்ளன. தற்போது பெய்து வரும் மழையின் காரணமாக சுவர்களில் ஏற்பட்டுள்ள விரிசல்கள் வழியாக மழைநீர் கசிந்து வருகிறது. மேலும், இந்த பழுதடைந்த கட்டிடம் எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் சூழல் உருவாகி உள்ளது. மிகவும் அபாயநிலையில் உள்ள இந்த கட்டிடத்தை இடித்துவிட்டு புதிய கட்டிடம் கட்டித்தர வேண்டும் என இப்பகுதி மக்கள் நீண்ட காலமாக அரசு அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்து வந்துள்ளனர்.

ஆனால், அதிகாரிகள் அதற்கான நடவடிக்கை மேற்கொள்ளவில்லை என கூறப்படுகிறது. கட்டிடம் எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும்நிலை உள்ளதால் பெற்றோர் அச்சத்துடன் தங்கள் குழந்தைகளை இந்த மையத்திற்கு அனுப்பி வைக்கின்றனர். எனவே, மாவட்ட நிர்வாகம் இதில் தனி கவனம் செலுத்தி குழந்தைகளின் பாதுகாப்பு நலன் கருதி உடனடியாக கட்டிடத்தை அகற்றி விட்டு புதிய அங்கன்வாடி மையம் கட்டிடம் கட்டித்தர துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post பெருக்கரணை கிராமத்தில் இடிந்து விழும்நிலையில் அங்கன்வாடி மையம்: அகற்றிவிட்டு புதிதாக கட்டித்தர கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Anganwadi Center ,Apurdaranai Village ,Seyyur ,Anganwadi ,Purdaranai ,Chittamur ,Chengalpattu district ,Dinakaran ,
× RELATED ஆர்.கே.பேட்டை சமத்துவபுரத்தில்...