×

மேடை நிகழ்ச்சியில் சர்ச்சை பாடல் கானா பாடகி இசைவாணி இயக்குனர் ரஞ்சித் மீது புகார்

அம்பத்தூர்: மேடை நிகழ்ச்சியில் சர்ச்சைக்குரிய பாடல் பாடிய கானா பாடகி இசைவாணி மற்றும் இயக்குனர் பா.ரஞ்சித் ஆகியோரை கைது செய்ய வேண்டும் என காவல் நிலையங்களில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அகில பாரத இந்து மகா சபா சென்னை மாவட்ட அர்ச்சகர் பேரவை தலைவர் ஆனந்தன், திருவிக நகர் காவல் நிலையத்திலும், அகில பாரத இந்து மகா சபையின் வடசென்னை மாவட்ட பொதுச் செயலாளர் ஜெயபிரகாஷ் செம்பியம் காவல் நிலையத்திலும் புகார் ஒன்றை அளித்துள்ளனர்.

அதில், அமைதி பூங்காவாக உள்ள தமிழ்நாட்டில் மத கலவரத்தை தூண்டுகின்ற வகையில் நீலம் பவுண்டேஷன் நிறுவனரும், திரைப்பட இயக்குனருமான பா.ரஞ்சித் ஏற்பாடு செய்த ஒரு நிகழ்ச்சியில் கானா பாடல் பாடி வரும் ஒரு பெண் ‘ஐஆம் சாரி ஐயப்பா. நாங்கள் உள்ளே வந்தால் என்ன தப்பா, காலம் மாறிப்போச்சு. நான் தாடிக்காரன் பேத்தி,’ என பாடல் ஒன்றை பாடியுள்ளார்.

சென்னை மாநகரத்தில் மதக்கலவரத்தையும், பயங்கரவாதத்தையும் ஏற்படுத்தும் விதமாக ஐயப்பனையும், அவரை வணங்கும் பக்தர்களையும் இழிவுபடுத்தும் வகையில் இந்த பாடலை பாடியுள்ளார். மேலும் யூடியூப் மூலமாக உலகம் முழுவதும் உள்ள இந்துகளின் மனதை புண்படுத்தும் வகையில் இந்த பாடல் அமைந்துள்ளதால் பா.ரஞ்சித் மற்றும் இசைவாணியை கைது செய்ய வேண்டும், என்று தெரிவித்துள்ளனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post மேடை நிகழ்ச்சியில் சர்ச்சை பாடல் கானா பாடகி இசைவாணி இயக்குனர் ரஞ்சித் மீது புகார் appeared first on Dinakaran.

Tags : Ranjith ,Isaivani ,Ba.Ranjith ,Akila Bharat Hindu Maha Sabha Chennai District Priest Council ,
× RELATED அம்பேத்கர் பெயருக்கு பின்னால்...