×

பழைய பஸ் நிலையத்தில் பஸ்கள் வந்து செல்லக்கோரி வணிகர்கள் கடை அடைப்பு போராட்டம்

நாமக்கல் : திருச்சி, துறையூர் செல்லும் பஸ்கள், பழைய பஸ் நிலையத்தில் வந்து செல்லக்கோரி, நாமக்கல்லில் வணிகர்கள் நேற்று கடை அடைப்பு போராட்டம் நடத்தினர்.

நாமக்கல் முதலைப்பட்டியில் உள்ள புதிய பஸ் ஸ்டாண்டில் இருந்து, கடந்த 10ம் தேதி முதல் அனைத்து புறநகர் பஸ்களும் இயக்கப்பட்டு வருகிறது. நாமக்கல் நகரில் உள்ள பழைய பஸ் ஸ்டாண்டில் இருந்து, டவுன் பஸ்கள் மட்டும் இயக்கப்படுகிறது. புதிய பஸ் ஸ்டாண்டுக்கு செல்வதற்காக, கூடுதல் டவுன் பஸ்களை மாவட்ட நிர்வாகம் இயக்கி வருகிறது.

ஆனால், பழைய பஸ் ஸ்டாண்டுக்குள் புறநகர் பஸ்கள் வந்து செல்வதில்லை. அதற்கு பதிலாக பஸ் ஸ்டாண்ட் நுழைவு வாயில் முன்பும், திருச்சி ரோடு பயணியர் விடுதி முன்பும், பஸ் நிறுத்தங்கள் அமைக்கப்பட்டு, பயணிகள் ஏற்றி செல்லப்படுகிறார்கள்.

பழைய பஸ் ஸ்டாண்டுக்குள் புறநகர் பஸ்களின் வருகை நின்று போனதால், பஸ் ஸ்டாண்டில் உள்ள கடைகளில் வியாபாரம் டல் அடித்தது. அங்குள்ள டீக்கடைகள், ஓட்டல்கள், ஜூஸ் கடைகள், செல்போன் ரீசார்ஜ் கடைகளில், ஏற்கனவே நடைபெற்ற வியாபாரத்தில் 20 முதல் 30 சதவீதம் மட்டுமே நடைபெறுகிறது. ஒரு சில கடைகள் மூடப்பட்டு விட்டன. பல ஆண்டாக செயல்பட்டு வந்த ஒரு ஓட்டலும் மூடப்பட்டு விட்டது.

இந்நிலையில், புதிய பஸ் ஸ்டாண்டில் இருந்து திருச்சி, துறையூர், மோகனூர் ஆகிய ஊர்களுக்கு செல்லும் அனைத்து பஸ்களும், நாமக்கல் பழைய பஸ் ஸ்டாண்டுக்குள் சென்று செல்ல வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, நாமக்கலில் நேற்று, வணிகர் சங்க பேரமைப்பு சார்பில் ஒருநாள் கடையடைப்பு போராட்டம் நடைபெற்றது.

இதையொட்டி நாமக்கல் பழைய பஸ் ஸ்டாண்டில் உள்ள அனைத்து கடைகள், சேலம் ரோடு, திருச்செங்கோடு ரோடு, திருச்சி ரோடு உள்ளிட்ட அனைத்து சாலைகளிலும் உள்ள ஓட்டல்கள், பெட்டி கடைகள், ஜவுளிகடைகள், நகைக்கடைகள், செல்போன் மற்றும் உதிரிபாகங்கள் விற்பனை கடைகள், என அனைத்து விதமான கடைகளும் நேற்று காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை அடைக்கப்பட்டன.

ஒரு சில சாலைகளில் டீக்கடைகள், பழம் விற்பனை கடைகள் மட்டும் திறக்கப்பட்டிருந்தது. நகரில் உள்ள அனைத்து மருந்து கடைகளும் மதியம் 2 மணி வரை மூடப்பட்டிருந்து. 2மணிக்கு பின்னர் மருந்துகடைகள் திறக்கப்பட்டன. இது போல மற்ற கடைகளும் மாலை 6 மணிக்கு மேல் திறக்கப்பட்டன.

பழைய பஸ் ஸ்டாண்டுக்குள் பஸ்கள் வருவது சாத்தியமா?

நாமக்கல் மாநகராட்சியில் கடந்த இரு தினங்களுக்கு முன், மாநகராட்சி கமிஷனர் மகேஸ்வரி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் பங்கேற்ற தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தினர், பழைய பஸ் ஸ்டாண்டுக்குள் சென்று விட்டு, பின்னர் புதிய பஸ் ஸ்டாண்ட் சென்றால் குறித்த நேரத்தில் பஸ்களை இயக்க முடியாது. டைமிங் பிரச்னை ஏற்படும். டீசல் செலவும் அதிகரிக்கும் என கூறி, பஸ்களை பழைய பஸ் ஸ்டாண்டுக்குள் இயக்க மறுத்துவிட்டனர்.

இதே கருத்தை போக்குவரத்து கழக அதிகாரிகளும் கூறினர். வணிகர்களின் வியாபார பாதிப்பை குறைக்கும் வகையில், பழைய பஸ் ஸ்டாண்ட் வளாகம் முழுவதும், டவுன் பஸ்கள் பரவலாக நிறுத்தப்பட்டு வருகிறது. ஆனால் வணிகர்கள், பழைய பஸ் ஸ்டாண்டுக்குள் பஸ்கள் வந்து செல்ல வேண்டும் என கூறி வருகின்றனர்.

இது குறித்து போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறுகையில், ‘புதிய பஸ் ஸ்டாண்டில் இருந்து திருச்சி, துறையூர் போன்ற ஊர்களுக்கு செல்லும் பஸ்கள், நாமக்கல் பழைய பஸ் ஸ்டாண்டுக்குள் சென்று வெளியே வருவதில் பல பிரச்னைகள் உள்ளன.

தற்போது டவுன் பஸ்கள், பழைய பஸ்டாண்டில் இருந்து வெளியே வரும் இடத்தின் வழியாக, புதிய பஸ் ஸ்டாண்டில் இருந்து வரும் பஸ்கள், பழைய பஸ் ஸ்டாண்டுக்குள் செல்லமுடியாது. போக்குவரத்து நெரிசல், எதிர்பாராத விபத்துக்கள் போன்றவை ஏற்பட வாய்ப்பு உள்ளது. பழைய பஸ் ஸ்டாண்ட் தற்போது முழுமையாக டவுன் பஸ்கள் மட்டும் இயக்கும் அளவுக்கு மாற்றப்பட்டு விட்டது,’ என்றனர்.

The post பழைய பஸ் நிலையத்தில் பஸ்கள் வந்து செல்லக்கோரி வணிகர்கள் கடை அடைப்பு போராட்டம் appeared first on Dinakaran.

Tags : Namakkal ,Trichy ,Thariyaur ,Namakkal Mudalaipatti ,
× RELATED 2023-ம் ஆண்டில் திருச்சி சாலையில் நடந்த...