×

சென்னையில் லாரி ஓட்டுநரை கட்டையால் தாக்கி செல்போன் மற்றும் வெள்ளி செயின் பறித்துச் சென்ற 2பேர் கைது..!

சென்னை: சென்னை அண்ணா சாலை அருகே லாரி ஓட்டுநரை கட்டையால் தாக்கி செல்போன் மற்றும் வெள்ளி செயின் பறித்துச் சென்ற 2 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து செல்போன் மற்றும் வெள்ளிச் செயின் மீட்கப்பட்டது.

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம், திருவிடைமருதூர் பகுதியைச் சேர்ந்த கணேஷ், வ/30, த/பெ.முருகேசன் என்பவர் லாரி ஓட்டுநராக வேலை செய்து வருகிறார். கணேஷ் லாரியில் சரக்குகளை ஏற்றிக் கொண்டு, 24.11.2024 அன்று மாலை, சென்னை, கோபாலபுரம் பகுதியில் உள்ள குடோன் அருகே லாரியை நிறுத்திவிட்டு, சத்யம் திரையரங்கம் அருகேயுள்ள டீக்கடையில் டீ குடிக்க சென்றபோது, 2 நபர்கள் கணேஷிடம் பேச்சு கொடுத்து அருகிலுள்ள திரு.வி.க. சாலையிலுள்ள பொதுக்கழிப்பிடம் அருகே அழைத்துச் சென்று கணேஷின் தலையில் கட்டை மற்றும் பீர் பாட்டிலால் தாக்கி கணேஷின் செல்போன் மற்றும் அவர் அணிந்திருந்த வெள்ளிச் செயினை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றனர்.

இரத்தக்காயமடைந்த கணேஷ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற பின்னர் மேற்படி சம்பவம் குறித்து D-2 அண்ணா சாலை காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததின்பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டனர். D-2 அண்ணா சாலை காவல் நிலைய குற்றப்பிரிவு ஆய்வாளர் தலைமையிலான தனிப்படையினர் சம்பவ இடத்திற்கு சென்று தீவிர விசாரணை செய்து, மேற்படி வழக்கில் சம்பந்தப்பட்ட 1.விஜய்பிரபு, வ/27, த/பெ.ரகு, சத்யம் திரையரங்கம் பிளாட்பாரம், அண்ணா சாலை, சென்னை, 2.டேவிட் (எ) வினோத், வ/32, த/பெ.பால்ராஜ், ரங்கன் தெரு, ஆயிரம் விளக்கு, சென்னை ஆகிய 2 நபர்களை கைது செய்தனர். அவர்களிடமிருந்து புகார்தாரரின் செல்போன் மற்றும் வெள்ளி செயின் மீட்கப்பட்டது.

விசாரணையில் எதிரி விஜய்பிரபு மீது 2 குற்ற வழக்குகளும், மற்றொரு எதிரி டேவிட் (எ) வினோத் மீது 3 திருட்டு வழக்குகளும் உள்ளது தெரியவந்தது. கைது செய்யப்பட்ட எதிரிகள் இருவரும் விசாரணைக்குப் பின்னர் நேற்று (25.11.2024) நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டனர்.

The post சென்னையில் லாரி ஓட்டுநரை கட்டையால் தாக்கி செல்போன் மற்றும் வெள்ளி செயின் பறித்துச் சென்ற 2பேர் கைது..! appeared first on Dinakaran.

Tags : Chennai ,Anna Road ,Thanjavur District ,Kumbakonam ,Thiruvidaymarathur ,
× RELATED சென்னை அண்ணா சாலையில் கோ-ஆப்டெக்ஸ்...