×

2வது ஒரு நாள் போட்டி 145 ரன்னில் சுருண்ட ஜிம்பாப்வே விக். இழப்பின்றி பாக். அபார வெற்றி

புலவயோ: ஜிம்பாப்வே சுற்றுப்பயணம் சென்றுள்ள பாகிஸ்தான் அணி நேற்று நடந்த ஒரு நாள் போட்டியில் ஜிம்பாப்வே அணியை 10 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வென்றது. ஜிம்பாப்வே சென்றுள்ள பாக். அணி, அந்த அணியுடன் 3 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி வருகிறது. ஏற்கனவே நடந்த முதல் ஒரு நாள் போட்டியில் ஜிம்பாப்வே அணிவெற்றி பெற்று 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

இந்நிலையில் நேற்று, புலவயோ நகரில் 2வது ஒரு நாள் போட்டி நடந்தது. டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. துவக்க வீரர்கள் ஜாய்லார்ட் கும்பி 5, டடிவனாஷே மருமனி 4 ரன்னில் ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தனர். பின் வந்த டியான் மையர்ஸ் 33, சீன் வில்லியம்ஸ் 31 ரன் எடுத்து ஓரளவுக்கு தாக்கு பிடித்து ஆட்டமிழந்தனர். மற்ற வீரர்கள் பாக். பவுலர்களின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் சீரான இடைவௌியில் அவுட்டாகி பெவிலியன் திரும்பினர்.

இதனால், 32.3 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த ஜிம்பாப்வே அணி 145 ரன் மட்டுமே எடுத்தது. பாக் பந்து வீச்சாளர்கள் அப்ரார் அஹமது 4, சல்மான் ஆகா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இதையடுத்து, 146 ரன் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் பாக் களமிறங்கியது. துவக்க வீரர் அப்துல்லா ஷபீக் நிதானமாக ஆடி 32 ரன்களை சேர்த்தார். மற்றொரு துவக்க வீரராக களமிறங்கிய சயீம் அயூப் அட்டகாசமாக ஆடி, ஜிம்பாப்வே பந்து வீச்சாளர்களை சிதறடித்து ரன் குவித்தார்.

62 பந்துகளை எதிர்கொண்ட அவர் 3 சிக்சர், 17 பவுண்டரிகளை விளாசி, 113 ரன் குவித்து ஆட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்தார். அயூப்பின் அதிரடியால் 18.2 ஓவர்களிலேயே 148 ரன் குவித்து இந்த வெற்றியை பாக் வசப்படுத்தி உள்ளது. ஆட்ட நாயகனாக, சயீம் அயூப் அறிவிக்கப்பட்டார். 10 விக்கெட் வித்தியாசத்தில் கிடைத்த இந்த வெற்றியை அடுத்து, தொடரை 1-1 என்ற கணக்கில் பாக். சமன் செய்துள்ளது. இறுதிப் போட்டி, டிச. 1ம் தேதி நடக்க உள்ளது.

 

The post 2வது ஒரு நாள் போட்டி 145 ரன்னில் சுருண்ட ஜிம்பாப்வே விக். இழப்பின்றி பாக். அபார வெற்றி appeared first on Dinakaran.

Tags : Bulawayo ,Pakistan ,Zimbabwe ,Pak ,Dinakaran ,
× RELATED 57 ரன்னில் சுருண்ட ஜிம்பாப்வே: வந்தனர்…...