×

தர்மபுரி நகர எல்லையில் ராமக்காள் ஏரியை அழகுபடுத்தி சிறுவர் பூங்கா அமைக்கப்படுமா?

*பொதுமக்கள் எதிர்பார்ப்பு

தர்மபுரி : தர்மபுரி நகர எல்லையில் உள்ள ராமக்காள் ஏரியை அழகுபடுத்தி, ஏரிக்கரையோர பகுதியில் சிறுவர் பூங்கா அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தர்மபுரி நகர எல்லையில் கிருஷ்ணகிரி சாலையில் ராமக்காள் ஏரி உள்ளது. பொதுப்பணித்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த ஏரி, 265 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இந்த ஏரிக்கு சின்னாற்றில் இருந்து கால்வாய் மூலம் தண்ணீர் வருகிறது.

இங்கிருந்து வெளியேறும் உபரிநீர், சனத்குமார நதியின் கால்வாயில் கலந்து, கம்பைநல்லூர் அருகே தென்பெண்ணை ஆற்றில் சேரும். இந்த ஏரி முழுமையாக நிரம்பும்போது கடல் போல் காட்சியளிக்கும். தற்போது, சின்னாறு அணையில் இருந்து ராமாக்காள் ஏரிக்கு ஒரு சொட்டு நீர்கூட வருவதில்லை. இதனால், கடந்த 13 ஆண்டுகளாக ஏரி நிரம்பாத நிலை காணப்படுகிறது. கடந்த 2022ம் ஆண்டு கனமழையினால் சின்னாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட போது மட்டும், ராமாக்காள் ஏரிக்கு தண்ணீர் வந்தது.

அப்போது ஏரி நிரம்பி தண்ணீர் வெளியேறியது. இந்நிலையில், கடந்த திமுக ஆட்சியில் பொதுமக்களின் பங்களிப்புடன், தன்னிறைவுத் திட்டத்தின் கீழ் ராமக்காள் ஏரியை அழகுபடுத்தி சுற்றுலா தலமாக்கும் பணி நடந்தது. ஏரியில் பறவைகள் தங்கு வகையில் தீவு திடல் அமைக்கப்பட்டது. பொதுமக்கள் பங்களிப்பு மற்றும் அரசு நிதி சேர்ந்து சுமார் ரூ.2.81 கோடி மதிப்பீட்டில் பூங்கா, இளைப்பாறுவதற்கு இருக்கை, நடைபயிற்சி மேற்கொள்ள நடைமேடை, மரச்செடிகள் மற்றும் வேலி அமைக்கப்பட்டது.

தற்போது முறையாக பராமரிக்காததால், பூங்காவில் செடிகள் வளர்ந்து புதர்மண்டி காணப்படுகிறது. நடைபயிற்சி மேடை கற்கள் பெயர்ந்து சிதறியுள்ளது. குடிமகன்கள் மது பாட்டில்களை அங்கேயே வீசிச்செல்கின்றனர். பிளாஸ்டிக் பை, டம்ளர், பாட்டில்கள் ஆங்காங்கே கிடக்கின்றன.

இதுகுறித்து விவசாயி சந்திரமோகன் என்பவர் கூறியதாவது: பொதுமக்களின் பங்களிப்புடன் தன்னிறைவுத் திட்டத்தின் கீழ், ராமக்காள் ஏரியை அழகுபடுத்தி சுற்றுலா தளமாக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டது. ஆட்சி மாற்றம் ஏற்பட்டதால், இத்திட்டம் முழுமை பெறாமல் கிடப்பில் போடப்பட்டது. பூங்காவை முறையாக பராமரிக்கவும் இல்லை. கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்பு ராமக்காள் ஏரிக்கு, பஞ்சப்பள்ளி சின்னாற்றில் இருந்து நேரடியாக தண்ணீர் வரும்.

இதனால் ஆண்டு தோறும் ஏரி நிரம்பி உபரிநீர் வெளியேறும். இதை நம்பி நூற்றுக்கணக்கான விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்றன. தற்போது தண்ணீர் வரத்து இல்லை. தற்போது சுற்றுவட்டார பகுதிகளிலிருந்து கழிவுநீர் கலப்பதாலும், மழைக்காலத்தில் நீர்பிடிப்பு பகுதிகளிலிருந்து வரும் நீரினாலும், ஏரியில் எப்போதும் தண்ணீர் இருந்து கொண்டே இருக்கிறது. இந்த ஏரியை நம்பி நெல், கரும்பு சாகுபடி செய்யப்படுகிறது.

ராமக்காள் ஏரியில் தண்ணீர் முழுமையாக தேங்கினால் நகர்பகுதிகளில் நிலத்தடிநீர் மட்டம் உயர்ந்து காணப்படும். நிலத்தடி நீர் தட்டுப்பாடு ஏற்படாது. எனவே, ராமக்காள் ஏரி கரையோர பகுதியில் சிறுவர் பூங்கா அமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், ‘கடந்த 11 ஆண்டுகளுக்கு முன்பு ராமக்காள் ஏரியை அழகுபடுத்தி, பரிசல் இயக்கி பொழுபோக்கும் சுற்றுலா தளமாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

பின்னர், நிதி பற்றாக்குறையால் கிடப்பில் போடப்பட்டது. தற்போது இந்த ஏரியில் கழிவுநீர் கலக்கிறது. கழிவுநீர் கலப்பது நிறுத்தப்பட்டால், மீண்டும் அழகுபடுத்த அரசு பார்வைக்கு கொண்டு செல்லலாம். தற்போது கூட ராமக்காள் ஏரிக்கரையில், காலை மற்றும் மாலை நேரங்களில் பொதுமக்கள் நடைபயிற்சி மேற்கொள்கின்றனர்,’ என்றனர்.

The post தர்மபுரி நகர எல்லையில் ராமக்காள் ஏரியை அழகுபடுத்தி சிறுவர் பூங்கா அமைக்கப்படுமா? appeared first on Dinakaran.

Tags : Ramakal Lake ,Dharmapuri ,Krishnagiri road ,Public Works Department ,Dinakaran ,
× RELATED பொதுமக்கள் குறை தீர்க்கும் சிறப்பு முகாம்