×

விழுப்புரம் அருகே பயங்கரம் பிறந்தநாள் பார்ட்டியில் நாட்டு வெடி வீசி நண்பர்களை கொல்ல முயன்ற வாலிபர் கைது

விழுப்புரம், நவ. 28: விழுப்புரம் அருகே மதுவிருந்து பார்ட்டியில் ஏற்பட்ட தகராறில் நாட்டு வெடி வீசப்பட்டதில் இந்து முன்னணி நிர்வாகி உள்ளிட்ட 5 பேர் காயமடைந்தனர். தொடர்ந்து இருதரப்பு மோதிக் கொண்டதில் 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விழுப்புரம் முத்தோப்பு பகுதியை சேர்ந்தவர் தரணிதரன் (42), இந்துமுன்னணி மாவட்ட செயலாளர். இவர் தனது நண்பர்களுடன் அவ்வப்போது மது அருந்துவாராம். இந்நிலையில் மருதூரை சேர்ந்த நண்பர் சதீஷ்குமார் பிறந்தநாளையொட்டி நேற்று முன்தினம் இரவு பார்ட்டி வைத்தாராம். விழுப்புரம் அருகே உள்ள அயினம்பாளையம் கால்நடை மருத்துவமனை அருகே நடைபெற்ற பார்ட்டியில் தரணிதரன் மற்றும் நண்பர்களான தென்னமாதேவியை சேர்ந்த சந்தோஷ்குமார்(36), அயினம்பாளையம் மகேஷ், தாமோதரன், சித்தேரிக்கரை முரளி, மருதூர் விக்னேஷ், பாப்பான்குளம் அஸ்லாம் ஆகியோர் ஒன்றாக மதுஅருந்தியதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் மதுபார்ட்டிற்கு வந்த சந்தோஷ்குமாருக்கும் அஸ்லாமுக்கும் இடையே பணம் கொடுக்கல் வாங்கலில் பிரச்னை இருந்ததாக கூறப்படுகிறது. கடந்த ஒருவாரத்திற்குமுன் பணம் கேட்டு தராததால் அவர்மீது கோபத்தில் இருந்தாராம். இந்நிலையில் மது அருந்தும்போது சந்தோஷ்குமார் இந்த பிரச்னையை தொடங்கினாராம். நான் பணம் கேட்டால் தரமாட்டாயா? என்று கேட்டு திட்டி தான் மறைத்து வைத்திருந்த பட்டாசு மருந்தால் தயாரிக்கப்பட்ட நாட்டு வெடி வீசி கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார். இதில் அங்கு மதுஅருந்தி கொண்டிருந்த தரணிதரன் உள்ளிட்ட 4 பேரும் பலத்த காயமடைந்தனர். தொடர்ந்து இந்த நாட்டு வெடி அருகிலிருந்து வீடுகள்மீதும் பட்டு அக்கம் பக்கத்தினர் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

இதுபற்றி தாலுகா காவல் நிலையத்திற்கு உடனே தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் நாட்டு வெடி வீச்சில் காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இதுகுறித்து இந்து முன்னணி மாவட்ட செயலாளர் தரணிதரன் அளித்த புகாரின்பேரில் சந்தோஷ்குமார் மீது கொலை முயற்சி உள்ளிட்ட பிரிவின்கீழ் வழக்குபதிந்த போலீசார் அவரை கைது செய்தனர்.இதேபோல் சந்தோஷ்குமார் தன்னை தாக்கியதாக அளித்த புகாரின்பேரில் சதீஷ்குமார், விக்னேஷ், அஸ்லாம் மீது வழக்குபதிவு செய்த போலீசார் சதீஷ்குமார், விக்னேஷ் ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பிறந்தநாள் விழா பார்ட்டியில் ஏற்பட்ட தகராறில் நாட்டு வெடி வீசி நண்பர்களை கொல்ல முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

The post விழுப்புரம் அருகே பயங்கரம் பிறந்தநாள் பார்ட்டியில் நாட்டு வெடி வீசி நண்பர்களை கொல்ல முயன்ற வாலிபர் கைது appeared first on Dinakaran.

Tags : Villupuram ,Hindu Front ,
× RELATED விழுப்புரம் – திண்டிவனம் அருகே...