×

பிவிஆர் தியேட்டர் அருகே பதற்றம் டெல்லியில் மீண்டும் பயங்கர குண்டுவெடிப்பு: ஒருவர் காயம்

புதுடெல்லி: டெல்லியில் பிவிஆர் தியேட்டர் அருகே நேற்று திடீரென குண்டுவெடித்ததால் பதற்றம் ஏற்பட்டது. இதில் ஒருவர் படுகாயம் அடைந்தார். டெல்லியின் ரோகினியில் உள்ள பிரசாந்த் விஹார் பகுதியில் அமைந்துள்ள பிவிஆர் மல்டிபிளெக்ஸ் திரையரங்குக்கு அருகே உள்ள பன்சிவாலா இனிப்பகத்துக்கு எதிரே நேற்று காலை 11.48 மணிக்கு பயங்கர குண்டுவெடிப்பு நடந்தது. இதில் மூன்று சக்கர வாகனத்தின் டிரைவர் சேதன் குஷ்வாஹாவுக்கு லேசான காயம் ஏற்பட்டுள்ளது. தற்போது அந்த இடம் பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் குறித்து தீயணைப்பு படையினருக்கு தகவல் கிடைத்ததும் நான்கு தீயணைப்பு வாகனங்களுடன் சம்பவ இடத்துக்கு தீயணைப்பு படை வீரர்கள் விரைந்துள்ளனர். வெடிகுண்டு கண்டறியும் குழு, போலீஸ், தீயணைப்பு படையினர் மற்றும் மோப்ப நாய் துணையுடன் சம்பவ இடத்தில் சோதனை மேற்கொண்டனர். கடந்த அக்டோபர் மாதம் 20ம் தேதி டெல்லி ரோகினி பகுதியில் சிஆர்பிஎப் பள்ளிக்கு அருகே மர்மமான முறையில் நிகழ்ந்த வெடிப்புச் சம்பவத்தை போலவே இதுவும் நடந்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

குண்டுவெடிப்பு நடந்த நேரத்தில் தியேட்டரில் படம் ஓடிக்கொண்டு இருந்தது. அப்போது புகை மண்டலமாக காட்சியளித்ததால் பார்வையாளர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பீதி ஏற்பட்டது. மேலும் பிவிஆர் மல்டிபிளக்ஸைச் சுற்றிலும் புகை மூட்டமாக காட்சியளிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது வெளியாகி உள்ளன. இதற்கிடையே டெல்லியில் சட்டம் ஒழுங்கை பராமரிக்க பாஜ தலைமையிலான ஒன்றிய அரசு தவறிவிட்டதாக டெல்லி முதல்வர் அடிசி குற்றம் சாட்டினார்.

The post பிவிஆர் தியேட்டர் அருகே பதற்றம் டெல்லியில் மீண்டும் பயங்கர குண்டுவெடிப்பு: ஒருவர் காயம் appeared first on Dinakaran.

Tags : PVR ,Delhi ,New Delhi ,Pansiwala Inipagam ,Prasant Vihar ,Rohini, Delhi ,Dinakaran ,
× RELATED படம் பிடிக்காமல் பாதியில் சென்றால் 50%...