ஐயப்பன் தவயோகியாக ஞான குருவாக இருந்தாலும், அவர் அன்பர்களின் பாதுகாப்பாக வேட்டையையும் மேற்கொண்டுள்ளார். அதை நினைவூட்டும் வகையில் பேட்டைதுள்ளல் என்னும் நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. முகத்தில் கரியையும் வண்ணப் பொடிகளையும் பூசிக்கொண்டு காய்கறிகளை தூளித்தொட்டிலில் கட்டி துள்ளி ஆடி வரும் பேட்டைத் துள்ளல் ஐயப்பன் தரிசன யாத்திரையில் முதன்மையான இடம் பெறுகிறது.
இலங்கையில் உள்ள ஐயப்பன் ஆலயங்களில் ஒன்று காரைத்தீவில் அமைந்துள்ள வியாவில் ஐயப்பன் ஆலயமாகும். இங்கு நடைபெறும் ஐயப்பன் விழாவில் வேட்டைத் திருவிழா நடைபெறுகிறது. இதில் மான், பன்றி, பறவைகள் ஆகிய மூன்றை வேட்டையாடுவதாகக் கூறப்படுகிறது. தத்துவ நோக்கில் மான்கள் ஆணவமலத்தையும், பன்றிகள் கன்ம மலத்தையும் பறவைகள் மாயமலத்தையும் குறிப்பதாகக் கூறுகின்றனர். இவைகளை வேட்டையாடுவதன் மூலம் பெருமான் மும்மலங்களை நீக்கி உயிர்களுக்குப் பேரின்பம் அருளுகிறான் என்பதை உணர்த்துவதாகக் கூறுகின்றனர்.
சாஸ்தா கீதை (பூதநாத கீதை)
பகவான் ஐயப்பனால் அருளப்பட்ட கீதை பூதநாத கீதையாகும். பந்தள மன்னனுக்கு ஐயப்பன் இதைக் சொல்லியதாகக் கூறப்படுகிறது. அரசே! என்னை உறுதியாக நம்புகிற பக்தனுக்கு எல்லாமே வெற்றிதான் வேறு சிந்தனை இல்லாமல் என்னை பக்தி செய்துவது தான் புருஷார்த்தம் என்று நம்பி உறுதியோடு தியானிப்பவர்களுக்கு நான் அடிமையாக இருக்கிறேன். என்னுடைய பக்தனுக்கு நான் பக்தனாக இருக்கிறேன். நானே பக்தன், பக்தனே நான். எல்லா பூதங்களுக்கும்கேடு செய்யாதவனாகவும் எல்லா உயிர்களிடத்திலும் அன்புள்ளவனாகவும் அஹங்காரம் இல்லாதவனாகவும் இன்ப துன்பங்களை ஒன்றுபோல் நினைக்கிறவனாயும் மனம், புத்தி முதலியவைகள் என்னிடத்தில் ஒப்படைத்தவனாயும் இருக்கிற பக்தன் என்னிலிருந்து வேறாக மாட்டான்.
மாளிகைபுரத்து மஞ்சம்மன்
ஐயப்பனின் மாளிகையான ஐயப்பனின் ஆலயத்திற்கு வெளியே (புரத்தே) அமைந்த அம்பிகை ஆலயம் மஞ்சுமாதா எனப்படும் மாளிகைபுரத்து அம்மனின் ஆலயமாகும். இங்கு மக்கள் சிறப்பு வழிபாடுகளைச் செய்கின்றனர். கேரளத்தில் பெண் தெய்வங்கள் சங்கு, சக்கரம் ஏந்தி வாள், கபாலம் கொண்டவர்களாகவே காட்டப்படுவர் அதனையொட்டி இவ்வடிவமும் சங்கு, சக்ரம் ஏந்தியவாறு அமைக்கப் பட்டுள்ளதாகக் கூறுகின்றனர். இப்போது இங்கே சூலமும் விளக்கும் வைத்து வழிபடப்படுகிறது. இந்த அம்பிகையின் திருமேனியாருடையது என்பதில் மூன்று கருத்துக்கள் நிலவுகின்றன. முதல் வகையில் இங்கு மதுரை மீனாட்சி அம்பிகை ஆவாகனம் செய்யப்பட்டுள்ளதாகக் கூறுகின்றனர். பாண்டியர்களின் குலதெய்வம் மீனாட்சி என்பதால் மீனாட்சி தேவியே இங்கு எழுந்தருளி இருந்து அருள்பாலிக்கின்றனர் என்று கூறுகின்றனர்.
இரண்டாவது வகையில் ஐயப்பன் வழிபாட்டில் சரஸ்வதி தனியிடம் பெறுகிறாள். அவளைச் சாக்தர்கள் போர்த்த தெய்வமாக சியாமளா எனும் பெயரில் கொண்டாடுகின்றனர். ஐயப்பன் இங்கு வளரிவித்தையையும் ஞானவித்தையையும் பயிற்றுவிக்கும் இடமாகக் கொண்டிருந்ததால் போர்த் தெய்வமாக விளங்கும் சியாமளாவான சரஸ்வதியை இங்கு ஆவாகனம் செய்து வழிபடுவதாகக் கூறப்படுகிறது. ஐயப்ப வழிபாட்டில் மகாகணபதியும், சரஸ்வதியும் இடம் பெறுவது இங்கே சிந்திப்பதற்கு உரியதாகும். மூன்றாம் வகையில் பக்தர்கள் மத்தியில் மகிஷியாக சாபம் பெற்றுத் திரிந்து சாபவிமோசனம் பெற்ற கன்னியான லீலாவதி என்பவளே இங்கு கோயில் கொண்டிருப்பதாகக் கூறுகின்றனர்.
இப்படி பலவாறான செய்திகள் இருந்தாலும், மாளிகை புரத்து மஞ்சம்மன் சிறந்த வரம் தரும் தெய்வமாகப் போற்றப்படுகிறாள். இங்கு தேங்காய் உருட்டுதல் என்னும் பிரார்த்தனையை நிறைவேற்றும் வழக்கம் இருந்தது. இப்போது மஞ்சள் குங்குமம் ரவிக்கை துண்டுகள் சேலைகள் வைத்து பிரார்த்தனைகளைச் செலுத்துகின்றனர்.
The post சுவாமி சரணம் ஐயப்பா!! appeared first on Dinakaran.