×

இஸ்ரேல் – ஹிஸ்புல்லா இடையே போர் நிறுத்தம் அமல்.. ஒப்பந்தத்திற்கு இடையே எச்சரிக்கை விடுத்த பிரதமர் நெதன்யாகு..!!

இஸ்ரேல்: இஸ்ரேல் – ஹிஸ்புல்லா இடையேயான போர் நிறுத்த ஒப்பந்தம் அமலுக்கு வந்தது. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் இஸ்ரேல் – பாலஸ்தீன போர் தொடங்கியது. பாலஸ்தீனத்திற்கு ஆதாரவாக, லெபனானில் இருக்கும் ஹிஸ்புல்லா அமைப்பு இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தத் தொடங்கியது. அதன் பிறகு, இரண்டு நாடுகளுக்கும் இடையே நடந்த தாக்குதல்கள் மிகவும் பயங்கரமாக இருந்தது. ஏவுகணை தாக்குதலை எல்லாம் தாண்டி பேஜர், சோலார் தகடு, வாக்கி டாக்கி வெடிப்பு என்று தாக்குதல்கள் நீண்டன. மேலும், ஹிஸ்புல்லா அமைப்பைச் சார்ந்த தலைவர், முக்கிய அதிகாரிகள், உறுப்பினர் என பலரை இஸ்ரேல் அழித்தது.

இந்நிலையில், லெபனானைச் சோ்ந்த ஆயுத அமைப்பான ஹிஸ்புல்லாவுடன் போா் நிறுத்த ஒப்பந்தத்துக்கு தான் ஆதரவளிப்பதாகவும், அதை அமைச்சரவைக்கு பரிந்துரைப்பதாகவும் இஸ்ரேல் பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகு செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா். அமெரிக்காவால் முன்மொழியப்பட்ட இந்த ஒப்பந்தம் நிறைவேறும் பட்சத்தில் இஸ்ரேலுக்கும் ஈரான் ஆதரவுபெற்ற ஆயுத அமைப்புகளுக்கும் கடந்த 14 மாதங்களாக தொடா்ந்து வரும் போா் முடிவதற்கான தொடக்கமாக அமையும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

இந்த நிலையில், இஸ்ரேல் மற்றும் ஹிஸ்புல்லா இடையே போர்நிறுத்த ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டு உள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ தகவலை அமெரிக்க அதிபர் பைடன் வெளியிட்டு உள்ளார். லெபனானில் நடந்து வரும், ஈரான் ஆதரவு பெற்ற ஹிஸ்புல்லா அமைப்புடனான மோதலை முடிவுக்கு கொண்டு வருவதற்கு இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சரவையும் ஒப்பு கொண்டுள்ளது. எனினும், போர்நிறுத்த ஒப்பந்தத்திற்கு இடையே இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு எச்சரிக்கை விடுத்து உள்ளார். அவர் கூறும்போது;

அமெரிக்காவின் முழு புரிதலோடு, நாங்கள் ராணுவ நடவடிக்கையை மேற்கொள்வதற்கான முழு சுதந்திரம் பெற்றிருக்கிறோம். ஒப்பந்த மீறலில் ஹிஸ்புல்லா ஈடுபட்டால், ஆயுதங்களை கையிலெடுக்க அவர்கள் முற்பட்டால், நாங்கள் தாக்குவோம். எல்லையருகே பயங்கரவாத கட்டமைப்பை எழுப்ப முயன்றால், நாங்கள் தாக்குவோம். ஒரு ராக்கெட்டை ஏவினாலும், சுரங்கம் ஒன்றை தோண்டினாலும், ராக்கெட்டுகளை சுமந்தபடி லாரியை கொண்டு வருகிறது என்றாலும் நாங்கள் தாக்குவோம் என எச்சரிக்கை விடுத்து உள்ளார்.

The post இஸ்ரேல் – ஹிஸ்புல்லா இடையே போர் நிறுத்தம் அமல்.. ஒப்பந்தத்திற்கு இடையே எச்சரிக்கை விடுத்த பிரதமர் நெதன்யாகு..!! appeared first on Dinakaran.

Tags : Israel ,Hezbollah ,Netanyahu ,Hizbullah ,Palestine ,Lebanon ,Dinakaran ,
× RELATED மாற்று ஏற்பாடு செய்யும் வரை இஸ்ரேல்...