×

மாநகராட்சியின் வருவாயை பெருக்கும் வகையில் ஜிஎஸ்டி எண் வைத்திருப்போரிடம் தொழில்வரி வசூலிக்க நடவடிக்கை: கணக்கெடுப்பு பணி தீவிரம்

சென்னை: சென்னை மாநகராட்சியின் வருவாயை பெருக்கும் வகையில், தொழில் வரி வசூலிக்கும் பணியை அதிகாரிகள் தீவிரப்படுத்தி உள்ளனர். இதன் ஒரு பகுதியாக, ஜிஎஸ்டி எண் வைத்திருப்போரின் விவரங்கள் கணக்கெடுக்கப்பட்டு வருகிறது. சென்னை மாநகராட்சியின் நிதி வருவாயில் சொத்து வரி, தொழில் வரி பிரதானமாக உள்ளது. அதன்படி, 13 லட்சத்துக்கும் மேற்பட்ட சொத்து உரிமையாளர்களிடம் இருந்து, ஆண்டுக்கு ரூ.1,800 கோடி வரை வரி வசூலிக்கப்படுகிறது. அதேபோல், மாநகராட்சியில் பதிவு செய்த சிறிய கடைகள் முதல், பெரிய நிறுவனங்கள் வரை, 2 லட்சத்துக்கும் மேற்பட்ட தொழில் நிறுவனங்களிடம் இருந்து, ரூ.550 கோடி தொழில் வரி வசூலிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், மாநகராட்சியில் தொழில் வரியை அதிகரிக்க, இந்த வரியை செலுத்தாமல் இருப்போர் குறித்த கணக்கெடுக்கும் பணியில், மாநகராட்சி ஈடுபட்டுள்ளது. அதன்படி, ஜிஎஸ்டி எண் வைத்திருப்போர் அனைவரும், தொழில் வரி செலுத்துவது கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. இதனால், ஜிஎஸ்டி எண் வைத்துள்ளோரை அடையாளம் கண்டு, அவர்களிடம் தொழில் வரி வசூலிக்கும் பணியை, மாநகராட்சி தீவிரப்படுத்தி உள்ளது. மாநகராட்சியின் வருவாயை பெருக்க, தங்களிடம் உள்ள விவரங்கள் அடிப்படையில், விடுபட்டோரை தேடி பிடித்து, தொழில் வரி செலுத்த அவர்களின் செல்போன்களில் அறிவுறுத்தப்படுகிறது.

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘சென்னை மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் வியாபாரம் செய்வோர் கட்டாயம் மாநகராட்சிக்கு தொழில் வரி செலுத்த வேண்டும். அந்த வகையில், வணிக ரீதியில் தான் பலர், ஜிஎஸ்டி எண் பெற்றிருப்பர். அங்கு பணியாற்றும் பணியாளர்கள், வருமானத்திற்கு ஏற்ற வகையில் தொழில் வரி செலுத்த வேண்டும். அதன்படி, சென்னையில் ஜிஎஸ்டி எண் வைத்திருப்போர் குறித்த முழு பட்டியலை, ஜிஎஸ்டி கவுன்சிலிடம் கேட்டுள்ளோம். அதேநேரம், எங்களிடம் இருக்கும் தகவல்கள் அடிப்படையில், ஜிஎஸ்டி எண் வைத்திருந்து, தொழில் வரி செலுத்தாமல் இருப்போரிடம் தொழில் வரி செலுத்தும்படி, அறிவுறுத்தி வருகிறோம். எத்தனை பேர் செலுத்த வேண்டும்; எவ்வளவு தொகை உள்ளிட்ட விவரங்கள், இப்பணிகள் முழுமை பெற்ற பின் நோட்டீஸ் வழியாக தெரிவிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

The post மாநகராட்சியின் வருவாயை பெருக்கும் வகையில் ஜிஎஸ்டி எண் வைத்திருப்போரிடம் தொழில்வரி வசூலிக்க நடவடிக்கை: கணக்கெடுப்பு பணி தீவிரம் appeared first on Dinakaran.

Tags : Chennai ,Chennai Corporation ,Dinakaran ,
× RELATED குப்பை கழிவுகளை வீசுவதை தடுக்க...