×

பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக புழல் ஏரியிலிருந்து தண்ணீர் வெளியேறும் உபரிநீர் கால்வாய்கள் தூர்வாரி சீரமைப்பு: மழைநீர் கால்வாய்களில் அடைப்பு அகற்றும் பணியும் விறுவிறு


புழல்: பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக புழல் ஏரியில் இருந்து வெளியேற்றப்படும் உபரிநீர் கால்வாய்களின் கரைகளை சீரமைக்கும் பணி தற்போது மும்முரமாக நடந்து வருகிறது. மேலும் செங்குன்றம் பகுதிகளில் உள்ள மழைநீர் கால்வாய்களில் ஏற்பட்ட அடைப்புகளை அகற்றும் பணியும் விறுவிறுப்புடன் நடந்து வருகிறது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் வடக்கிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதால், பல பகுதிகளில் தமிழ்நாடு அரசு சார்பில் பல்வேறு துறை அதிகாரிகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதில், சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஏரிகளில் ஒன்றாக புழல் ஏரி உள்ளது. இந்த, ஏரியின் மொத்த கொள்ளளவு 3,300 மில்லியன் கனஅடி. தற்போது ஏரியில் 2,353 நீர் இருப்பு உள்ளது. இதன், உயரம் 21.20 மீட்டர், தற்போது 16.72 மீட்டருக்கு தண்ணீர் உள்ளது. கடந்த 2 நாட்களுக்கு முன் பெய்த கனமழை காரணமாக புழல் ஏரியின் சுற்றுவட்டார பகுதிகளிலிருந்து, வினாடிக்கு 255 கனஅடி நீர்வரத்து வந்துக்கொண்டிருக்கிறது. சென்னை மக்களின் குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 209 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டு வருகிறது.

பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக புழல் ஏரியில் இருந்து வெளியேற்றப்படும் உபரிநீர் கால்வாய்களின் கரைகளை சீரமைக்கும் பணி தற்போது மும்முரமாக நடந்து வருகிறது. இதேபோல் செங்குன்றம் ஜிஎன்டி காமராஜர் சிலை முதல் காய்கறி மார்க்கெட், நெல்மண்டி மார்க்கெட், செங்குன்றம் பேருந்து நிலையம், திருவள்ளூர் கூட்டு சாலையில் இருந்து நேதாஜி சிலை வரை சுமார் 2 கிமீ தூரமுள்ள சாலையின் 2 பக்கங்களிலும் என முன்னெச்சரிக்கை பணிகள் மும்முரமாக நடக்கின்றன.

இப்பகுதியில் அவ்வப்போது மழை பெய்யும்போது சாலையின் 2 பக்கங்களிலும் அமைக்கப்பட்டுள்ள மழைநீர் கால்வாய்களில் அடைப்பு ஏற்படுகிறது. இதனால், பல நேரங்களில் தண்ணீர் அதில் செல்லாமல் மழைநீர் பல இடங்களில் குறிப்பாக நெல்மண்டி மார்க்கெட், பேரூராட்சி அலுவலகம், செங்குன்றம் பேருந்து நிலையம் ஆகிய பகுதிகளில் தேங்கி நிற்கிறது.

இதுகுறித்து, நெடுஞ்சாலைத்துறை சென்னை கண்காணிப்பு பொறியாளர் செல்வகுமார் உத்தரவின்பேரில், திருவள்ளூர் கோட்ட பொறியாளர் சிற்றரசு, அம்பத்தூர் உதவி கோட்ட பொறியாளர் மகேஸ்வரன் ஆகியோர் மேற்பார்வையில், இளநிலை பொறியாளர் ராமச்சந்திரன் நேற்று நேரில் ஆய்வு செய்தார். அப்போது, சாலை பணியாளர்கள் மற்றும் ஒப்பந்த ஊழியர்கள் மூலம் மழைநீர் கால்வாய்களில் அடைப்பு ஏற்பட்டுள்ள பகுதிகளில் கற்கள், மண், கழிவு பொருட்கள் அகற்றப்பட்டு வருகிறது.

* அதிகாரிகள் வேண்டுகோள்
இனிவரும் காலங்களில் மழைநீர் சாலையில் தேங்காமல் கால்வாயில் செல்லும். மழைநீர் கால்வாய்களில் தண்ணீர் செல்லக்கூடிய இடங்களில் பொதுமக்கள் தேவையற்ற பொருட்களை கொட்டாமல் இருக்க வேண்டுமென நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

* கலெக்டர் ஆய்வு
பருவமழையை எதிர்கொள்ளும் வகையில், புழல் ஏரி கரைகளின் பாதுகாப்பு குறித்தும், புழல் ஏரியின் உறுதித்தன்மை குறித்தும் திருவள்ளூர் கலெக்டர் பிரபுசங்கர் நேற்று முன்தினம் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: பருவமழை காலங்களில் பொதுமக்கள் யாரும் அச்சம் கொள்ளத் தேவையில்லை, வழக்கம்போல் பருவமழை காலங்களில் ஏரியின் தரம் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

இதேபோன்று, புழலில் இருந்து வெளியேற்றப்படும் உபரிநீர் கால்வாய்களின் கரைகள் தூர்வாரி சீரமைக்கப்பட்டு வருகிறது. மேலும், செங்குன்றம் பகுதியில் அமைக்கப்பட்டிருக்கும் வடிநீர் கால்வாய்கள், கழிவுநீர் கால்வாய்கள், கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் ஏரி அருகே அமைக்கப்படும் என தெரிவித்தார். அப்போது பருவமழையை எதிர்கொள்ளும் வகையில் கால்வாயின் கரையோர மக்களை எவ்வாறு அப்புறப்படுத்த வேண்டும் எனவும், ஏரி உபரிநீர் திறக்கப்பட்டால் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்வதற்கான வழிமுறைகள் குறித்தும் அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.

ஆய்வின்போது மாவட்ட பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் ஜெயக்குமார், பொன்னேரி வட்டாட்சியர் மதிவாணன், செங்குன்றம் நீர்வளத்துறை உதவி பொறியாளர் கௌரி நாதன், நாரவாரிகுப்பம் பேரூராட்சி தலைவர் தமிழரசி குமார், நிர்வாக செயல் அலுவலர் யமுனா, நீர்வளத்துறை, வருவாய்த்துறை அதிகாரிகள், அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

The post பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக புழல் ஏரியிலிருந்து தண்ணீர் வெளியேறும் உபரிநீர் கால்வாய்கள் தூர்வாரி சீரமைப்பு: மழைநீர் கால்வாய்களில் அடைப்பு அகற்றும் பணியும் விறுவிறு appeared first on Dinakaran.

Tags : Puzhal lake ,Puzhal ,Sengunram ,Durwari ,Dinakaran ,
× RELATED புழல் ஏரியில் இருந்து உபரிநீர் திறப்பு நிறுத்தம்: அதிகாரிகள் தகவல்