கோபி, நவ.28: கோபி புகழேந்தி வீதியில் ஏற்பட்ட திடீர் பள்ளத்தால் இரும்பு தகடுகளை வைத்து வருவாய்த்துறையினர் தற்காலிக தடுப்பு ஏற்படுத்தினர். கோபி புகழேந்தி வீதியில் ஏராளமான வீடுகள் உள்ளன. அந்த பகுதியில் உள்ள சிறிய தெரு வழியாக நடந்தும், பைக்கிலும் சென்று வந்தனர். இந்நிலையில், அந்த சிறிய தெருவில் உள்ள காலி இடத்தில் ஏராளமான செடி முளைத்து இருந்த நிலையில், அருகில் இருந்தவர்கள் அவற்றை அகற்றினர். அப்போது, திடீரென பெரிய பள்ளம் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து திடீர் பள்ளம் குறித்து கோபி நகராட்சி மற்றும் வருவாய்த்துறைக்கு அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர்.
அங்கு வந்த கோபி தாசில்தார் சரவணக்குமார் மற்றும் கோபி தீயணைப்பு நிலைய அலுவலர் ரமேஷ்குமார் உள்ளிட்ட அதிகாரிகள் திடீர் பள்ளத்தை ஆய்வு செய்தனர். மேல்புறம் ஒரு ஆள் இறங்கும் அளவிற்கு சிறியதாக இருந்த பள்ளம் உள்ளே மிகப்பெரிய அளவில் இருப்பது தெரிய வந்தது. அதைத்தொடர்ந்து அந்த தெருவை இரும்பு தகரங்களால் தற்காலிக தடுப்பு ஏற்படுத்திய வருவாய்த்துறையினர், பல ஆண்டுகளுக்கு முன் கிணறாக இருந்து மூடப்பட்டு இருக்கலாம் என்றும், இதுகுறித்து புவியியல் துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து உரிய ஆய்வும் செய்யப்படும் என்றனர்.
The post கோபி புகழேந்தி வீதியில் திடீர் பள்ளம் appeared first on Dinakaran.