×

மல்யுத்த போட்டிகளில் விளையாட பஜ்ரங் புனியாவுக்கு 4 ஆண்டு தடை: போதை குற்றச்சாட்டில் உத்தரவு

பாஜ தலைவருக்கு எதிரான போராட்டம் காரணமா?

புதுடெல்லி: ஒலிம்பிக் போட்டியில் வெண்கலப்பதக்கம் வென்றுள்ள இந்திய மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா, போதை குற்றச்சாட்டில் சிக்கியதை அடுத்து 4 ஆண்டுகளுக்கு போட்டிகளில் விளையாட தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கடந்த 2020ல், ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடந்த ஒலிம்பிக்கில், 65 கிலோ பிரிவு மல்யுத்த போட்டியில் பங்கேற்று இந்தியாவுக்கு வெண்கலப்பதக்கம் பெற்றுத்தந்தவர் பஜ்ரங் புனியா. ஹரியானாவை சேர்ந்த இவர், காங்கிரஸ் கட்சியில் உறுப்பினராக உள்ளார். பத்ம விருது பெற்றவர். இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் முன்னாள் தலைவரும் பாஜ முன்னாள் எம்பியுமான பிரிஜ் பூஷண் சரண் சிங், மல்யுத்த வீராங்கனைகளிடம் பாலியல் அத்துமீறல்களில் ஈடுபட்டதாக கூறி நடந்த போராட்டங்களில் சக வீராங்கனை வினேஷ் போகத்துடன் சேர்ந்து பல்வேறு போராட்டங்களில் பஜ்ரங் புனியா ஈடுபட்டுள்ளார்.

கடந்த செப்டம்பரில், வினேஷ் போகத்தும், பஜ்ரங் பூனியாவும், ராகுல் முன்னிலையில் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தனர். இந்நிலையில், கடந்த மார்ச் 10ம் தேதி, தேசிய மல்யுத்த அணி தேர்வு சோதனைகளின்போது, போதைப் பொருள் சோதனைக்கான ரத்த மாதிரியை சமர்ப்பிக்க தவறியதாக பஜ்ரங் புனியா மீது புகார் எழுந்தது. இதையடுத்து, தேசிய போதை தடுப்பு ஏஜன்சி (நடா), மல்யுத்த போட்டிகளில் பஜ்ரங் புனியா பங்கேற்க தற்காலிக தடை விதித்து, கடந்த ஏப்.23ல் உத்தரவிட்டது. இதை எதிர்த்து புனியா மனு தாக்கல் செய்ததை அடுத்து, தடை உத்தரவு நிறுத்தி வைக்கப்பட்டது. இருப்பினும், புனியா மீதான குற்றச்சாட்டை, கடந்த ஜூன் 23ம் தேதி நடா முறைப்படி அறிவித்தது.

இதைத் தொடர்ந்து நடந்த விசாரணைகளின் அடிப்படையில், 4 ஆண்டுகள் மல்யுத்த போட்டிகளில் விளையாடவும், பயிற்சிகள் அளிக்கவும் புனியாவுக்கு தடை விதித்து நடா புதிய உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவு, 23.4.2034 முதல் அமலுக்கு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவை ஏற்று, சர்வதேச நிர்வாக அமைப்பான, யுடபிள்யுடபிள்யு, புனியாவுக்கு விதிக்கப்பட்டுள்ள தடை உத்தரவை உறுதி செய்துள்ளது. பிரிஜ் பூஷண் சரண் சிங்கிற்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்றதால், தனக்கு எதிராக பொய் குற்றச்சாட்டில் நடவடிக்கை எடுக்கப்படுவதாக, புனியா கூறியுள்ளார்.

The post மல்யுத்த போட்டிகளில் விளையாட பஜ்ரங் புனியாவுக்கு 4 ஆண்டு தடை: போதை குற்றச்சாட்டில் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Bajrang Punia ,BJP ,New Delhi ,Olympic ,Japan ,Dinakaran ,
× RELATED வெற்று வாக்குறுதிகள் இனி தேவையில்லை...