×

மாணவ, மாணவியர் பாதுகாப்பை உறுதி செய்ய 245 மாநகராட்சி பள்ளிகளில் ரூ.8 கோடியில் சிசிடிவி கேமரா: மாமன்ற கூட்டத்தில் தீர்மானம்

சென்னை: சென்னை மாநகராட்சி மாமன்ற கூட்டம், ரிப்பன் மாளிகையில் நேற்று நடந்தது. கூட்டத்தில் மொத்தம் 50 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதன் விவரம் வருமாறு: சென்னை மாநகராட்சி சார்பில் தொடக்க மற்றும் உயர்நிலை, மேல்நிலை பள்ளிகள் என மொத்தம் 245 பள்ளிகள் செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளிகளில் மாணவ, மாணவிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு 245 பள்ளிகளில் ரூ.8 கோடி செலவில் கேமராக்கள் பொருத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சென்னையில் தற்போதைய கணக்கெடுப்பின்படி சென்னையில் ஒரு லட்சத்து 80 ஆயிரம் தெரு நாய்கள் உள்ளன. இவற்றை கட்டுப்படுத்த இனக்கட்டுப்பாட்டு மையம் சென்னையில் 5 இடங்களில் உள்ள நிலையில், விலங்குகள் பராமரிப்பு திட்டத்தின் கீழ், லாயிட்ஸ் காலனி, கண்ணம்மாபேட்டை, புளியந்தோப்பு என 3 இடங்களில் புதிய இனக்கட்டுப்பாடு மையம் கட்டப்பட்டு வருகிறது.

எந்தெந்த மண்டலங்களில் தெரு நாய்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது என்ற கணக்கெடுப்பின் அடிப்படையில் 3 மண்டலங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது. அதன்படி 3, 7, 11 ஆகிய மண்டலங்களில் நாய்களுக்கான இனக்கட்டுப்பாட்டு மையங்கள் ரூ.2.6 கோடி செலவில் அமைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, தற்போது புதிதாக அமைக்கப்பட உள்ள 3 இனக்கட்டுப்பாட்டு மையங்கள் மூலம் கூடுதலாக 20 ஆயிரம் கருத்தடை சிகிச்சை என மொத்தம் 47 ஆயிரம் நாய்களுக்கு கருத்தடை சிகிச்சை அளிக்க சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. சென்னை நடுநிலைப் பள்ளிகளில் இயங்கி வரும் கற்றல் திறன் குறைபாடுள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு தொழிற்பயிற்சி அளிக்கும் சிறப்பு பயிற்சி ஆசிரியர்களுக்கான மாத மதிப்பூதியம் ரூ.8000லிருந்து ரூ.11,970ஆக உயர்த்தி வழங்க அனுமதி வழங்கப்படுகிறது.

அதேபோன்று, உதவியாளர்களுக்கான மாத மதிப்பூதியம் ரூ.5000லிருந்து ரூ.8850ஆக உயர்த்தப்பட்டது. மாதவரம் பகுதிக்குட்பட்ட குமாரப்பா முதன்மை சாலைக்கு டாக்டர் கலைஞர் கருணாநிதி சாலை என பெயர் மாற்றம் செய்ய அனுமதி வழங்கப்படுகிறது. அம்மா உணவகங்களுக்கு தேவையான பொருட்களை டியூசிஎஸ் மூலம் கொள்முதல் செய்ய அனுமதி உள்ளிட்ட 50 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாநகராட்சி பகுதிகளில் உள்ள 8340 தெருக்களில், தெருக்களின் பெயர் பலகைகள் அமைப்பது குறித்து தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இந்த பெயர் பலகைகள் இரவிலும் பெயர் தெளிவாக தெரியும் வகையில் முப்பரிமாண தோற்றத்துடன் டிஜிட்டல் முறையில் அச்சிடப்பட்டு வைப்பது குறித்து அதில் இடம்பெற்றிருந்தது.

இந்த தீர்மானம் கொண்டு வந்த போது சென்னை மாநகராட்சி காங்கிரஸ் குழு தலைவர் எம்.எஸ்.திரவியம் எழுந்து எதிர்ப்பு தெரிவித்து பேசினார். அவர் பேசுகையில்,‘‘ இந்த தீர்மானம் நிலைக்குழுவுக்கு கொண்டு வராமல் நேரடியாக தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது. எனவே இதை முறைப்படுத்திவிட்டு தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டும்’’ என்றார். இதேபோன்று பல்வேறு அரசியல் கட்சிகளை சேர்ந்த கவுன்சிலர்களும் எழுந்து நின்று இந்த தீர்மானத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் இந்த தீர்மானம் நிறைவேற்றப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டது.

* இரும்பு நடைமேம்பாலம்
கீழ்ப்பாக்கத்தில் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. மழைக்காலங்களில் இந்த அலுவலக வளாகத்தை சுற்றிலும் மழைநீர் சூழ்ந்து வெளியேற சில தினங்கள் ஆவதால், அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் அலுவலகத்திற்கு வர இயலாமல், அவசரகால பணிகளில் பாதிப்பு ஏற்படுகிறது. எனவே, இதை தவிர்க்க மழைக்காலங்களில் தொய்வின்றி அலுவலகத்திற்கு செல்ல, டாக்டர் குருசாமி பாலத்தில் இருந்து அலுவலக முதல் தளத்திற்கு அலுவலகப் பணியாளர்கள் நேரடியாக வரும் வகையில் இரும்பு நடை மேம்பாலம் கூட்டுறவு துறை மூலம் அமைத்துக் கொள்வதற்கும், பணிகளை உடனடியாக தொடங்கவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

* இசிஆர் 6 வழிப்பாதை பணிக்கு நிலம் கையகப்படுத்த ஒப்புதல்
கிழக்கு கடற்கரை 6 வழிச்சாலை விரிவாக்க பணிகளுக்காக நெடுஞ்சாலை துறைக்கு நிலம் மாறுதல் செய்ய பரிந்துரை செய்து அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. நிலம் மாறுதல் செய்வது குறித்து ஆட்சேபனை எதுவும் இல்லை எனவும், தடையில்லா சான்று வழங்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அதன்படி பாலவாக்கம், கொட்டிவாக்கம், நீலாங்கரை, மற்றும் ஈஞ்சம்பாக்கம் கிராமங்களில் சுமார் 5 ஏக்கர் நிலத்தை நெடுஞ்சாலை துறைக்கு மாறுதல் செய்வது தொடர்பாக சென்னை மாநகராட்சியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதன்படி, அரசு புறம்போக்கு, மேய்க்கால், குட்டை, கிராம நத்தம் வகைப்பாடு கொண்ட நிலத்தினை கிழக்கு கடற்கரை 6 வழி சாலை விரிவாக்கம் பணிக்காக நிலம் மாறுதல் செய்யப்படவுள்ளது.

The post மாணவ, மாணவியர் பாதுகாப்பை உறுதி செய்ய 245 மாநகராட்சி பள்ளிகளில் ரூ.8 கோடியில் சிசிடிவி கேமரா: மாமன்ற கூட்டத்தில் தீர்மானம் appeared first on Dinakaran.

Tags : Chennai ,Chennai Corporation ,Council ,Ribbon House ,
× RELATED குப்பை கழிவுகளை வீசுவதை தடுக்க...